
பீர்பாலின் ஆமைகள்
1
அக்பருக்கு சந்தேகம்…
ஏழைகளை
எப்படி நடத்தவேண்டும்?
வணிகர்களோடு
எப்படிப் பேச வேண்டும்
பீர்பால்?
முதலில்
பூவாளியை எடுத்து
செடிகளுக்குத் தண்ணீர் ஊட்டினார்
பீர்பால்.
இரண்டாவதாக
மௌனமாக
இருந்தார்.
2
நெஞ்சுக்கு நெருக்கமாக
நிதமும் ஒரு மலரை
அணிய விரும்புகிறேன்
நவரத்தின மந்திரிகளே
உங்களின் சிபாரிசு என்ன?
கேட்டது அக்பர் பாதுஷா.
தாமரை – திருவின் உறைவிடம்
சூர்யகாந்தி – சூர்யத் தோழி
ரோஜா – மலர்களின் ராஜா
சாமந்தி – ஏழை ரோஜா
அல்லி – ஏரியின் செல்லம்
மல்லிகை – மன்மதம்
முல்லை – தேர்கொண்ட பூ
…………
…………
ஆளுக்கொரு மலரோடு
அவை வந்தனர்.
நத்தை கொண்டுவந்தார்
பீர்பால்.
அதன் ‘அமைதி’யைச் சூடிக்கொண்டார்
அக்பர்.
3
பீர்பால்
வீட்டில் மூன்று ஆமைகள் வளர்த்தார்.
அவை அவரை
அறிவூட்டி வளர்த்தன.
அந்த அறிவு சொல்ல
மூன்று ஆமைகளையும்
யமுனையில் நீந்த விட்டுவிட்டார்.
அக்பர்
மூன்று புறாக்களை
வானில் பறக்கவிட்டார்.
4
‘பீர்பால்
இது என் ஆசைக்குதிரை
நன்கு வளர்த்து வாருங்கள்’ எனக்
கொடுத்தார் அக்பர்.
‘மன்னிக்க வேண்டும் பாதுஷா
உங்கள் ஆசையை
நான் எப்படி வளர்க்க முடியும்’ என்றார்
பீர்பால்.
‘ஆம்
என் தாகத்துக்கு இன்னொருவர்
தண்ணீர் குடிப்பது
எங்ஙனம்?
மேலும்
என் உதையின் பொருள்
பீர்பாலுக்கு
எப்படி விளங்கும்?’என்றது
அக்பரின் ஆசை.
அக்பருக்குப் பேராசைதான்.
5
பீர்பால் செய்யாத குற்றத்துக்காக
ஒரு மூட்டை உப்பைக் கழுவி
சுத்தமாக்கும் தண்டனை அளித்தார்
அக்பர்.
மறுநாள்
வெறும் சாக்கோடு
அவைக்கு வந்தார் பீர்பால்
எங்கே உப்பு?
உப்பு அதன் தவறுகளோடு
இருக்கச் சம்மதித்துவிட்டது
அரசே.
அக்பர் புன்னகைத்தார்.
பீர்பால் செய்யாத
தவறும் புன்னகைத்தது.
6
அக்பர் பாதுஷா கேட்டார்…
‘யமுனை அழுகிறது’ என்று
என் மனைவி சொல்கிறாள்.
நாட்டில்
எனக்குத் தெரியாமல்
என்ன நடக்கிறது பீர்பால்?
இமையம் என்கிற பிறந்த வீட்டிலிருந்து
வங்கம் என்கிற புகுந்த வீட்டுக்கு
யமுனை செல்கிறது
அதனால் அழுகிறது அரசே.
உண்மை சொல்லுங்கள் பீர்பால்.
தெய்வக் குற்றம் ஏதாவது நடந்திருக்கும்
அதனால்
யமுனை அழுதிருக்கும்
நேர்ச்சை அளித்துவிடலாம் அரசே.
பீர்பால்…
நான் கேட்டது ‘உண்மை’.
உங்கள் மனைவிதான்
கண்ணீருக்குத் தெரியாமல் அழுகிறார்.
அவர் மனதைத் தீர விசாரித்து
சமாதானம் செய்யுங்கள்
அரசே.
7
மொத்த பற்களும் உதிர்ந்து
ஒற்றைப் பல் மட்டும் மீந்திருக்கும்
விநோதக் கனவுகண்டார்
அக்பர் பாதுஷா.
‘உங்கள் உறவினர்கள்
உங்களுக்கு முன்
இறப்பர்’ எனக் கனவுப்பலன்
சொன்னான்
அரண்மனை நிமித்திகன்.
அக்பர் கோபத்தில்
அரண்மனை சிவந்தது.
நிமித்திகனுக்குக்
கசையடிப் பரிசு.
பீர்பாலும்
அதையேதான் சொன்னார்
அவருக்கோ பரிசு.
ஆனால், இப்படி…
‘அரசே
உறவினர்களைக் காட்டிலும்
உங்களுக்கு ஆயுள் அதிகம்.’
8
ஒரு குழந்தைக்கு
இரு தாய்கள் உரிமைகோரும் கதை.
பீர்பால் தலையீடு இல்லாமல்
நீதி வழங்க நினைத்து
கதையில் இருந்து
அவரை வெளியேற்றினார்
அக்பர் பாதுஷா.
தர்பார் தொடங்கியது…
‘இது என் குழந்தை கிடையாது’ என்றாள்
உண்மைத் தாய்.
‘என் குழந்தையும் அல்ல’ என்றாள்
பொய்த் தாய்.
‘இவர்கள் என் தாய் இல்லை’ என்றது
குழந்தை.
இது
அக்பர் எதிர்பாராத குழப்பம்; திருப்பம்.
சுற்றும்முற்றும் கதைக்குள் பீர்பால் இல்லை.
வேறு வழியின்றி
அவரைக் கதைக்குள் அழைத்தார்கள்.
‘கதையை இரு துண்டாக்குங்கள்’ என்றார் பீர்பால்.
‘அய்யா இது என் குழந்தை’ என
பார்வையாளர் பக்கம் இருந்து வந்தாள்
கதை எழுதியவள்.
‘ஆகா அற்புதம்’ என பீர்பாலைப் பாராட்டி
பரிசில் வழங்கினார் அக்பர்.
பீர்பாலிடம் இருந்து
கதைக்கு சன்மானம் பெற்றுக்கொண்டாள்
குழந்தையின் தாய்.
தர்பார் முற்றிற்று.
கனகமணிக்கொலுசு
நடிகை கனகா
ஒருகாலத்தில் உச்ச நட்சத்திரம்.
16-வது வயதில் ‘கரகாட்டக்காரன்’ படம் மூலம்
475 நாட்கள் திரை கண்டவர்.
இவர் தாய் நடிகை தேவிகா
சிவாஜி – எம்.ஜி.ஆரோடு திரை பகிர்ந்தவர்.
மாங்குயில்
மல்லிகைமொட்டு
கனகமணிக்கொலுசு
கிளிப்பேச்சு… என
தேவிகா சொத்துக்கு ஒரே வாரிசு
ஒரே மகள் கனகா.
அவருக்கிருந்த ஒரே வாழ்வில்
34-வது வயதில் திருமணம் செய்யாமல்
34-வது வயது 16-ம் நாள் விவாகரத்து செய்தார்.
இதை அவரே உறுதிசெய்தார்.
பூனைகளோடு வாழ்ந்தார்
புற்றுநோய் வதந்தியோடு வாழ்ந்தார்.
கனகா அப்பா தனது 40-வது வயதில்
கனகா அம்மாவுக்குத் துரோகம் செய்தார்.
கனகா தனது 40-வது வயதில்
அதற்கு நியாயம் கேட்டார்.
சந்தைக்கு வந்த கிளி
தன்னைப் பூட்டிக்கொண்டு
பத்திரிகைகளை உலகை இம்சித்தார்.
ஒருமுறை ஆலப்புழாவில் இறந்தும்போனார்.
அதிசயமாக
நடிகர்கள் சங்கத் தேர்தலில்
வாக்குச் செலுத்த வந்தார்.
பெயர் இல்லை என்றார்கள்
செல்லாத வோட்டு போட்டார்.
அது எண்ணிக்கையில் சேர்ந்தது.
உயர்திணைப் பறவை
சகுந்தலை என்றால்
பறவைகள் புடைசூழ வளர்பவள் என்று பொருள்.
புடைசூழ் பறவைகள் மத்தியில்
உண்மைப் பறவை சகுந்தலை மட்டும்தான்
அதுவும் உயர்திணைப் பறவை.
தாய் பிரிந்த துயர்
காதல் பிரிந்த துயர்
மகன் பிரிந்த துயர்
வாழ்வு பிரிந்த துயர்
யாவற்றையும் பறந்து கடக்கிறாள் பறவைபோல
தண்டகாரண்யத்தை
தனித்த வானத்தை
சலசலக்கும் நதியை.
பலமுறை
மழைமேகம்போல பறந்து கரைய நினைத்தாள்
ஆனால்
ஒரு மோதிரத்தின் எடை தாளாமல்
கீழே
கீழே
வருகிறாள்.
துஷ்யந்த சாபம்
சகுந்தலைக்கு காவிய சோகம்.
காதல் ஒரு பெண்ணுக்கு ஒளியூட்டும் என்றால்
சகுந்தலைக்கு இருளூட்டியது.
இருள் தின்று
துயர் தின்று
மாலினி ஆற்று மீனாகப் பரவியவள் சகுந்தலை.
கணையாழி
சிலம்பு
மோதிரம்
எல்லா அணிகலன்களும்
பெண் துயரில் உருவான விலங்குகள்.
அதோ
திசைகளை அழைத்துக்கொண்டு
மோதிரம் போன்ற காற்றுவளையம் புக
தன்னந்தனியே ஒரு பறவை பறக்கிறதே
அது
பறவையல்ல சகுந்தலை
சகுந்தலை அல்ல அவள் துயர்
துயர் அல்ல அவள் வாழ்வு
ஆம்
பெண் வாழ்வு.
பாதை
எஜமான் வீட்டு நாயை
காலை மாலை
நடைப்பயிற்றுவிப்பது
அவன் வேலை.
நாயோ
மூர்க்கத்தில் திளைப்பது.
மழைக்கால
நடைப்பாதை ஓரத்தில்
தேங்கி இருந்தது
ஒரு சிறுகுட்டை.
அதாவது
அவனது பால்யத்தில்
தேங்கித் தளும்பிய குட்டை.
‘வா…
வந்து தப்பலங்கொட்டு’ என அழைக்கிறது
அவன் பால்யப் பாதங்களை.
மூர்க்க நாயின் கழுத்துக் கயிற்றை
காற்றில் கட்டி
‘அ’சத்தியத்தில் முடிச்சிட்டுவிட்டு
ஓடுகிறான்
பால்யக் குளம் நோக்கி
வயது குறைந்தபடி.
குளம் குதூகலிக்க
பிஞ்சுப் பாதங்கள் நனைந்து களிக்க
தண்ணீரில் மகிழ்ச்சி அரங்கேறுகிறது.
தெறித்த
ஒரே ஒரு மகிழ்ச்சித் துளி
மூர்க்க நாய் மீது பட்டுவிட
அதுவும் குட்டிப் பாலகனாகி
பால்யத்துக்குள்
தாவித் தாவிக் குதிக்கிறது.
ஈரத்தைத் துடைத்ததும்
பெரியவனாகிவிட்டான்.
‘அ’சத்தியத்தில் இருந்து
முடிச்சை அவிழ்த்ததும்
மூர்க்கநாயாகிவிட்டது
குட்டிப் பாலகன்.
இதோ
ஒருவரையொருவர் மூர்க்கமாக
இழுத்துக்கொண்டு
ஒருவருக்கொருவர் மூர்க்கமாகத்
திமிறிக்கொண்டு
அவர்கள் போய்க்கொண்டிருப்பது
சத்தியத்தின் பாதை.

எரிப்பந்து
அன்பே
கடல் பார்க்கும்போது
எனைப் பற்றி என்ன நினைப்பாய்?
பயணத்தைப் பரிசாகத் தர நினைப்பேன்
கூடவே குட்டிப் புயல்களையும்…
அவை உனக்கு எனை நினைவுப்படுத்தும்.’
நட்சத்திரம் பார்க்கும்போது
என் நினைவு என்னவாக இருக்கும்?
‘உன் கனவுகளுக்கு கிரீடமாக்க நினைப்பேன்
கூடவே சில எரிக்கற்களையும்…
அவை என்மீது நீ விளையாடும் எரிப்பந்து.’
பனித்துளிப் பார்க்கும்போது
எனை நினைப்பாயா?
அதன் குளிர்ச்சியை உன் முலைக்குச் சூடுவேன்
கூடவே சில சில்வண்டுகளையும்…
எனைப்போல அவை உன் புகழ் பாடும்.’
மேகம் பார்க்கும்போது
எனைப் பற்றிய உன் நினைவு என்ன?
‘பஞ்சுப்பொதியாக்கி தலையணை தருவேன்
கூடவே ஒரிரு துர்சொப்பனங்களையும்…
அப்போதெனைக் கட்டிக்கொண்டு உறங்குவாய்.’
நீர்த்தாவரங்கள் பார்க்கும்போது
நீ சொல்லும் என் நினைவு என்ன?
‘உன் உள்ளங்காலுக்கு அதன் கூச்சம் பூசுவேன்
கூடவே சில நியாயங்களையும்…
அவை எனை நோக்கி உனை இழுத்துவரும்.’
உதிரும் இலை சொல்லும் என் நினைவு என்ன?
‘காற்றுக்கு வலிக்காது உனைத் தாலாட்டுவேன்
கூடவே சில கண்ணீர்த்துளிகளையும்…
அதைத் துடைக்கும் உன் கரம் எனைத் தீண்டும்.’
ரோஜாப் பூ பார்க்கும்போது
உனக்குள் நான் என்னவாக மலர்வேன்?
‘முட்கள் எனக்கு இதழ்கள் உனக்குத் தருவேன்
கூடவே சில சுகந்தங்களையும்…
என் ஆன்மா மீது அதைப் பூசுவாய்.’
மரணம் வரும் நேரத்தில்
என் நினைவு இருக்குமா?
‘நீதான் என் மரணம் என நினைவிருக்கும்
கூடவே சில ஆதங்கங்களைத் தருவேன்…
எனை ஒருமுறை உடலாரத் தழுவும்
ஏக்கம் தரும் அது உனக்கு.’
வேகமாக, ‘அ‘வட்டமாக
1
கடல் தாண்டுகிறது
தனிமையில் ஒரு பறவை.
தண்டவாளத்தில் சீறிப்பாய்கிறது
தனிமையில் ஒரு ரயில்.
இலையில் இருந்து விழுகிறது
தனிமையில் ஒரு துளி.
தனிமையில் இருந்து சொட்டுகிறது
தனிமையில்
ஒரு தன்னந்தனிமை.
2
நடவுக்கு
வரப்பு கழிக்கும் அப்பா
வழிக்கிறார் நெற்றி வியர்வை.
அது
விழுகிறது
காயசண்டிகையில்.
3
நேற்று ஓர் ஊசித் தட்டானைச்
சந்தித்தேன்
இன்று இன்னோர் ஊசித் தட்டானைச்
சந்திக்கிறேன்.
நாளை வேறோர் ஊசித் தட்டானைச்
சந்திப்பேன். இது நிச்சயம்.
எனக்குத்தான்
நீர்முள்ளிப் பூவாக
மாறத் தெரியுமே.
4
தெரியவில்லைக்குப்
பக்கத்தில்
வேறொரு தெரியவில்லை
இருக்கிறது.
உண்மையான ‘தெரியவில்லை’
அதுதான்.
5
சுடுக்காட்டுப் பூக்கள்
மத்தியில்
ஒரு தேனியைப் பார்த்தேன்.
‘தேன் எடுக்க வந்தேன்’ என்றது.
அதன் காலில்
தேன் மகரந்தங்கள்.
6
ஆழங்களுக்கு மட்டுமே
உயிருண்டு.
நீயும்
நானும்
அதில் இருந்து வெளிவந்தோம்
நனைந்த சூரியன் போல.
7
குடைக்காளான் கால் அருகில்
ஒரு குட்டிக்காளான்
முளைக்கிறது.
வெயில் மழை பற்றி
அதற்கு என்ன கவலை
அதுதான் அப்பா இருக்கிறாரே.
8
ரெட்டைப் பனையில்
முனி இருக்கிறார்.
உருமநேரத்தில் அந்தப் பக்கம்
போகாதே.
அவரது காலுக்கு
சிவப்புத் துணி கட்டிவிட்டேன்.
‘பொடி சுடுது’ என்று
கால் கொப்புளங்களை ஊதி
ஆற்றிக்கொண்டிருந்தார்.
9
இடிவிழுந்து
தலை கருகிய புளியமரம்
பார்த்தபோது,
எலிசபெத் பெரியம்மா
தலையில்
மண்ணெண்ணெய் ஊற்றி
நெருப்பு வைத்துக்கொண்ட
கதை சொன்னாள்
சிரித்தபடி.
10
வட்டங்களை முடுக்கும்போது
பூமி சுற்றுகிறது
அல்லும்பகலுமாக
வேகவேகமாக
ஆசுவாசமாக
சமயங்களில் ‘அ’வட்டமாக.