நீ ஏற்படுத்திக் கொள்கிற தூரத்தையே
நமக்கிடையிலான தூரமாக அமைத்து கொள்கிறேன்.
அது சில சமயம் ஒரு நீண்ட பாலத்தின் தூரமாகிறது.
வெளியூரில் நெருங்கிய தூரமாயிருப்பது சில நேரம்.
கப்பல் பயண தூரம் ?
அருகிலிருந்தும் மூன்றுநாள் சரக்கு ரயிலின் தூரமாயிற்று
சில நேரம் .
சரக்கு ரயிலின் தூரம்தான் பெருந்துயரம்
களைத்து உட்கார்ந்து கரிப்பிடித்து
அழுது வடிகிறது அது.
கடக்கவே இயலாத தேவதச்சனின் அணில்
பூமி துளைத்து சென்றடைந்த தூரம் ஒன்றும் உண்டு.
இப்போது தூரத்தை தூரம்… தூரம்… என்று கத்துகிறாய்
எல்லா தூரமும் நீ
தான் விரும்பி ஏற்படுத்திக் கொண்ட தூரம்தானே
செங்கொடியே ?
முதலில் அவரை அனுசரிக்க ஒரு தூரம் அமைத்தாய்
பின்பு இவரை அனுசரிக்க ஒரு தூரம் அமைத்தாய்
இடையில் உன் தாழ்வுணர்ச்சியொரு நெடுந்தூரம் அமைத்தது
நீ பார்த்துக் கொண்டிருப்பதெல்லாம் உன் தூரம்தானே அன்றி
என் தூரம் இல்லையே
நற்செள்ளையே ?
பயப்படாதே
உன் தூரம்தான்
உன் தூரம்தான்
அது
உன் தூரம்தான்
நீ சிறுகச் சிறுகக் கட்டியெழுப்பிய
உயரம்தான்
இப்போதுமுகம் மறைக்கும் அளவிற்கு வளர்ந்து
பெரிதாகியிருக்கிறது நீருற்றி கரைக்க இயலாத அளவிற்கு
அந்தச் சிறுவன்
நேற்று முன்தினம் இரவை தூக்கமின்மையில்
கடந்து கனரக லாரியில்
இங்கு வந்து கொட்டப்பட்டவன்
துரத்தப்பட்ட இரவு முகமெங்கும் அப்பியிருக்கிறது.
கொண்டை வாழையிலையை உங்கள் முன்னால் போட்டு
நீர் தெளிகிறான்
பாம்பு கொத்தியது போலே துடித்து
“தண்ணியை இப்படியா ஊற்றுவார்கள் ?”எனக் கேட்டு அவன்
அம்மையைத் திட்டுகிறீர்கள்
சாம்பாருக்கு நேரமாகிவிட்டதென
அவன் அப்பனைக் கேள்விகேட்கிறீர்கள்
சாப்பிட்டு முடிவதற்குள் சகோதர சகோதரிகள்
அத்தனை பேரையும் சாகடித்து விட்டுத்தான் எழும்புகிறீர்கள்
நீங்கள் உண்ட சோறு
அவனுக்கு வழங்கிய முதல் ஆயுதப் பயிற்சிக்கு
நன்றி கூற
உங்களை இப்போது பின்தொடரத் தொடங்குகிறது
துரத்தப்பட்ட அவனது இரவு.
முந்தைய படைப்பு