கார்த்திக் நேத்தா கவிதைகள்

by olaichuvadi

 

ஒளி வருகை

நிச்சலனமான
நீர்நிலையென
மிதந்தபடி இருக்கிறது
அறையின் இருள்
விட்டெறிந்த நாயின் குரைப்பு
நீர்நிலையினைச்
சலனப்படுத்துகிறது.
கதவைத் திறந்ததும்
நீர்நிலை காணாமல்
போய் விடுகிறது
விட்டெறிந்த நாயின் குரைப்பு
அறையின் மூலையில்
அங்குமிங்கும் அலைந்துவிட்டு
அமர்ந்து கொள்கிறது
வெளிச்சம் ஆசுவாசமாக
அறையை நகர்த்திக் கொண்டிருக்கிறது.
வெளிச்சம் வந்து
நீர்நிலை காணாமல் போனதா?
அங்கேயே இருக்கிறதா?
ஒருமுறை மட்டும்தானே நிகழும்
ஒரு இருள்?

இரண்டறுதல்

தவம் புரியும்
ஓவியத்திற்கு முன்
அமர்ந்திருக்கும்போது
எண்ணத்தில்
பாறை வந்தது அதன்
உருவத்தோடு
தொடர்பே இல்லாமல்
எண்ணத்தில் காற்று
வந்தது
காற்றின் உருவமாக
வெளி வந்தது.

காற்று
பாறை
பாறை
காற்று என
எண்ணங்கள்
சிந்தனையாக
வரத் தொடங்கின
பாறை
காற்றில்
காணாமல் போய் விட்டிருந்தது
காற்று மாத்திரம்
மிதந்து கொண்டிருந்தது
வெளியும்
போய் விட்டிருந்தது.

எப்பப்பா ஈசா

எண்ணம்
வரும்போதெல்லாம்
ஏதோவொரு பிம்பமும்
வந்துவிடுகிறது

இழவெடுத்த
எண்ணமும் விடுவதாக இல்லை
பிம்பமும் விடுவதாக இல்லை
 

பிற படைப்புகள்

Leave a Comment