போலத்தான் இருக்கிறது; எனினும்…
நிலைகுத்தி நிற்கிறது பூமி – எனினும்
அச்சுத்தண்டில் ஓய்வின்றிச் சுழல்வதுபோல
முரலோசை கேட்கிறது.
நிச்சலனமாய்க் கிடக்கிறது ஊர் – எனினும்
கால்கள் நகர்வதுபோல அரவமும்
கைவழித்த வியர்வைபோல வாடையும்
சுற்றிலும் கவிகிறது.
ஸ்தம்பித்து விழிக்கிறது வீடு – எனினும்
அன்றாட அற்புதங்கள்போலச் சிரிப்பும்
அடங்காத ரகசியங்கள்போலக் கிசுகிசுப்பும்
காற்றில் அலைகிறது.
தன்னந்தனியாக நிற்கிறேன் நான் – எனினும்
நூறாயிரம் பேர்களை உரசுவதுபோலவும்
கோடானுகோடிப் பேர்களுடன் உசாவுவதுபோலவும்
காலம் கைகளைப்பற்றிக் குலுக்குகிறது.
கடைசி விருந்து
‘வரவிருக்கிறது கேட்டிராத கொடும் பஞ்சம்
வருமுன் காக்க’
சந்தை திரண்டு திணறியது
தேவைக்கும் தேவையின்மைக்குமாக
எல்லாரும்
வாங்கி வாங்கிச் சேர்த்துக் குவித்தார்கள்
உண்ண உடுக்க உல்லாசமாய்க் களிக்க
உதவுவனவெல்லாம்
சந்தை நீங்கி வீட்டில் அடங்கின
நானும் வாங்கிப்
பாதுகாக்கிறேன்
கருணையின் கூர்மிளிரும் வெட்டுக்கத்தியை
அன்பைக் கடைந்தெடுத்த கலப்படமில்லா நெய்யை
வாகாக ஒதுக்கும் கறாரான கரண்டியை…
எல்லாம் தீர்ந்து
எதுவும் கிடைக்காத நாளில்
சக மனிதர்களே
உங்களைச் சேதமில்லாமல் நறுக்கி
பக்குவமாக வதக்கி
கைபடாமல் எடுத்து விழுங்குவதற்காக….
அளவு
‘மல்லீப்பூ மொளம் பத்து ருவா’
சிறுகையால் சரமளந்து
கொஞ்சம் கொசுறும் விட்டுக் காண்பித்த
பூக்காரக் குழந்தையிடம் சொன்னார்:
‘இந்த முழத்துக்கா பத்து ரூபாய்?’
சரத்தை வாங்கி
நெடுங்கையால் துல்லியமாக அளந்து காட்டி
முறித்து வாங்கினார்,
நெடிய முழத்துக்கும் சின்ன முழத்துக்கும்
இடையிலான துண்டுச்சரத்தில்மட்டும்
மல்லிகைகள்
வாடியிருந்தன சோகம் தாளாமல்.
நம்ப மாட்டீர்கள்
எங்கள் புழக்கடைக்கு அப்பால்
காலிமனையில் அயனிமரம் இருந்ததா,
மரத்தின் உச்சியில்
நிறைய கிளைகள் இருந்ததா,
கவைமேல் காக்கைக் கூடு இருந்ததா,
கூட்டில் நான்கு முட்டைகள் இருந்ததா,
ஆகாயத்தை உரசிக்கொண்டிருந்த அந்த மரத்தை
நேற்று
வேரோடு பெயர்த்தார்களா,
அப்போதிருந்து
இடமிருந்து வலமாகச் சுற்றிய பூமி
வலமிருந்து இடமாகச் சுழலத் தொடங்கியிருக்கிறது என்பதைச்
சொன்னால் நம்ப மாட்டீர்கள்.