உமையே அம்மா
தனது
முலைக் காம்புகளை
கடு வனம் ஒன்றில் தொலைத்து விட்டு
அலைந்து கொண்டிருக்கிறாள் உமை.
உமை போன பின்ஆண்மை இழந்ததை முழுதுமாய் உணர்ந்து
கேவிக் கொண்டிருக்கிறான் அர்த்தநாரி.
சாகாவரம் பெற்ற காம்புகளிலிருந்து
கசிகிறது மொத்த வனத்துக்குமான
கருணைப் பெரும் நீரோடை.
மின்மினிகள் நீரோடையிலிருந்து
தாய்ப்பால் பருகி பறக்கின்றன ஒளிக்கு.
உறைந்த நீரோடையை இலைகொண்டு மெல்லச் சீவி
எல்லா உயிர்களுக்கும் பால் ரொட்டி
எடுத்துச் செல்கிறாள் வனப்பேச்சி.
உயிர் முட்ட உண்டு விட்ட
உயிர்களின் அன்பிலிருந்து இரு துளி
உமையின் முலைக் காம்புகளாயின.
குதலைச் சிறு சிவனுக்கு
அமைதியாக பால் தரத் தொடங்குகிறாள் உமை.
பால் கவிச்சியோடு படைக்கப்பட்டுவிட்டது
பரம், அப்போது எப்போதைக்கும்.
சுடரில் அமர்ந்து
சுடரில் அமர்ந்து
இருளை கவனிக்கிறது
சகோரப் பறவை
அதன் ரொட்டித் துண்டு
நிலவின் ஒளி
தரையில் கிடக்கும்
ரொட்டித் துண்டை
அது விரும்புவது இல்லை
வெளியில் பொங்கும் ஒளி தான்
பசியைத் தூண்டுவதாக
அது உணர்ந்து சொல்கிறது
நிலத்தில் கிடக்கும் ஒளி
அழுகிப் போன ஒன்று என்று
அது உணர்ந்து வாழ்கிறது.
அது சொல்கிறது
நிலவை அடைதல் என்பது
அதன் ஒளியை அடைதல்
அவ்வளவே
முந்தைய படைப்பு
2 comments
மிகச் சிறந்த படைப்புகளை கொண்ட இதழ்
இரண்டாவது கவிதையில் வருகிற “சகோரப் பறவை” எதனைக் குறிக்கிறது கவிஞரே?