
பற்றிக்கொண்டது அது
பற்றிக்கொண்டது அது
எனினும்
பற்றிக்கொள் அதனை
என நான் சொல்லத் தயங்குகிறேன்.
எனினும்
எளிமையாய் நீ அதனைக்
கடந்து செல்லவிடமாட்டேன்.
பற்றிக்கொண்டேயாக வேண்டியது அது
எனினும்
பற்றிக்கொள் அதனை
என நான் சொல்லத் தயங்குகிறேன்.
நான் யார்? என் பேச்சை
-எவர் பேச்சையும் தான் –
நீ கேட்டு ஆகாது அது.
நான், நீ அற்றதுஅது
ஆகவேதான்
பற்றிக்கொள் அதனை என
நான் சொல்லத் தயங்குகிறேன்.
பார், கவனி
நான், நீ அற்ற வெளியில் நின்றபடி
அது ஒன்றேதான் வழி என்பதையும்
எப்படி என்றறிய முடியாத ஒரு படியில்
நான், நீ அற்ற வெளியில் நின்றபடிதான்
தனிப் பெரும் கருணை ஒன்றால்;
நீ பார்த்ததையும் கவனித்ததையும்
எண்ணிப்பார்!
எந்த எண்ணமுமே தொலைந்து
பற்றிக்கொள்ளும் அதனை!
முழுமை எனும்…
கூடியிருப்போரும் பிரிந்திருப்போரும்
ஒரேவகைத் தவறுகளையே செய்கிறார்கள்
ஒரேவகைக் கொலைகளையே!
கூடிவாழ்வதாய் எண்ணியே
பிரிந்துவாழும் மூட மனிதர்கள்!
முழுமை எனும்
புனிதநிலையிலிருப்பவன்தான்
எல்லோருடனுமிருக்கிறான். எவருடனும்
இல்லாமலுமிருக்கிறான்.
அவனால் மட்டுமே
-இல்லை, இல்லை –
அந்தப் புனிதநிலையால் மட்டுமே,
வாதையில் உழன்றுகொண்டிருக்கும் வாழ்வு
காக்கப்படுவதைக் காண்பதற்கான
பரிவும் பார்வையும் நிலவுகிறது பூமியில்!
நிலவும் கருணையின்
இரகசியம் இசைக்கின்றன,
பூமியும் அண்டமும்:
“தாய்மை/தந்தைமையும், குழந்தைமையுமே
உறவு என்றானபின்
மனிதர்கள் எல்லோரும்
ஒரே குடும்பம் என்றானபின்
எந்தப் பொருள்கொண்டு
பிரிக்கமுடியும் மனிதர்களை?”