இருட்டு மனிதர்கள்
சித்துராஜ் பொன்ராஜ்

by olaichuvadi

 

மகேஷ்வரனுக்குள் கடந்துபோன அந்தமாலை நேரம் ஆழ்ந்த நிசப்தங்களாலும், கூர்மையான முனைகளுடைய கூழாங்கற்களாலும் கட்டப்பட்டிருக்கிறது. அவர்கள் கொடுத்த படிவத்தின் முனைகளும் கூழாங்கற்களின் ஓரங்களைப்போலத்தான் கூர்மையாக இருந்தன.ஜேசன் இதைக் கேட்டிருந்தால் நிச்சயம் பளீர் வெள்ளை பற்கள் மின்னப் பெரிதாகச் சிரித்திருப்பான். என்ன சினிமாத்தனமாக பேசுகிறாய் என்று கேலி செய்திருப்பான். ஜேசனுக்குத் தமிழ் சினிமா என்றால் மிகவும் பிடிக்கும். சராசரி வாழ்க்கையிலும் ஜேசன் இத்தகைய சினிமாத்தனங்களை ஆழமாக ரசித்தான். அந்த ஒரு காரணத்தினால் அவனால் எல்லாச் சூழ்நிலைகளிலும் சிரிக்க முடிந்தது. ஆனால் மகேஷ்வரன் கேட்கும் எதிலும் ஒட்டிக்கொண்டிருக்கும் ஜேசனின் பெயரில்தான் கட்டிட நிழல்களில் ஒதுங்கி களவாடப்பட்ட காமத்தின் எச்சமாக துன்பமும் வலியும் மண்டிக்கிடக்கின்றன.

ரோச்சோர் சாலைக்கும் லிட்டில் இந்தியாவுக்கும் இடைப்பட்ட ஒரு கட்டிடத்தில் தன்னார்வ ஊழியர்கள் அந்த எய்ட்ஸ் பரிசோதனை மையத்தைத் நடத்தி வந்தார்கள். காலை வேளைகளில் பால்வினை நோய் சிகிச்சை மருந்தகமாகச் செயல்பட்ட கட்டிடம், செவ்வாய், வியாழன் சாயங்காலங்களில் இரண்டு மணி நேரத்துக்கும் சனிக்கிழமை மத்தியானங்களில் மூன்று மணி நேரத்துக்கும் மருந்தகத்துக்கு மிக அருகிலேயே பழைய சாமான்கள் விற்கும் சுங்கய் ரோடு வார இறுதி திருடர்கள் சந்தையைப்போல் திடீரென்று எய்ட்ஸ் பரிசோதனை மையமாகமுளைத்துக் களைக்கட்டத் துவங்கிவிடும். மையம் செயல்படும்போது யார் வேண்டுமானாலும் பெயர், அடையாள அட்டை எண், முகவரி போன்ற எந்த வித அடையாளங்களையும் கொடுக்காமல் தனக்கு எய்ட்ஸ் என்னும் தடுப்புச் சக்தி இழப்பு நோய் இருக்கிறதா என்று பரிசோதனை செய்து கொள்ளலாம். அரசாங்க மருத்துவமனைகளிலோ, காலையில் இயங்கும் மருந்தகத்திலோ, வேறெந்த தனியார் மருத்துவர்களிடமோ இந்தச் சலுகை இல்லை.எஹ்ச்.ஐ.வி எனப்படும் எய்ட்ஸ் கிருமி இருக்கிறதா என்று பரிசோதனை செய்து கொள்பவர்கள் தங்கள் முழு விவரங்களைக் கொடுத்தே ஆகவேண்டும்.

கூடத்துக்கு முன்னால் போடப்பட்டிருந்த மேசையில் அமர்ந்திருக்கும் தன்னார்வ ஊழியர்களிடமிருந்து வரிசை எண்ணைப் பலரும் வாங்கிக் கொண்டிருந்தார்கள். வரிசை எண்களைப் பெற்றுக்கொண்டு இருக்கைகளுக்கு வருபவர்களுக்கு மகேஷ்வரன் தன் முழங்கால்களை ஒரு பக்கமாகச் சாய்த்து வழிவிட்டான். அவர்களில் மிகப்பெரும்பாலானோர் ஆண்களாகவே இருந்தார்கள். நீள்சதுர வடிவத்திலிருந்த மருந்தகக் கூடத்துக்குள் வரிசையாகப் போடப்பட்டிருந்த கனநீல பிளாஸ்டிக் நாற்காலிகளில் சுமார் தொண்ணூறு பேர்கள் அமர்ந்திருந்தார்கள். ஆனால் அமர்ந்திருந்தவர்களில் ஒருவர்கூட மற்றொருவரை ஏறெடுத்துப் பார்க்கவில்லை. அவர்களில் கணிசமானவர்கள் நாற்காலிகளின் ஓரங்களில் அடுக்கப்பட்டிருந்த காதுமடிந்த பழைய சுகாதார அமைச்சின் மாதாந்திர சஞ்சிகைகளையும், விளையாட்டு இதழ்களையும் எந்த அக்கறையும் இல்லாமல் புரட்டிக்கொண்டிருந்தார்கள். மற்றவர்கள் கூடத்தின் அரையிருட்டில் கொட்டிய நவரத்தினங்களாய் மின்னிக்கொண்டிருந்த கைத்தொலைப்பேசித் திரைகளை விரல்களால் தேய்த்து அடுத்த பக்கம் அடுத்த பக்கம் என்று போய்க்கொண்டிருந்தார்கள். அவர்களில் யாரும் வெளியிலிருந்த யாரோடும் தொடர்பு கொள்ளவில்லை. வெறுமனே படங்களையும் செய்திகளையும்தான் புரட்டினார்கள். அந்தச் செய்கையில் ஏகோபித்த பெரும் தனிமையொன்று அப்பட்டமாகத் தெரிந்தது. சுவர்களில் பால்வினை நோயைப் பற்றி விழிப்புணர்வு ஊட்டும் சுவரொட்டிகள் தொங்கவிடப்பட்டிருந்தன. “ஒரே துணை உங்கள் பாதுகாப்பான வாழ்வுக்கு உறுதுணை” போன்ற வாசகங்களோடு.

மகேஷ்வரன் அந்தச் சுவரொட்டிகளிலிருந்தும் அவற்றில் பளபளப்பாய் மின்னிக்கொண்டிருந்த பால்வினை நோயின் வளர்ச்சியை விளக்கும் படங்களிலிருந்தும் தன் கண்களை வெறுப்போடு விலக்கிக் கொண்டான். அவ்வப்போது வரிசை எண்கள் அழைக்கப்பட சிலர் எழுந்து தூரத்தில் இருந்த மூன்று அறைகளில் ஒன்றில் புகுந்துகொண்டார்கள். மற்றவர்கள் அதே அறைகளிலிருந்து வெளியில் வந்து யாரையும் பார்க்காமல் விறுவிறுவென்று நடந்து மருந்தகத்தின் பெருவாசல் வழியாக இருட்டாகக் கிடந்த வீதிக்குள் வெளியேறினார்கள்.

தலைமை கணக்காய்வாளரிடம் சாக்குப் போக்குச் சொல்லி ஆறே முக்காலுக்கு வந்துவிட்டபோதும் மகேஷ்வரனுக்கு முன்னால் இன்னும் இருபது பேர் இருந்தார்கள். நிதி ஆண்டு முடியப்போகும் சமயம் என்பதால் அவர் முறைத்துக்கொண்டுதான் சரியென்றார். பரிசோதனை மையத்தை ஏழு மணிக்குத்தான் திறப்பார்கள். அதுவரைக்கும் மருந்தகத்தின் வாசலில் இருந்த இரும்பு ஷட்டர்கள் இறுக்கமாக மூடியிருக்கும். ஆறரை மணிக்கே மருந்தகத்தின் வாசலிலும் அருகில் இருந்த சீனன் காப்பிக் கடையிலும் பரிசோதனைக்கு வந்த மனிதர்கள் கூட ஆரம்பித்து விடுவார்கள். அவர்கள் சுவர்களில் ஒட்டப்பட்டிருக்கும் விளம்பரங்கள், கடந்துபோகும் கார்கள் இவற்றையெல்லாம் உன்னிப்பாகப் பார்த்துக் கொண்டிருந்தாலும், அவர்கள் தனிமையாக இருப்பதைக் கொண்டும், ஷட்டர்கள் அவ்வப்போது தீராத தாகத்தோடு பார்ப்பதைக் கொண்டும் அவர்கள் பரிசோதனைக்குத்தான் வந்திருக்கிறார்கள் என்று தெரிந்துகொள்ளலாம்.

பரிசோதனைக்கு ஆண்களோடு மட்டும் நிற்பது அசாதரணமான அனுபவம். பால்விட்டுக் கலந்த காப்பிபோல் உடல்நிறமுடைய ஆண்கள், ஸாட்டின் துணியின் மென்மையோடு தலைமுதல் பாதம்வரை சிவந்த மாம்பழத்தின் நிறமுடைய ஆண்கள், தந்தம்போன்று கடைந்து கடைந்து செய்யபட்ட உடம்புகளோடு ஆமை ஓடு போன்ற கிண்ணென்ற பிருஷ்டமும், கவசம்போன்ற மார்பும் தோள்களும் உடைய ஆண்கள், தலைமுடி நரைக்க ஆரம்பித்திருந்தாலும் கடந்தாலும் உடையின் லட்சணத்தாலும், நிதானத்தாலும் வசீகரமுடைய மத்திய வயது ஆண்கள், அசிங்கமான டீ சட்டையிலும், முக்கால் கால்சட்டையிலும் பீர் குடித்துப் பெருத்த தொந்தியோடும், தொங்கும் தாடைகளோடும் தலை பாதி சொட்டையான ஆண்கள். இந்த மாதிரி இடங்களுக்குப் பெண்கள் ஏன் அவ்வளவாக வருவதில்லை என்று மகேஷ்வரன் நினைத்துக்கொண்டான். ஆனால் அது உண்மையல்ல. அந்த மையத்துக்கு சமயங்களில் பெண்களும் வந்திருக்கிறார்கள். மகேஷ்வரனும் பார்த்திருக்கிறான். ஆனால் ஆண்களில் பலபேர் அப்படிவரும் பெண்களை ஓரிரு கணங்கள் மட்டும் பார்த்துவிட்டுத் திரும்பிவிடுவார்கள். இன்னும் கொஞ்சம் நேரத்துக்கு உறுத்துப் பார்ப்பவர்களும்கூட இந்த இடத்துக்கு வந்த காரணத்தை நினைவு கூர்ந்தவர்களாய் ஜெபம் செய்யும் பாவனையில் கைவிரல்களைச் சேர்த்து வைத்தபடி தலை கவிழ்த்துத் கொள்வார்கள். பெண்களுக்கு மட்டும் என்ன எய்ட்ஸ் வராதா என்று மகேஷ்வரன் தன்னுள் விவாதித்துக் கொண்டான். சுவரில் மாட்டியிருந்த மின்விசிறிகள் இன்னும் வேகமாக வெப்பக் காற்றை உமிழ்வதுபோல் சுழன்றன.
ஓராளுக்குப் ஐந்து நிமிடங்கள் என்று வைத்துக்கொண்டால், இருபது பேர்களை மூன்று அறைகளால் வகுத்து… ஆறு என்ற எண்ணோடு ஐந்து நிமிடங்களால் பெருக்கினால் இன்னும் அரைமணி நேரமாவது இங்கு காத்திருக்கவேண்டும். மகேஷ்வரன் ஜேசனை அழைத்துப் பேசலாமா என்று யோசித்தான். பின்பு வேண்டாம் என்று தானே முடிவு செய்து கொண்டான். அந்த முடிவில் அளவில்லாத காதல் இருந்ததாய் அவனுக்குப் பட்டது. இன்னும் கொஞ்ச நேரத்தில் அழைப்பார்கள், அவன் ஆட்காட்டி விரலின் முனையை ஊசியால் குத்தி சுண்டுவிரல் அளவே இருக்கும் வெள்ளைப் பரிசோதனைத் தாளில் அவனது ஒரு சொட்டு ரத்தத்தைச் சேகரித்துக் கொள்வார்கள். அதன்பிறது ஒரு இருபது நிமிடத்தில் தனக்கு நோய் உண்டா இல்லையா என்று தெரிந்துவிடும் அதற்குப் பிறகு ஜேசனோடு பேசிக்கொள்ளலாம்.

“நாற்பத்தி ஆறு.”

இரண்டாவது அறையிலிருந்து வெளியேறி கைகளில் பேனாவோடும் தாள்கள் சொருகிய கறுப்பு அட்டையோடும் நின்றுகொண்டிருந்த சீன இளைஞன் ஒருவன் மகேஷ்வரனை அழைத்தான். மடங்கியிருந்த அவன் கையின் தசைகளும் தோள்களும் வெள்ளை டீ சட்டையில் நன்கு முறுக்கேறியிருந்தது அந்த அரையிருட்டிலும் மகேஷ்வரனுக்குத் தெளிவாய்த் தெரிந்தது. இறுக்கமாக இருந்த ஜீன்ஸில் இளைஞனின் தொடைத்தசைகள் கடைந்த பளிங்குக்கற்களாட்டம் இருந்தன. அடுத்த எண்ணை அழைத்தும் யாரும் வராத லேசான எரிச்சலில் இளைஞன் பேனாவால் அட்டையை வேகமாக தட்டி உதட்டைப் பிதுக்கியபடி நின்றான். அவன் உதடுகள் நன்கு கனிந்த ஜப்பானிய பெர்ஸிம்மன் பழச்சுளைகள் போலிருந்தன. அவன் சிரித்தால் நிச்சயம் அது பளீர் வெள்ளையாகத்தான் இருக்கவேண்டும் என்று மகேஷ்வரன் நினைத்துக்கொண்டான். ஆழமாக மூச்சுவிட்டபடியே குறுக்கே கிடந்த கால்களையும், அலுவலக பெட்டிகளையும், நாற்காலி விளிம்புகளையும் ‘மன்னிக்கவம்’ என்ற வார்த்தையை சதா ஜெபித்துக்கொண்டே அகலக்கால் வைத்துக் கடந்து மகேஷ்வரன் அந்த இளைஞனிடம் போனான்.

“நாற்பத்தி ஆறு?”

“இம்… யெல்… நான்தான் நாற்பத்தி ஆறு.”

இளைஞன் மகேஷ்வரனைக் கொஞ்சம் வெறுப்போடு பார்த்தான். அந்தக் கோபம்தான் அவன் முகத்துக்கு எத்தனை அழகாக இருக்கிறது என்று மகேஷ்வரன் நினைத்துக் கொண்டான்.

“சரி, உள்ள வாங்க.”

சதுரமான அறை. கண்களைக் கூசச் செய்யும் விளக்குகளின் வெள்ளை வெளிச்சம். நடுவில் போடப்பட்டிருந்த மேசையின் ஒரு பக்கம் அந்த இளைஞன். கதவின் பக்கமாக மகேஷ்வரன். படிவத்தில் மகேஷ்வரன் பூர்த்தி செய்திருந்த பதில்களை இளைஞன் படித்துக்கொண்டிருந்தான்.

“இங்கே முன்னால வந்திருக்கீங்களா?”

சற்றுத் தயக்கத்தோடு: “இ-இல்லை.”

ஒருத்தருக்கு ஹெ.ச்.ஐ.வி இருக்கானு சரியா சொல்றதுக்கு உடலுறவு நடந்த நாளிலேர்ந்து பன்னிரண்டு வாரமாகும். இது தெரியுமா உங்களுக்கு.”

“ஆமா…இணையத்துல”

“நீங்க உடலுறவு வச்சு எத்தனை வாரமாச்சு?”

“இது பன்னிரண்டாவது வாரம்.”

மகேஷ்வரன் தெரிந்தே பொய் சொன்னான். ஆனால் அது உண்மையில் பொய் இல்லைதான். பன்னிரண்டு வாரங்களுக்கு முன்னால் அவன் நிச்சயமாக ஜேசனோடு உறவு வைத்துக் கொண்டிருப்பான்.

“ஒரே நபரோடா, அல்லது…”

உன்னைப் பற்றியெல்லாம் தெரியும் என்பதுபோல் இருந்தது இளைஞனின் பார்வை. மகேஷ்வரன் குரலைப் பலமாக செறுமியபடியே சொன்னான்…

“ஆமாம். நிச்சயமாக.”

இளைஞன் அவனது ஆள்காட்டி விரலை இரண்டு மூன்று முறை அழுத்தி பிடித்துவிட்டான். பின்பு ரத்தம் பாய்ந்து சிவந்திருந்த விரல்நுனியில் உறையிலிருந்து புதிதாய் எடுக்கப்பட்ட நகக்கண் அளவே இருந்த ஊசியை இறக்கினான்.

“இன்னும் இருபது நிமிஷங்கள்ல ரிசல்ட் தெரிஞ்சிரும். வெளியிலேயே இருங்க”
இளைஞன் மகேஷ்வரனுடைய கைவிரலைச் சுற்றிப் பிளாஸ்திரி சுற்றிவிட்டான்.
ஆனால் ஆண்களிடையேதான் அவனுடைய உண்மையான அடையாளம் அவனுக்குத் தெரிய வந்தது. அம்மாதான் நகரத்தின் மத்தியில் புரண்டு படுத்ததுபோலிருக்கும் குன்றின் அடிவாரத்தில் அமைந்திருந்த ஆண்கள் பள்ளியில் மகேஷ்வரனைச் சேர்த்துவிட்டாள். அது பணக்காரக் குழந்தைகள் போகும் பள்ளி. எப்படியாவது மகேஷ்வரனை அந்தப் பள்ளியில் சேர்த்துவிட வேண்டும் என்ற ஆதங்கத்தில் அம்மா அதிகாலை ஐந்தரை மணிக்கே பள்ளியின் வாசலில் வரிசை பிடித்து நின்றாள். இப்படிப்பட்ட நல்ல பள்ளிதான் தன் மகனை முழுமனிதனாக்கும் என்று அம்மா நம்பியிருக்கலாம். அவள் மிகப் பெரிய சாக்கடைக்கும் சாயம் போன பழைய அடுக்குமாடி வீடுகளுக்கும் நடுவே இருந்த தொடக்கப்பள்ளி ஒன்றில் உணவங்காடி வைத்து நடத்திக் கொண்டிருந்தாள்.

அம்மா சேர்த்துவிட்டப் பள்ளியில்தான் பின்னாளில் உயர்நிலை வகுப்புகளுக்குப் போனபோது மகேஷ்வரன் தான் யாரென்பதைச் சின்ன சின்னக் கதைகளாகப் நெய்து கொண்டான். பதினைந்து வயதில் உடற்பயிற்சி வகுப்பு முடிந்து கழிவறைக்குச் சென்று மறுபடியும் சீருடைக்கு மாறச் சோம்பல்பட்டதால் மாணவர்கள் வகுப்பறைக்கே வந்து எந்தவித வெட்கமுமில்லாமல் உடைமாற்றிக் கொள்ள உள்ளாடைக்குள் பருத்த கூம்புபோல் நின்ற அவர்களது ஆண்மையை மகேஷ்வரன் வாய்பிளந்து பார்த்ததும். பின்பு இரவில் தன் படுக்கையறையின் இருண்ட சுவற்றிலே அதே காட்சிகளைத் திரைப்படமாக ஓட்டியதும், பள்ளி பாடல் குழுவில் அவன் ஸோப்ரானோ என்ற உச்ச ஸ்தாயியில் பாடும் பாடகனாக தேர்வானதும், பள்ளி இறுதி வகுப்பில் மேடைக்குப் பின்னால் மகேஷ்வரன் கச்சேரிக்காக உடைமாற்றிக் கொண்டிருக்க அங்கு வந்த ஹாக்கி அணித் தலைவன் அவன் இடுப்பில் கைப்போட்டு வளைத்து அவன் கழுத்தில் முழுதாய் முத்தமிட்டதும், அதில் மகேஷ்வரனின் உள்தொடைகள் சூடேறித் தவித்ததும், பல்வேறு ஆண்கள் பல்வேறு சூழ்நிலைகளில் அவனுக்கு இல்லாத முலைகளைப் பிசைந்துப் பார்க்க முனைந்ததும், கடைசியாக ஆர்ச்சர்ட் ரோட்டில் நடந்த ஒரு புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது வெகுவாக குடித்திருந்த மகேஷ்வரனைப் பெருவிரைவு ரயில் நிலையத்தின் பின்னால் அழைத்துச் சென்று மிக மோசமான முதல் அனுபவத்தை தந்துவிட்டுச் சென்ற மலாய்க்காரக் கிழவனும் – எல்லோரும் இந்தக் கதைகளுக்கு மீண்டும் மீண்டும் எழுதப்படும் முடிவுரைகளானார்கள்.

ஜேசன்தான் மகேஷ்வரனது எல்லாக் கதைகளுக்கும் அர்த்தம் தந்தான். ஜேசன் ஆஸ்திரேலிய தந்தைக்கும் சிங்கப்பூரியளான சீனத் தாய்க்கும் பிறந்தவன். எளிதாய் ஆறடி உயரம் இருப்பான். மைக்கலாஞ்சலோவின் தாவீது சிலைபோல் உடலமைப்புக் கொண்டிருந்தான். பிளாரன்ஸ் நகரில் இருக்கும் அந்தச் சிலை போலவே. வெண்மணல் கொட்டிய கடற்கரையில் விழும் வெயிலைப் போல் வெள்ளை நிறம். அவன் கண்கள் தேக்கின் வண்ணத்தில் இருந்தன. நினைத்தபோதெல்லாம் சிரித்தான். அவன் சிரிப்பது சூர்யோதயம் போல இருந்தது. மகேஷ்வரன் இரண்டாண்டு தேசிய சேவை, பல்கலைக் கழகம் எல்லாம் முடித்துவிட்டு இளநிலை கணக்காய்வாளனாய் அரசாங்கம் சார்ந்த ஒரு நிறுவனத்தில் சேர்ந்த புதிதில் ஆண்கள் ஒருவரை ஒருவர் சந்திப்பதற்காக ஆர்ச்சர்ட் சாலையின் முக்கில் அமைந்திருந்த ஒரு கிளப்பில் ஜேசனைச் சந்தித்தான். அப்போது ஜேசனுக்குக் கல்யாணமாகி இரண்டு குழந்தைகள் இருந்தன. தனியாய் நின்று மதுவருந்திக் கொண்டிருந்த மகேஷ்வரனிடம் ஜேசன்தான் முதலில் வந்து பேசினான். அதன் பிறகு ஜேசனால் எப்போதெல்லாம் குடும்பத்தை விட்டு வர முடிந்ததோ அப்போதெல்லாம் ஜேசனும் மகேஷ்வரனும் எதாவது ஒரு மலிவான ஹோட்டலில் அறைகளை மூன்று மணி நேர வாடகைக்கு எடுத்துத் தங்கினார்கள்.
அவன் வேலை பார்த்த இடத்தின் கெடுபிடி கருதி மகேஷ்வரன் தன் பெயரையும் விவரங்களையும் ஹோட்டலின் பதிவேட்டில் எழுதத் தயங்குவான். ஜேசன் அதைப் பார்த்து பெரிதாகச் சிரிப்பான். தன் மனைவியுடன் மனம்விட்டுப் பேசி வருடங்களாகின்றன என்று ஜேசன் சொன்னான். அதை மகேஷ்வரன் அப்படியே நம்பினான். அவனுக்கும் பல்லாண்டுகள் கழித்து ஒரு பேச்சுத் துணை தேவைப்பட்டது.

“நாம ரெண்டு பேரும் கறுப்பு வெள்ளை பியானோ கட்டைகள் மாதிரியே இருக்கோம் இல்லையா, மகேஷ்?”

ஒரு நாள் மகேஷ்வரனின் கறுப்பான உடல்மீது முழுவதும் படர்ந்தபடி ஜேசன் கேட்டான். இருவரும் படுக்கையிலிருந்தபடியே தலை நிமிர்த்தி எதிரிலிருந்த ஆள் உயரக் கண்ணாடியில் தங்களைப் பார்த்துக் கொண்டார்கள்.

“நான்…ரொம்ப கறுப்பா இருக்கேனா, ஜே?” மகேஷ்வரன் சந்தேகத்தோடு கேட்டான். இதுவரைக்கும் மகேஷ்வரனிடம் யாரும் கறுப்பாய் இருப்பதைப் பற்றி உயர்வாகப் பேசியதில்லை. மகேஷ்வரன் பார்த்த திரைப்படங்களில் கூட கறுப்பான ஆண்கள் வெள்ளையான பெண்களைத்தான் விரும்பினார்கள்.

ஆனால் ஜே சொன்னான்: “இல்லை, உன் கருந்திராட்சை ஒயின் போன்ற நிறத்தைப் பார்த்துச் சொக்கித்தான் உன்னை நான் காதலிக்க ஆரம்பித்தேன்.”

“நான் எப்பவும் கீழ இருக்கேன். நீ மேல இருக்கே. அப்பனா நான்தான் நம்ம ரெண்டு பேத்துல பொம்பளையா?” என்று வேறொரு நாள் தனியாய் இருக்கும்போது மகேஷ்வரன் கேட்டான்.
ஜே இதற்கு நேரடியாகப் பதில் சொல்லவில்லை. மகேஷ்வரனது தலைமுடியைக் கொத்தாய்ப் பிடித்து அவன் தலையை திருப்பினான். பின்பு அவன் உதடுகளை வெறிவந்தவன்போல முழுக்கக் கவ்வி முத்தம் இட்டான்.

“இல்லை, நீ என் குதிரை. என் கறுப்புக் குதிரை. நான் விரும்புறப்ப எல்லாம் நான் சவாரி செய்யும் குதிரை”

“நாற்பத்தி ஆறு”

அதே இளைஞன் மறுபடியும் மகேஷ்வரனைக் கூப்பிட்டான். அவனை அமரச் சொல்லி கையிலிருந்த பரிசோதனைத் தாளைக் காட்டினான் அதில் பதிக்கப்பட்டிருந்த இரண்டு சதுரங்களில் ஒன்றில் மட்டும் சிவப்புக் கோடு தெரிந்தது.

“உங்களுக்கு ஹெச்.ஐ.வி இல்ல”

மருந்தகத்திலிருந்து வெளியே வந்து வாகன நிறுத்துமிடத்துக்குப் போகும் படிக்கட்டுகளில் ஏறும்போது மகேஷ்வரனுடைய கை லேசாய் நடுங்கிக் கொண்டிருந்தது. மூன்று மாடிகள் ஏறியதில் மகேஷ்வரனுக்கு சற்றே மூச்சிரைத்தது. நிறுத்தப்பட்டிருந்த பல்வேறு வாகனங்களின் மத்தியில் ஜேசனுடைய சாம்பல் நிற ஆல்டிஸ் காரை மகேஷ்வரன் தேடிக் கண்டுபிடித்தான். ஜேசன் ஓட்டுநர் இருக்கைக்குப் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்தான்.

“ரிசல்ட் வந்திருச்சு ஜே. என்னமோ என்னை மாதிரி ஒழுங்கங்கெட்டவன் கூட இருந்தா ஹெச்.ஐ.வி வரும்னு சொன்னியே ஜே. மறுபடியும் உன் குடும்பத்துக்கிட்டயே போறேன்னு சொன்னியே. பாத்தியா – இப்போ எனக்கு ஹெச்.ஐ.வியே இல்லனு நிரூபணமாயிருச்சு.”

“…”

“என்ன ஒண்ணுமே சொல்லமாட்டீங்குற. எம்மேல கோபமா ஜே?”

ஜேசன் இப்போதும் பதில் சொல்லாமல் அமர்ந்திருந்தான். அவன் கண்கள் அகலத் திறந்திருந்தன. வெள்ளெலியின் காதின் உட்புறம்போல் இளஞ்சிவப்பாய் இருக்கும் ஜேயின் நாக்கின் நுனி, மகேஷ்வரனது உடல் எங்கும் அணுஅணுவாய் சுவைத்த அதே நுனி கோணலாய் இருந்த வாயின் வழியாக லேசாக வெளித்தள்ளியிருந்தது. திடீரெனக் கடந்த வாகனத்தின் பேரொளியில் ஜேசனின் மெழுகுபோன்ற வெண்மை நிறம் கொண்ட கழுத்தில் பதிந்த கை விரல் தடங்கள் ஊதா நிறமாய்த் தெரிந்தன. மகேஷ்வரன் ஜேயின் கைத்தொலைபேசியை எடுத்துப் பார்த்தான்.

“காலைலேர்ந்து நெறைய பேரு உன்னை அழைச்சிருக்காங்க ஜே. உன் ஆபீஸ், மனைவி, இன்னும் நெறைய பேர்”

மகேஷ்வரன் ஜேசனின் விலையுயர்ந்த அலுவலக சட்டையின் காலரை நீவி விட்டு, லேசாய் கலைந்திருந்த கழுத்துச் சுருக்கை அசைத்துச் சரியாக்கினான்.

“நமக்குள்ள எந்த வகையான உறவும் இல்லைங்கிறதைச் சாக்கா வச்சு என்னை விட்டு போறேன்னு நீ சொல்லலாமா ஜே? நீ இல்லாம இந்தக் கறுப்பன் என்ன செய்வான் சொல்லு? அதனாலதான் உன்னோட அழகான கழுத்த அறுத்து உன்னை முழுசா என்னுடைவனா ஆக்கீட்டேன்.”
மகேஷ்வரன் கொஞ்ச நேரம் ஜேசனது பரந்த மார்பினில் ஆசைதீரப் புதைந்துகொண்டான். ஜேசனின் கழுத்தை சமையலறை கத்தியினால் காதிலிருந்து காதுவரை அறுத்த கோட்டில் ரத்தம் எப்போதோ காய்ந்திருந்தது.

மகேஷ்வரன் தன் கைத்தொலைப்பேசியைக் கால்சட்டை பைக்குள்ளிருந்து எடுத்து அம்மாவைக் கூப்பிட்டான்.

அம்மா வரும்வரை ஜேசனை அணைத்தபடியே இருட்டில் அமர்ந்திருந்தான்.

 

பிற படைப்புகள்

Leave a Comment