கதிர்பாரதி கவிதைகள்

by olaichuvadi

 

நெற்றி சேராத சல்யூட்

விலங்கிட்ட கைகள்
பாதுகையற்ற கால்கள்…

காவலர் இருவர் கூட்டிப்போகிறார்கள்
அந்தக் கைதியை. 

அவன்
முகத் தசை இறுகிவிட்டது பாறையாக.
பாயக் காத்திருக்கும் தோட்டாக்கள் போல்
கண்கள் முன்னோக்க
அவற்றின் ஓரங்கள்
கசிந்திருக்கின்றன.

காதல் மனையாள்
பிஞ்சு சிசு
பிராயம் மூத்தப் பெற்றோர்
………….
………….

அவன்
யாரையும் தேடவில்லை.
திரும்பி ஏறெடுக்கவும்
மனம் துணியவில்லை.
மீண்டும்
வாழ்க்கைக்குள் திரும்பிவிட முடியாத
தொலைவு நோக்கி
போய்க்கொண்டிருக்கிறான். 

ராஜா
டேய் அண்ணா
எனக்கு மிகவும் கலக்கமாக இருக்கிறது.
என் பக்கம் கொஞ்சம் திரும்பு.

நெடுநேரம்
உனக்கென ஒரு `சல்யூட்`டை
கையில் வைத்துக்கொண்டு
நிற்கிறேன்.

ஒன்றுமில்லை என்று ஒன்றுண்டு

உன்
தலையை ஒருமுறை
தொட்டுக்கொள்ளட்டுமா?

ஆணியிடம் சுத்தியல் கேட்டது.

உன்
இதயத்தில் ஒருமுறை
இறங்கிக்கொள்ளட்டுமா?

மரத்திடம் ஆணிக்கூர் கேட்டது.

உன்
வயிற்றுக்குள் ஒருமுறை
புகுந்துகொள்ளட்டுமா?

பூமியிடம் மரம் கேட்டது.

உன்
கர்ப்பத்துக்குள் ஒருமுறை
அசைந்துகொள்ளட்டுமா?

பால்வெளியிடம் பூமி கேட்டது.

உன் ரகசிய வெளிச்சத்துள் ஒருமுறை
மிதந்துகொள்ளட்டுமா?

பிரபஞ்சத்திடம் பால்வெளி கேட்டது.

உன்
சூன்யத்துக்குள் ஒருமுறை
சுற்றிக்கொள்ளட்டுமா? 

`ஒன்றுமில்லை`யிடம் பிரபஞ்சம் கேட்டது. 

இப்படித்தான்
ஒன்றுமில்லையின் மீது
ஓர்
ஆணி அடிக்கப்பட்டிருக்கிறது.

எதிர் நடை அல்லது பூமிக்கு வெளியே நடப்பவன்

எல்லாவற்றுக்கும்
எதிர்த் திசையில் நடக்கும் ஒருவன்
இருக்கிறான்.
அவன்
எல்லாவற்றில் இருந்தும்
வெளியேறி நடக்கின்றான்.

காற்றில் இருந்து
வெளிச்சத்தில் இருந்து
ஒலியில் இருந்து
அமைதியில் இருந்து.

ஒரு முறை
மழைத் துளிக்கும் எதிரேகூட
வழுக்கிக்கொள்ளாமல் நடந்தான்
……….
………..
கைகள் கடுகி வீசி வீசி.

அவன்
நடையில் அத்துணை விரைவு
வார்த்தையில் அத்துணை வீச்சு.
அவன் திரும்ப வேண்டும் என்றுகூட இல்லை
கொஞ்சம் நின்றுவிட்டால் போதும்.
ஆனால்
நடக்கின்றான்.

……………

……………
அய்யய்யோ
பிடியுங்கள்
பிடியுங்கள்
அவன்
பூமி உருண்டைக்கு வெளியே போய்
நடக்கின்றான்.

பிறப்புத் திட்டம்

உன்
மூதாதையரிடம் இருந்து
முன்னோர் பிறந்தனர்.

உன்
முன்னோரிடம் இருந்து
முப்பாட்டனும் முப்பாட்டியும்
பிறந்தனர்.

உன்
முப்பாட்டன்களுக்கும்
முப்பாட்டிகளுக்கும்
பிறந்த
பூட்டன் பூட்டிகள்
உன்
பாட்டன் பாட்டிகளைப்
பெற்றெடுத்தனர்.

தாத்தாக்களும்
உன்
அம்மை அப்பன் பிறந்ததும்
அவ்வாறே.

உன் வரைக்கும்
அறுபடாத சங்கிலிக் கண்ணி
ஏனென்று யோசித்தாயா?

ஆமாம்
உன் குழந்தையை
நீ பெற்றெடு.

அதுசரி…
பிறகு எதற்காகப் பிறந்தாய் என
நினைக்கிறாய்?!

கோட்டுச் சித்திரக் குறிப்புகள்

ஒரு
கிடைமட்டக் கோடு.
அதை
குழந்தைகள் சக்கரமாக்கி
விளையாடுகின்றனர்.

அண்ணன்
இருசக்கர வாகனத்துக்கு
ஹேண்டில் பார் ஆகுமென்று
எடுத்துக்கொண்டான்.

வீட்டின்
நிலைப்படி மிதிக்கட்டை ஆக்கினார்
அப்பா.

அம்மாவுக்கு
எப்போதும் அதுதான் ஸ்டவ் லைட்டர்.

சித்தப்பா
நிமிர்ந்தகோடு போல அசைந்துவருவார்
சித்தி அவரின் இணைக்கோடு.

வெள்ளெழுத்துக் கண்ணாடியாக
வனைந்துகொண்ட தாத்தா
மிச்சத்தை
கைத்தடியாக்கி ஊன்றிக்கொண்டார்.

செவ்வகக் கண்ணாடிக் கோட்டுக்குள்
நுழைவதும்
வெளியேறுவதுமாக இருக்கின்றனர்
உறவினர்கள்.
அவர்கள் கைகளில்
மலர்ந்த நீள்வளையக் கோடுகள்.

இறுதிக் குழியில்
ஒரு கோட்டைப் புதைத்து
வீடு வந்தால்
எல்லோர் காலடியிலும் கிடக்கிறது
தீரவே தீராத
அவரவர் கோடு.

ஈரம்

நதி குறித்து
தக்கையிடம் கேட்டறிவது
பிழை.

கரைகளிடம் கேட்பதும்
பிழையோ பிழை.

புனல் ஓடி கழிந்த
ஊற்று மணல் சொல்லும்
நீரரவம்
வாழ்ந்த கதை.

கரையில் உடைவது
ஈமக் கலயம்.
நீரில் மிதக்கும்
மணமாலை.

இன்னாத் துளி

ஆறுதல் சொல்ல
ஒரு கண்ணீர்சொட்டை
தூக்கிக்கொண்டு வந்தேன்.

அது
தவறுதலாக
ஒரு நொடி முன்னரே சொட்டிவிட்டது.
நீயும்
ஒரு நொடி பின்னால்
ஆறுதல் அடைந்துவிட்டாய்தான்.

தவறான நொடி மீது
பொருத்தம் இல்லாமல்
சொட்டிவிட்ட கண்ணீரை
உலரவைத்து
கடவுள் ஆனார்

நம் 
கடவுள்.

உங்களை உங்களுக்கு தெரியுமா?

நேற்றைய
ஒற்றையடிப் பாதை.
தனித்தப் பொடிநடையில்
முதன்முதலாக எனைப் பார்த்தேன்…

`அட
இதுதானா நான்?`

`ஓ
உங்களுக்கு
உங்களைத் தெரியுமா?!`

`தெரியுமே…
இல்லையில்லை
அதிகம் எல்லாம் தெரியாது
கொஞ்சம் நாள்
பழகியிருக்கிறேன்
கத்தி கூர்மை மீதே
ஊருமே எறும்பு
அந்த அளவு’.

ஏவல்

ஒரு
சின்னஞ்சிறிய பறவை பறக்கிறது
ஒரு
பென்னம்பெரிய வானம்
குனிந்து பார்க்கிறது.
ஒரு
சின்னஞ்சிறிய பாதம் குழைகிறது
ஒரு
பென்னம்பெரிய பூமி
கன்னத்தில் ஏந்துகிறது.

சிறிய மூர்த்தி
அதன்
பெரிய கீர்த்தியை
ஏவல் செய்கிறது.

மியாவ் என்றது பூனை

என் பூனைக்கு
ஹிட்லர் எனப் பெயரிட்டேன்.
அதன்
வேட்டைப் பற்களை அடிக்கடி
நாவால் துடைத்துக்கொண்டது.
பளிங்குக் கண்கள் உருட்டிப் பயமுறுத்தியது
அதன்
வெளிச்சமோ அதிபயங்கரம்.
`ஆ`வெனக் கொட்டாவி விட்டப்போது
மொத்தப் பூமி உருண்டையையும்
விழுங்கிவிடுமோ எனச் சந்தேகித்தேன்.
பூப் பாதங்களில் இருந்து
கூர்நகங்கள் வெளிப்பட்டப்போது
முடிவே செய்துவிட்டேன்…
உலக அழிவு ஒரு பூனையால்தான் என்று.
அதற்கு முன்னர்
பூனை கர்ஜிக்க வேண்டும்
அதுமட்டும்தான் பாக்கி.
இதோ
சுற்றும் முற்றும் பார்க்கிறது
வாயைத் திறக்கிறது
மியாவ் என்கிறது.
அது
யாருக்கும் யாதொரு தீங்கும் செய்யாத
மியாவ்.
அப்பாடா

என் பூனை
பூனையாகவே ஆகிவிட்டது
பாலும்.

எது அது?

எது
மரம்?

கிளையொடு ஆடும் இலை
இலை சொட்டும் பனிநீர்
பல்லிகள் ஊரும் பட்டை
வைரம் பாய்ந்த அகம்
கூடு தாங்கும் பெண்மை

எது
மரம்?

சிரிப்பென பூக்கும் மலர்
மலர் முதிர்ந்த காய்
காய் மாறும் கனி
கனியுள் வதியும் விதை
விதைக்குள் உறையும் உயிர்

எது
மரம்?

காற்றோடு பேசும் கூச்சம்
காதுக்குள் நிறையும் குயில்
பயணிக்கு அருளும் நிழல்
கண்கள் மயங்கும் எழில்
கிளை முளைத்த ஊஞ்சல்

எது
மரம்?

நீர் சொட்ட நிற்கும்
நிழல் சொட்ட நிற்கும்
வெயில் சொட்ட நிற்கும்
காற்று சொட்ட நிற்கும்
காலம் சொட்ட நிற்கும்

எது
மரம்?

குச்சிக் கால்கள் உந்தி
வானேகும் பறவைக்கு
இசைந்தாடுமே அசைவு

அது
மரம்.

ஏற்றிவிடுதல்

உனக்குள் நீ ‘எட்டு’ போட்டு
உனைக் கட்டுப்படுத்தி
சிராய்ப்பின்றி
உனை ஓட்டப் பழகு.
அந்த அனுபவமே
கடவுள்.

நீ
வாழ்கிற வாழ்க்கைதான்
கடவுள்.
அதனால்
`வாழ்தல் இனிது
வாழ்தல் இனிது’ சொல்.

மனம் என்பது பரந்த வெளி
அதில்
பிரபஞ்சம் என்பது சிறு புள்ளி
புள்ளி நீங்கி
வெள்ளி நீங்கி
மனதை ஆராதி.
அதுவே கடவுள்.

யோசிக்கவே இல்லை
அப்பா.
திருவிழாவில்
தன் தோள் ஏற்றி
குழந்தைக்குக் காட்டினார்
வானுறை கடவுள்.

வளைத்துத் தொடுதல்

சிறுவயதில்
கை வளைத்து தலைக்குக் கீழுள்ள
இடது காதைத் தொட்டான்.
`சரி’ எனச் சேர்த்துக்கொண்டார்கள்.

அன்று முதல்
வளைத்து வளைத்துத் தொடுவது
பழக்கமாகிவிட்டது.

சரியாகச் சொல்வதானால்
சுற்றிவளைப்பதும்
வளைத்துத் தொடுவதும்
வாடிக்கையாகிவிட்டது.

சிரிப்பை
கண்ணீர்த் துளியை
காதலை
காமத்தை
இறப்பை
பிறப்பை
பெண்ணை
ஆணை
சுற்றிவளைத்துத் தொடாதோர்
யாருண்டு உலகில்.

மூச்சு முட்டினாலும்
எதையும்
வளைத்துத் தொடுதலே
பிழைப்பதன் சூட்சுமம் ஆயிற்று.

ஒருமுறை
தலைக்குப் பதிலாக
மலையைச் சுற்றிவளைத்து
காதைத் தொட்டவனை
`ஆண்டு அனுபவிச்சி
ராசாவாட்டம் போறான்’
என்கிறார்கள்

வெற்றிடத்தை பற்றிக்கொள்

பெரிய
வெற்றிடத்தின் மையத்தில்
சிறிய
புள்ளி வைத்தேன்.
வெற்றிடம் கொள்ளாமல்
பொங்கிப் பொங்கி வழிகிறது
புள்ளி.
பிறகு
புள்ளியைப் பற்றிக்கொண்டு
சுற்றிச் சுழன்று
பூமிக்கு
கறுப்பு வெள்ளை அடிக்கின்றன
மூன்று கோடுகள்.

பிற படைப்புகள்

Leave a Comment