மொழியில் உயிர்பெறும் கடல்
வறீதையா கான்ஸ்தந்தின்

by olaichuvadi

அனுபவப் பதிவுகள் எழுத்தில் எப்போதும் தனியிடம் பெறுகின்றன. தடம் பதிக்கப்பெறாத களங்களில் அவற்றுக்குக் கூடுதல் கவனம் கிடைக்கின்றன. எண்ணிக்கைச் சிறுபான்மையினர், புலப்படாக் குறுங்குழுக்கள், பழங்குடிகள் மீதான பதிவுகள் உலகம் முழுவதும் தனிக்கவனம் பெற்று வரும் இந்தச் சூழலில் பொது வெளியின் பண்பாட்டுப் பார்வையிலும் கொள்கைத் தளங்களிலும் இப்பதிவுகள் தாக்கத்தை ஏற்படுத்தத் துவங்கியுள்ளன. எனினும் வனம், கடல் சார்ந்த வாழ்வு குறித்த புரிதல்களில் பெரும் இடைவெளி நீடிக்கிறது.

தமிழ்ச்சூழலில் நெய்தல் வாழ்வு குறித்து கடந்த 50 ஆண்டுகளில் பொருட்படுத்தும்படியான சில பதிவுகள் வந்துள்ளன. சுனாமிக்குப் பிந்தைய 10 ஆண்டுகளில் கடலோர சூழலியல், வள அரசியல் மற்றும் வாழ்வியல் மீதான நெய்தல் படைப்பாளிகளின் நூல்கள் 50க்கும் மேல் வெளிவந்தன. பொதுவெளியில் கடலோர வாழ்வு குறித்து நெடுங்காலமாய்க் கட்டமைக்கப்பட்டிருந்த கருத்தியல்களை இந்தப் பதிவுகள் தகர்த்து விட்டன. அனுபவப் பதிவுகளால் மட்டுமே இது சாத்தியமாகும்.

கடற்கரையும் கடல் வெளியும் நெய்தல் நிலம் சாராத பயன்பாடுகளுக்கு ஒதுக்கப்படுகின்றன. பாரம்பரிய மீன்பிடி இனக்குழுக்கள் உயர்தொழில் நுட்பங்களுக்கு நகர்ந்து கொண்டிருக்கின்றன. நெய்தல் வாழ்க்கையில் இப்போக்குகள் புதிய சிக்கல்களை உருவாக்கியுள்ளன. திணைச் சமூகங்களின் மரபார்ந்த தொழிலறிவு என்னும் பெரும் அறிவுச் சேகரம் கரைந்து காணாமலாகிறது. வானிலை, காற்று, நீரோட்டம், மீன்களின் போக்குகள், மீன்பிடி முறைகள், படகு, மீன்பிடி உபகரணங்கள் உருவாக்கிப் பராமரிக்கும் முறைகள் எல்லாவற்றிலும் கடலோடிச் சமூகம் பல நூற்றாண்டுகளாக ஈட்டி வந்துள்ள மரபார்ந்த தொழிலறிவு.

கடல் பரந்து விரிந்து கிடக்கிறது. யார் வேண்டுமானாலும் கடலுக்குள் போகலாம்தான். ஆனால் கடலுக்குள் சென்று மீன்பிடிப்பது லேசுப்பட்ட விசயமல்ல. விதைத்த நெல்லை அறுவடை செய்து வருவது மாதிரியல்ல கடல் புகுதல். எப்போது எங்கே எப்படி வலை விரித்தால், தூண்டில் போட்டால் மீன் கிடைக்கும் என்று தெரிந்திருந்தால் மட்டுமே அறுவடையுடன் கரை திரும்ப முடியும். வேணாட்டுப் பகுதியில் ‘தண்டான்’ என்கிற இனக்குழுவின் முதன்மைத் தொழில் தென்னை மரம் ஏறுவது. கிணறு தோண்டுபவர்கள், சிகை திருத்துபவர்கள், நடமாடும் நாட்டு மருத்துவர்கள் போன்று நாட்டுப்புறங்களில் உயிர்ப்புடன் இயங்கி வந்த தொழில்குழுக்களை விழுங்கிவிட்ட நகர்ப்புறங்கள் இன்று பண்பாட்டு அடையாளமற்ற மனிதர்களை உற்பத்தி செய்து கொண்டிருக்கின்றன.

மரக்காணம்(விழுப்புரம்) கடற்கரைப் பகுதியில் கோலா மீன்பிடித்தல் சாகசமான தொழில். கோலா பிடிக்கப்போகிற மீனவர்கள் கங்கணம் (விரதம்) செய்கின்றனர். மரபாக, இம்மீனவர்கள் முன் தினம் இரவில் வீட்டில் படுத்துறங்கக் கூடாது. நெல் விவசாயத்தில் குறைந்தது 73 நுட்பங்கள் உள்ளதாக இயற்கை வேளாண் அறிஞர் நம்மாழ்வார் குறிப்பிட்டிருந்தார். மரபார்ந்த மீன்பிடித் தொழில் நூற்றுக்கணக்கான நுட்பங்கள் கொண்டது. அத்தனை நுட்பங்களும் அந்தந்த இனக்குழுக்களின் வழக்கு மொழிகளில் புதைந்து கிடக்கின்றன. கடற்கரைத் தொழில் மரபுகள் போதுமான அளவு மொழியில் பதிவாகவில்லை என்பது தமிழுக்கும் திணை குறித்த புரிதலுக்கும் பெருங்குறையே.

இராபர்ட் பனிப்பிள்ளையின் கடலறிவுகளும் நேரனுபவங்களும் என்கிற மலையாளப் பிரதியை இந்தப் பின்னணியில் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இருபதாம் நூற்றாண்டின் முன்பாதியில் தென் திருவிதாங்கூர்க் கடற்கரைகளில் நில, கடல்வெளி, கடற்கரைச் சூழலையும் நேரடி அனுபவப் பதிவாக முன்வைக்கிறது இப்பிரதி. நானறிந்தவரை இந்தியக் கடலோரங்களிலிருந்து கடல்வெளி அனுபவங்களின் எதார்த்தப் பதிவு இதற்குமுன் நம் வாசிப்புக்கு வரவில்லை. புதின வகைகளில் நெய்தல் வாழ்வைப் பிரதிபலிக்கும் அதிர்ச்சி தரும் வாசிப்புகள் வந்துள்ளன என்றாலும் இராபர்ட்டின் பதிவு ’எதார்த்தம் புதினத்தைவிட அதிர்ச்சியூட்டுவது’ என்கிற கருதுகோளை மீண்டும் மெய்ப்பிக்கிறது.

கடலோர வாழ்வில் கொல்லணிகள் பிடித்திருக்கும் இடத்தைப்பற்றிப் பல பொழுதுகளில் எழுதியிருக்கிறேன். திணை நிலங்களின் தொழில்சார் குடிமனைகளின் உரையாடலுக்கான வெளிகள் உண்டு. மருதநிலத்தில் திண்ணைகள் போல நெய்தல் நிலத்தில் கொல்லணி. துறைவர்களின் சமூக உரையாடல் தளம் கொல்லணி. ‘கடலறிவுகளும் நேரனுபவங்களும்’ கொல்லணியின் உயிர்ப்புடன் நம்முடன் உரையாடுகிறது. கடல் விவரணை, கடல் பருவநிலைகளையும் பொழுதுகளையும் கணித்தல், கட்டுமர மீன்பிடி நுட்பங்கள், கடலில் இடர்களை எதிர்கொண்டு மீளுதல், கரையில் நிகழும் வாழ்வு – எல்லாவற்றிலும் கிராமத்துக் கதை சொல்லல் உத்தி வெளிப்படுகிறது. தென் திருவிதாங்கூர் முக்குவர்களின் இனவரைவியலாய்ப் பரிணாமம் பெறும் இவ்வாசிப்பு நவீன வாழ்க்கைப் பகட்டுகளில் நாம் எம்மாதிரியான வாழ்க்கையை இழந்து நிற்கின்றோம் என்கிற மனக்கொதிப்பை ஏற்படுத்துகிறது.

இங்கு சொல்லப்படும் வாழ்க்கை நாம் சற்றும் அறிந்திராதது என்கிற உண்மை ஒருபுறம் இருக்க, புதினத்தின் சுவை பொருந்திய கிராமிய மொழி நம்மை நெய்தல் வாழ்பனுபவத்தின் பேராழத்துக்குள் இழுத்துச் செல்கிறது. பனிப்பிள்ளை ச்றுமங்கரைப்பாரை (கடலடி மீன்திட்டு) வென்றெடுக்கும் ஐந்து நாள் கடல் போராட்டத்தை நாம் உடனிருந்து அனுபவிக்கும் வகையில் அப்பாதான் கதை நாயகன் பனிப்போர் கடலிலே சத்தியாகிரகம் ஆகிய அத்தியாய வரிசை அமைகிறது. தனியாள் படை போன்று பனிப்பிள்ளை என்கிற பாரம்பரிய கடலோடியின் ஓய்வற்ற இயக்கம் வியப்பூட்டுவது. பனிப்பிள்ளை இரத்தமும் சதையுமான கடலின் வார்ப்பு.

மனித வாடையற்ற நீர்ப்பெருவெளியில் ஒரு கட்டுமரத்தில் தன் பதின்வயது மகனுடன் அங்கு ஐந்து நாட்களாக ஜீவமரணப்போராட்டம் நிகழ்த்தும் பனிப்பிள்ளை என்கிற கடலோடி. சிதம்பர இரகசியம் போல வலியதுறை ஆரோக்கியம் பிரிசந்தி குடும்பம் மீன்பிடித்து வரும் செறுமங்கரை மீன்திட்டு. கடல்பரப்பு எல்லோருக்குமானது. அங்கே ஒரு மீன்திட்டைத் தன் குடும்பச் சொத்து போல ஒரு தனிமனிதன் ஏகபோகம் செய்வதை பனிப்பிள்ளை போன்ற ஒரு அசல் கடல்வீரனால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? ‘அடைந்தால் செறுமங்கரைப் பார் இல்லையென்றால் கடலன்னையிடம் ஜலசமாதியடைவது’ என்கிற தீர்க்கமான முடிவுடன் கட்டுமரத்தில் புறப்படும் பனிப்பிள்ளை ஐந்து நாட்கள் கடலே கதியென்று கிடக்கிறார்.

இறுதியில் வெல்வது ஆரோக்கியம் பிரிசந்தியுமல்ல, பனிப்பிள்ளையும் அல்ல, பழங்குடி மனம். ஆரோக்கியப் பிரிசந்தியின் இரகசியக் கோட்டைக்குள் நுழைந்து செறுமங்கரை மீன்திட்டைக் கண்டடைந்து கணித்து விடுகிறார் பனிப்பிள்ளை. கட்டுமரம் கொள்ளாத அறுவடையுடன் ஐந்தாவது நாள் மாலையில் கரைதிரும்பும் தந்தையையும் மகனையும் வரவேற்க வலியதுறை அலைவாய்க் கரையில் பெருங்கூட்டமே திரண்டுவிடுகிறது. வழக்கமாக கடகத்துடன் அலைவாய்க் கரைக்கு வரும் அம்மாவின் கண்கள் மகனைத் தேடுகின்றன. கண்ணீர் மல்க ஓடிச்சென்று மகனை ஆரத்தழுவிக் கொள்கிறாள். எர்னெஸ்ட் ஹெமிங்வேயின் ‘கிழவனும் கடலும்’ முன்வைக்கும் மானுடம் தோற்பதில்லை என்னும் கருதுகோள் மனித வரலாற்றில் மீண்டும் மீண்டும் உயிர்பெறுகிறது. ‘கிழவனும் கடலும்’ ஒரு புதினம், பனிப்பிள்ளையின் சாகசம் எதார்த்தம்.

அறுபது ஆண்டுகளுக்கு முன்னால் இந்தியக் கடற்கரைகளுக்கு இயந்திர மீன்பிடி முறை அறிமுகம் ஆகியிருக்கவில்லை. பாய்விரித்து ஆழக்கடல் புகுந்து ‘தங்கல் பயண மீன்பிடி’ நிகழ்த்திக் கரைதிரும்பும் அன்றைய மீனவர்களின் துணிச்சல் அபாரமானது. புதிது புதிதாய் மீனறுவடைக் களங்களைக் கண்டடைந்து அதைக் கடல்துறையின் எல்லா மக்களுக்கும் அணுகுபொருள் ஆக்கும் ஈரமும் வீரமும் முயங்கும் பழங்குடி மனம்.

தென் திருவிதாங்கூர்க் கடற்கரையில் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் ‘தங்கல் பயண மீன்பிடிமுறை’ பெயர் பெற்ற கடல் சாகசமாகும். மேற்குக் கடற்கரையின் தென்விளிம்புப் பகுதியான கன்னியாகுமரிக் கடற்கரை அன்று தென்திருவிதாங்கூரின் ஒரு பகுதியாக இருந்தது. வள்ளம் என்னும் சிறுபடகில் அல்லது கட்டுமரத்தில் பாய்விரித்துத் தொலைவுக் கடலுக்குள் சென்று நங்கூரமிட்டுத் தங்கி மீன்பிடித்துக் கரைதிரும்பும் முறைதான் ‘தங்கல் ஓட்டு’ (கடலோடுதல்). என் ஊர்ப்புறத்தில் இதைப் படுவோட்டு என்பார்கள். கடலடிப் பாறைகளில் வாழும் ‘பார் மீன்களை’ பிடிப்பதற்கான ஓடு கயிறு (தூண்டில் கயிறு), தூண்டில்கள், இரை, கோட்டுமல், அடிகம்பு, கொளுத்தோட்டி (கொக்கி) என்பவை இதில் முதல்நிலை உபகரணங்கள். கடல் தங்கலுக்கான உணவு, தூண்டில் வீசுவதற்கான இரை போன்றவை பயணத் தயாரிப்புப் பட்டியலில் அடங்கும். கட்டுச்சோறு மூன்று நாட்கள் தாங்கும். பனையோலைக் கடகத்தில் வேகவைத்த உணக்கக் கிழங்கு (சிறியதாய்ச் சீவி வெய்யிலில் உலர்த்திய மரவள்ளிக்கிழங்கு). பசி போக்கும் அருமையான நொறுக்குத்தீனி இது.

சுட்ட வற்றல் மிளகு, நறுக்கிய வெங்காயம், உப்பு இட்ட நீத்தண்ணி (நீர்த்த சோற்று வடிநீர்) கன்னாசுகளில் (அல்லது குப்பிகளில்) மடைப்பெட்டியில் (இடுப்பில் செருகிக் கொள்ளும் மடக்குப் பெட்டி- பனை ஓலையில் செய்த பெட்டி), தாராளம் நறுக்கிய பாக்கு, வெற்றிலை, புகையிலை, உட்கடலின் வெட்டவெளியில் பகலின் வெய்யிலும்  இரவின் குளிரும் இருளும் மாறிமாறி வர, உடல் களைப்பைச் சமாளித்து விழித்திருக்க கடலோடி கைத்தலம் பற்றுவது வெற்றிலைதான்.

படகுகளில் கடல் தங்கல் பயணம் போகும் கடலோடிகள் எப்போதும் கட்டுச் சோற்றைச் சுமக்க வேண்டியதில்லை. அரிசி, தண்ணீர், அடுப்பு, பானையுடன் சீராக நறுக்கிய தென்னம்பாளைக் கற்றைகளைப் படகில் எடுத்துச் செல்வார்கள். துள்ளத் துடிக்க மீன் சமைத்து உண்ணும் வாய்ப்பு இவர்களுக்கு மட்டும்தான். இந்த சரக்குப் பட்டியலில் கோணிச் சாக்குகளில் உப்பும் சேர்ந்து கொள்ளும். மூன்று நான்கு நாட்கள் மீன்பிடித்தாலும் கடைசி நாளில் பிடிக்கிற மீன்கள் மட்டும்தான் சமையலுக்குத் தகுதியானது. அதற்கு முந்தைய அறுவடை மொத்தமும் பிடித்தவுடன் உப்பிலிடப்படுகிறது. விறகு, உணவுப் பொருட்கள், தண்ணீர் எல்லாம் ஒழிந்துபோன நிலையில் உப்பிட்ட மீன்கள் கடகங்களில் ஒருபுறம், கடைசிநாள் அறுவடை மறுபுறமாகப் படகு பாய்விரித்துக் கரைதிரும்புவது அன்றைய வழமை.

தொலைத்தொடர்பு வசதி இல்லை, இடம் கணிக்கும் கருவிகள் இல்லை. இயந்திர உந்தி இல்லை. பனிக்கட்டி அன்று அறிமுகமாகியிருக்கவில்லை. பாதுகாப்பு வசதி என்று எதுவும் கிடையாது. கரைகாணாத் தொலைவுக்குச் சென்று உட்கடலில் நான்கு நாட்கள் தங்கிக் கிடந்து மீன்பிடித்துக் கரை திரும்புவது மதியூகமும் அபாரத் துணிச்சலும் கொண்ட கடலோடிக்கு மட்டுமே சாத்தியம்.

‘ஒரு கணம் ஆறும், மறுகணம் சீறும்’ கடலின் இயல்பே அதுதான். கடலைக் கணிக்க எவராலும் முடியாது. கடலோடு வாழ்ந்து வரும் கடலோடி மட்டுமே கடலைக் கற்று வைத்திருக்கிறான். நிலையாமையின் குறியீடாய் இயங்கும் உப்புநீர்ப் பெருவெளியில் கட்டுமரத்தில் கடலோடியின் குறியீடு கவனநிலை. இருபத்துநான்கு மணிநேரமும் அவன் கவனம் பேணவேண்டும். கடலின் பரிமாணத்தையும் போக்குகளையும் கூர்ந்து கவனிப்பதில்தான் அவன் உயிரும் வாழ்வாதாரமும் அடங்கியிருக்கிறது.

நாம் கருதுவது போல, கடலில் காணுமிடமெல்லாம் மீன்கள் இருப்பதில்லை, நீடித்திருப்பதுமில்லை. பருவம், பொழுது, இரைதேடல், இனப்பெருக்கம், குஞ்சுகளைப் பராமரித்தல், நீரோட்டத்தின் போக்குகள் எல்லாமாகச் சேர்ந்துதான் மீன்களின் இருப்பைத் தீர்மானிக்கின்றன. ஆனால் ஆண்டின் பருவச்சுழற்சியில் இவற்றுக்கெல்லாம் கால முறைமைகள் உள்ளன. எங்கே, எப்போது மீன்கள் வரும் என்பது கடலோடியின் அறிவுச் சேகரம்.

சில கடலோடிகளின் அபூர்வமான கூர்ந்தறிதிறன் வியப்பைத் தருவது. பதினாறு பிள்ளைகளில் ஒருவனாக, தனது தந்தையின் பாரம்பரியத் தொழிலில் சிறுவயதிலிருந்தே உதவிவந்த இராபர்ட்டின் கடலார்வம் வீட்டிலிருந்து தொடங்குகிறது அன்றாடம் கரைதிரும்பிய பிறகு தந்தையும் அண்ணனும் அன்றைய தொழில் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளும் ‘சேல் சொல்லல்களை’ அவதானிக்கும் இராபர்ட்டுக்குக் கடல்மீது ஆர்வம் பிறக்கிறது. நிலவியல் ஆசிரியர் சொல்லித்தந்த பசிபிக், அட்லாண்டிக், இந்தியப் பெருங்கடல்கள் வேறு,  இராபர்ட் வீட்டில் சொல்லப்படும் கடல்கள் வேறு. தந்தையும் தனையனும் நேர்கடல், கீழாக்கடல், கள்ளக்கடல் என்று விவரித்துக் கொண்டு போகும்போது தங்கள் வாழ்க்கையத் தொட்டு நிற்கும் கடலைக் குறித்து ஆழமாகவும் விரிவாகவும் அறிந்துகொள்ளும் துடிப்பு இராபர்ட்டுக்கு எழுகிறது. கடலைச் சாராத தொழில்களில் வாழ்க்கையை ஓட்டுகிற நிலையிலும் 50 வருடங்களாகக் கடல் இராபர்ட்டைத் துரத்திக் கொண்டே இருக்கிறது.

கன்னியாகுமரிக் கடற்கரைக் கிராமமான இனையம்புத்தந்துறையிலிருந்து திருமணத்தின் நிமித்தமாக வலியதுறையில் (திருவனந்தபுரம்) குடியமர நேரும் பனிப்பிள்ளை சில்லமரம், இரையில்லாத் தூண்டில், முக்கோண் வடிவப் பாய் என்று புதிது புதிதான நுட்பங்களை அப்பகுதிக்கு அறிமுகம் செய்யும் கடல் கலைஞனாக மெருகேறுகிறார். அறிந்த மீன்வலத் திட்டுகளில் (பார்கள்) மீன்பிடிப்பதில் தனித்தேர்ச்சி பெற்றவராக மட்டுமின்றி, புதுப்புதுப் பார்களைக் கண்டடைந்து அதைச் சக மீனவர்களுக்கு அறிமுகம் செய்பவராகவும் வெளிப்படுகிறார். மீன்பிடி தொழிலில் ஏற்படும் போட்டி இயல்பானதுதான். மிகச்சிறந்த வேட்டைப் பெறுமதியுடன் பத்திரமாய்க் கரைதிரும்புபவனே சிறந்த கடல் பழங்குடி வீரன். இவ்வரலாற்று மதிப்பீட்டைக் கடந்து மனிதத்தைக் கொண்டாடும் மனிதராக பனிப்பிள்ளை நம் வாசிப்பில் உயிர் பெறுகிறார்.

அஞ்சுதெங்கு நேர்கடலில் ஒன்பது கிலோமீட்டர் தொலைவில் ஒரு நூற்றாண்டுக்கு முன்னால் மூழ்கிப்போன கப்பல் ஒன்று அருமையான மீன்வளத் திட்டமாக வடிவம் கொள்கிறது. அந்தக் ‘கப்பல் பாரில்’ பனிப்பிள்ளை நிகழ்த்திய சாகச மீன் அறுவடையைக் கொண்டாடும் நாட்டுப்புறப் பாடல் ஒன்று இன்றும் நீடிக்கிறது.

“சுக்கூறச்சன் கண்டுபிடிச்ச கப்பல் பாரு

அதில் இரையில்லாத மீனுபிடிச்ச தெக்கன் மாரு”

சுக்கூறச்சன் கண்டுபிடித்த அஞ்சுதெங்கு கப்பல்பாரில் இரையில்லாத் தூண்டில் நுட்பத்தை முதன்முதலாக அறிமுகப்படுத்திய தெக்கன் (தெற்கிலிருந்து வந்தவன்) வேறு யாருமல்ல, பனிப்பிள்ளைதான். காலனிய வரலாற்றில் இடம்பிடித்த அஞ்சுதெங்கு, கொல்லம் திருவனந்தபுரம் எல்லையில் அமைந்திருக்கிறது. செறுமங்கரைப்பார் தொடங்கி அக்கடல்வெளியின் ஒவ்வொரு மீனறுவடைக் களத்திலும் வெற்றிக்கொடி நாட்டிய தந்தையின் சாகச வரலாறு இராபர்ட்டை வேறொரு சாகசத்துக்குத் தூண்டுகிறது. தன் தந்தை மீன் அறுவடை நிகழ்த்திய அம்மீன்வளத் திட்டுகளின் நிலவியல் பரிமாணங்களைக் காட்சிப்பதிவு செய்வதுதான் இராபர்ட்டின் திட்டம். அதைச் செயல்படுத்த நீருக்கடியில் படம் பிடிக்கும் கருவிகள் வேண்டும். அத்தனை பொருள் செலவிடும் செல்வச் செழுமை தனக்கு இல்லைதான். ஆனால் அந்த எண்ணம் இராபர்ட்டை முடக்கிவிடவில்லை. வெளிநாட்டில் வாழும் ஒரு நண்பர் வழியாக 40 மீட்டர் ஆழத்தில் நீர் புகாத காமிரா உரைகளைத் தருவித்துக் கொள்கிறார். ஸ்ரீநி, பீமா என்னும் இரண்டு நீர்மூழ்கி வல்லுனர்களின் உதவியுடன் கடலடிப் படப் பதிவுக்குத் தயாராகிறார்.

அஞ்சுதெங்கு கப்பல்பாரைக் கண்டுபிடித்த சுக்கூறச்சனின் தாய்வழிப் பேரனான அலோஷியசின் படகில் அந்த சாதனைப் பயணம் நிகழ்கிறது. வானில் மேகமூட்டமற்று, கடல் பளிங்கு போல் தெளிந்துகிடக்கும் நண்பகல் வேளை. கடலடிக் காட்சிப் பதிவுக்குப் போதுமான வெளிச்சம் அமையும் அருமையான பொழுது. அலோஷியசின் படகு நான்குபேரைச் சுமந்தவாறு கப்பல்பாரை வந்தடைகிறது. இடத்தைத் துல்லியமாய்க் கணித்து நங்கூரமிடும் அலோஷியஸ் சொல்கிறார்

”உடைந்த கப்பலின் நடுவில் படகை நங்கூரமிட்டிருக்கிறேன், கயிற்றைப் பிடித்து நேர்கீழாக 40 மீட்டர் இறங்கினால் கப்பல்பாரின் நடுவில் நிற்பீர்கள்”

அலோஷியசின் கணிப்பு சற்றும் பிசகவில்லை. மூழ்குகருவியுடன் கீழே இறங்கிய ஸ்ரீநியும் பீமாவும், சுக்கூறச்சனும் பனிப்பிள்ளையும் புழங்கிய கப்பல்பாரின் அருமையான பதிவுகளுடன் படகுக்குத் திரும்புகிறார்கள். படகில் காத்திருக்கும் இராபர்ட்டுக்கும் அலோஷியசுக்கும் அது உணர்ச்சிமயமான தருணம்.

சங்குமுகம் கப்பல்பார் கண்டறியப்பட்ட பதிவு வாசக ஆர்வத்தைக் கிளறுவது. சங்குமுகத்தின் நேர்கடலில் 9.75 கடல்மைல் தொலைவில் சுமார் 40 மீட்டர் ஆழத்தில் 1968இல் மூழ்கிப்போன ஓர் எண்ணெய்க்கப்பல். இரவு 11 மணிக்குக் கப்பல் மூழ்கியதன் நேர்சாட்சி தாமஸ் மட்டுமே. நெடுந்தூண்டில் தொழிலுக்கு இரவில் ஜோசுடன் வந்து கட்டுமரத்தை நங்கூரமிட்ட இடம் உண்மையில் கப்பல் பாதை. கப்பல் பாதையில் நங்கூரமிட்டால் ஒருவராவது விழித்திருக்க வேண்டும். இருவரும் மட்டு வீசிய பிறகு ஜோசை அணியத்தில் பலகையைக் குறுக்காகப் போட்டுத் தூங்குமாறு சொல்லிவிட்டு கடைமரக் கடியலில் உட்கார்ந்துகொண்ட தாமஸ் மடப்பெட்டியிலிருந்து வெற்றிலை எடுத்து சாவதானமாய் மென்றவாறு இலக்கின்றிகடலை நோட்டம் விட்டுக்கொண்டிருக்கிறார். திடீரென்று சற்றுத் தொலைவில் கடற்பரப்பிலிருந்து சிவந்த தீக்கோளம் உயருகிறது. ஒரு கப்பல் தீப்பிடித்து எரிகிறது. எரிகிற கப்பலில் இருப்பவர்களை மீட்க இன்னொரு கப்பல் பின்னாலிருந்து வருவதும் தாமசுக்குத் தெரிகிறது. வேகமாகத் தொடர்ந்து வரும் கப்பல் இவர்களை மீட்கிறதோ இல்லையோ, அதில் தாமசைப் போன்றவொரு கட்டுமரக்காரனால் ஆவதொன்றுமில்லை.

கிடைத்த மீனுடன் காலையில் கரைதிரும்பிய தாமசும் ஜோசும் களைப்புத் தீர மதியம்வரை தூங்குகிறார்கள். விழித்துப் பார்த்தால் அலைவாய்க்கரை முழுவதும் மக்கள் திரள் திரளாகக் கூடிநிற்கிறார்கள். அருகில் போய்ப்பார்த்தபோது மரத்தடிகள். ஒரே அளவுள்ள பெரிய பெரிய மரத்தடிகள். நிறைய கட்டுமரங்கள் கடலிலிருந்து தடிகளைச் சேர்த்துக்கட்டிக் கரைக்கு இழுத்து வருகின்றன. நேற்று மூழ்கிய கப்பலிலிருந்து மிதந்து நீரோட்டத்தின் போக்கில் வழிந்துபோகும் மரத்தடிகளைப் பரபரப்பாகச் சேகரித்து வருகிற மீனவர்கள். தாமசின் மனசிலும் ஆசை துளிர்க்கிறது. ஒவ்வொரு தடியும் நல்ல விலைபெறும். நான்கைந்து கிடைத்தால் மீனைவிடப் பெரும் அறுவடைதானே. ஜோஸ், நாமும் போகலாமென்று தாமஸ் சொல்ல, இருவரும் கட்டுமரம் கட்டிப் பாய்வித்துப் புறப்படுகிறார்கள். உட்கடலுக்குப் போய் நீரோட்டம் இழுத்துப்போகும் கட்டைகளைச் சேகரித்துக் கட்டுமரம் தாங்குமளவு ஏற்றுகிறார்கள். இன்னும் சில கட்டைகளைக் கடைமரக் கடியலுடன் பிணைத்துக் கொள்கிறார்கள். கட்டைகளின் பாரமும் பிணைத்த கட்டைகளின் தாக்கமும் பாய்மரத்தின் வேகத்தை மட்டுப்படுத்த, தாமசும் ஜோசும் கரைவந்து சேரும்போது கருக்கல் ஆகிவிடுகிறது.

முழுநாள் உழைப்பின் சோர்வு மிகுதியால் இரவுத் தொழிலுக்கு மட்டம் போட்டுவிட்டுத் தூங்கிய தாமஸ் காலையில் கண்விழிக்கையில் வீட்டு வாசலில் செம்மோர் (ஊர்ப்பாதிரியின் உதவியாளர்/ மணியக்காரர்) வந்து நிற்கிறார்.

“அச்சன் (பாதிரி) சொல்லியனுப்பியிருக்கிறார், நேற்று ஊரில் கரைசேர்த்த எல்லா மரத்தடிகளையும் கோயிலுக்குக் கொடுத்துவிட வேண்டுமாம். எல்லாரும் கொடுத்தாயிற்று. உங்களிடமும் சொல்லிவிடச் சொன்னார்” என்கிறார் செம்மோர். “எல்லோருக்கும் உடன்பாடென்றால் எனக்கும்தான்” என்று ஒற்றை வாக்கியத்தில் பதிலளித்து செம்மோரை அனுப்பிவைக்கிறார் தாமஸ். உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பல்லவா பாதிரியாரின் வார்த்தை.  மறுத்தால் ஊர்விலக்கம் ஆகிவிடும். கடற்கரைக் கத்தோலிக்கக் கிராமத்தில் இதெல்லாம் சாதாரணம். மறுநாள் அச்சன் தடிகளை வைத்து என்ன கட்டுமானம் செய்யலாம் என குஷியாகத் திட்டம் போட்டுக் கொண்டிருந்தார்.

உட்கடலில் ஐந்து கட்டுமரங்கள் தூண்டில் மீன்பிடி தொழிலில் மும்முரமாக ஈடுபட்டிருக்கின்றன. அதுவும் ஒரு கப்பல் பார்தான். நீண்ட காலத்துக்கு முன்னால் கடலில் மூழ்கிப்போய் மீன்வளத்திட்டமாக மாறிவிட்ட கப்பல். ஐந்து கட்டுமரங்களும் கூப்பிடு தொலைவில் நங்கூரமிட்டு தூண்டில் வீசிக்கொண்டிருக்கின்றன. மாத்யூவின் கட்டுமரத்தில் அவன் தம்பிகள் லாரன்சும் ஆஞ்சலிசும் அலெக்சின் மாத்தில் ஜஸ்டினும் ஸ்டீபனும் உடன் உள்ளனர். லாரன்ஸ் நடுமரத்தில் இருந்தபடி தூண்டில் வீசுகிறான். தூண்டிலில் சிக்கிய செம்பலி மீன் கட்டுமரத்தை நெருங்கி வரும்போது நழுவிவிடுகிறது. ஆனால் தூண்டில் மேலே இழுபட்ட வேகத்தில் செம்பலியின் காற்றுப்பைகளும் நாக்கும் துருத்தி நிற்க, காற்றுப்பையில் காற்று நிரம்பிவிட்டது. செம்பலியால் நீந்தி ஆழத்துக்குள் போகமுடியாமல் தத்தளித்து நீரோட்டத்தின் போக்கில் நகர்ந்து கொண்டிருக்கிறது. தெற்கு நோக்கிய நீவாடு ஒழுக்கு. நீந்திப்போய் அந்த மீனைப் பிடித்து வந்துவிடலாம். லாரன்ஸ் சட்டென்று கடலில் குதித்து நீந்தத் தொடங்குகிறான்.

பத்து மீட்டர் தூரத்தைக் கடந்திருக்கமாட்டான் லாரன்ஸ், அப்போதுதான் அலெக்ஸ் பக்கத்துக் கட்டுமரத்திலிருந்து கவனித்தார் அதை. லாரன்சுக்கு பத்துமீட்டர் தூரத்தில் ஒரு கொம்பன் சுறா! கருஞ்சாம்பல் நிற முதுகுத் துடுப்பு முழுவதுமாய் நீரைக் கிழித்தவாறு மேலே புலப்பட, லாரன்சை நோக்கிப் பாய்ந்து வரும் 20 அடி நீளமுள்ள இராட்சத விலங்கு. எல்லா கட்டுமரங்களில் இருப்பவர்களும் கூச்சலிடுகிறார்கள் “லாரன்ஸ் சட்டென்று மரத்திலேறிவிடு” உயிரைப் பறிக்கும் ஆபத்து அதிரடியாய் லாரன்சை நெருங்கிக் கொண்டிருக்கிறது. மேலேயிருந்து யாரோ கட்டளை இட்டதுபோல ஆஞ்சலிஸ் மின்னல் வேகத்தில் ஒரு வட்டத்தை எடுத்து அதன் ஒரு விளிம்பை லாரன்சை நோக்கி வீசுகிறான். லாரன்ஸ் வட்டத்தைக் கைப்பற்றியதும் ஆஞ்சலிஸ் அதிவேகமாய்க் கயிற்றை இழுக்க, லாரன்ஸ் ஆவேசமாய் கட்டுமரத்தில் ஏறிக்கொள்வதற்கும் சுறா கட்டுமரத்தில் மோதுவதற்கும் சரியாக இருந்தது.

கொம்பன் சுறா கட்டுமரத்தை விட்டு விலகுவதாய் இல்லை. காலைச் சுற்றிய பாம்பு கடிக்காமல் விடுமா-? சுறா கட்டுமரத்தைச் சுற்றிச் சுற்றி வருகிறது. மாத்யூவின் கட்டுமரத்தை வாலால் ஓங்கியடிக்கிறது. மிதக்கும் மரத்தை முழ்கடித்துவிட்டால் அதிலிருக்கும் மனித இரையைத் தாராளமாய்க் கொண்டாடலாம். கட்டுமரத்தின் ஒருபுறம் சட்டென்று சாய்ந்து தாழ்ந்து, மீண்டும் மிதக்கிறது. கங்கணம் கட்டிக்கொண்டு நிற்கிறது அந்தக் கொம்பன் சுறா – தன் இரையை எடுத்துக் கொண்டுதான் போவேனென்று.

வேறு வழியில்லை. அலெக்சுக்கு சட்டென்று ஒரு யோசனை. பெரிய மீனைப் பிடிக்கும் கனத்த தூண்டில் கயிற்றை எடுக்கிறார். ஒரு மீனை இரையாய்க் கோர்த்து தூண்டிலை வீசுகிறார். அலெக்ஸ் கணித்தவாறே அந்த இராட்சத விலங்கு இரையைக் கவ்விக் கொண்டோடுகிறது. தூண்டில் கயிற்றை அலெக்ஸ் தாராளமாக விட்டுக்கொடுக்க, ‘உயிர் பிழைத்தால் புண்ணியம்’ என்பதுபோல் அந்த விலங்கு தொலைவுக்குப் பாய்ந்து போகிறது. தூண்டில் கயிற்றின் மொத்த நீளத்தையும் விட்டுக்கொடுத்தாயிற்று. இப்போது மூன்றுபேரும் சேர்ந்து கயிற்றைப் பலமாக இழுக்கத்தொடங்குகிறார்கள். சுறா எதிர்த்திசையில் இழுக்க, தூண்டில் கயிறு வில்போல விறைப்பாய் நிற்கிறது. நங்கூரத்தில் கிடக்கும் கட்டுமரம் அந்த 20 அடி இராட்சத விலங்கின் பலத்துக்கு முன்னால் எம்மாத்திரம்? கட்டுமரம் நகரத்தொடங்குகிறது. சட்டென்று சுறா கடலின் ஆழத்தை நோக்கி வேகமெடுக்கிறது  சற்றுநேரத்துக்கெல்லாம்கட்டுமரம் மூழ்கத் தொடங்குகிறது. புண்ணியமாக, தூண்டில் கயிறு அற்றுப்போக அலெக்சும் கூட்டாளிகளும் மூன்றாம் முறையாகத் தப்பித்துக் கொண்டனர். சுறாவும்தான்!

கடல் வாழ்வு அற்புதங்களும் அபாயங்களும் நிறைந்தது. சாகசங்களும் சாவுகளும் அங்கு சாதாரணம். இரை தேடிக் கடலோடும் பழங்குடி தன இரைக்கே இரையாகிவிடுவதும் வியப்பல்ல. வாழ்வாதாரத்துக்கும் மரணத்துக்கும் இடையில் ஒரு மெல்லிய சரடு. அதன் மேல் கவனமாய்க் கால்பதித்துக் கடல் பழங்குடி மனிதன் நிகழ்த்தும் சாகசங்களின் கதைகள் எல்லாம் கடலின் அடியாழத்தில் அடக்கமாகிவிடுகின்றன. மீண்டு கரைதிரும்பும் ஒவ்வொரு நாளும் கடலோடிக்குப் புதுப்பிறப்புதான். கடலில் மாண்டுபோன தன் கணவனை முன்னிட்டு விதவைக் கோலம் பூண்டு நிற்கும் மனைவி. எட்டு வருடங்களுக்குப் பிறகு ஊர் திரும்பி மனைவியை அதிர்ச்சியில் ஆழ்த்தும் கணவன். அதிநவீன தொழில் நுட்பங்கள் நிலத்தில் வரவாகிவிட்ட நம் காலத்திலும் கடல்வாழ்வில் இந்த எதார்த்தம் தொடரத்தான் செய்கிறது.

கடல் இடர்கள் காலநிலை மாற்றங்களாலும் மீன்களாலும் மட்டுமே நிகழ்வதல்ல. பாரம்பரிய கடலோடிகளைப் பொறுத்தவரை அலைவாயைக் கடந்து படகைச் செலுத்துவதே சிக்கல் மிகுந்த ஒன்றுதான். அலைவாயைக் கடக்கும் முயற்சியில் நள்ளிரவில் தன் தமையன் கடலுக்கு இரையான துயரத்தை இராபர்ட் தனது பால்ய வயது நினைவுகளிலிருந்து அகழ்ந்தெடுக்கிறார். கார்த்திகை மாதக் கள்ளக்கடல் தந்த கோர அனுபவம் அது. கார்த்திகையில் மட்டுமல்ல, கடல் என்றுமே கணிக்க முடியாததுதான்.

அது கார்த்திகை மாதத்தின் ஒரு நள்ளிரவு. ஊர் உறக்கத்தில் ஆழ்ந்திருக்கிறது. தூண்டில் தொழிலுக்குக் கட்டுமரத்தில் புறப்படத் தயாராகும் தந்தைக்கும் தமையனுக்கும் உடனுதவ அவர்களுடன் அலைவாய்க் கரையில் நிற்கிறார் பத்துவயதுச் சிறுவன் இராபர்ட். கார்த்திகைக் கடலின் போக்கை சற்றும் கணிக்க முடியாது. காரிருள்வெளி. கரைகளில் உடையும் அலைகளின் ஒலிதான் வரப்போகும் அலைகளைக் கணிக்கும் ஒரே உபாயம். கோட்டுமலில் ஏற்றினங்களைக் கட்டுமரத்துடன் வரிச்சல் வைத்து (அணைத்துக்கட்டி), அலைகள் சற்று ஓய்வதற்குக் காத்திருக்கும் தந்தையும் தமையனும். அலைகளின் அமைதியைக் கணித்த பனிப்பிள்ளை ‘கட்டுமரத்தை இளக்குவோம்’ (கிளப்புவோம்) என்கிறார். கட்டுமரத்தை அலைக்குள் செலுத்தி இருவரும் மரத்திலேறித்துழைத்து அலைமேட்டைக் கடக்கையில் இராபர்ட் கரையில் நின்று ‘துழையோ துழையோ’ எனக் கூக்குரலிடுகிறார். அலைகளைக் கடந்து விட்டால் தந்தை கரைநோக்கிக் கூவுவார். ‘நாங்கள் பத்திரமாக அலைகளைக் கடந்துவிட்டோம் மகனே, நீ வீடுதிரும்பலாம்’ என்று பொருள்.

தந்தை கூவும் குரலை எதிர்நோக்கி இராபர்ட் கரையில் காத்திருக்கிறார். படாரென்று ஓர் அலை மோதும் சப்தம் தொடர்ந்து இன்னொரு அலைமோதும் ஓசை இராபர்ட் அலைவாய்க் கரையை நெருங்கிச் சென்று உற்றுக் கவனிக்கிறார்,   தந்தையும் தமையனும் துழைந்துபோன கட்டுமரம் இதோ துண்டு துண்டாய்ச் சிதறி மிதக்கின்றன. தொடர்ந்து கரைநோக்கி மோதுகிற சிறுதும் பெரிதுமான அலைகள், முந்தைய கணம்வரை கட்டுமரம் என்று சொல்லப்பட்ட பொருளின் மிச்ச சொச்சங்களையும் ஏற்றினங்களையும் கரை நோக்கி உமிழ்ந்து கொண்டிருந்தன. ஆனால் அப்பாவையும் அண்ணனையும்தான் காணோம்! சோகத்தால் மனம் கனக்க, இராபர்ட் அந்த நள்ளிரவின் அலைகளின் இரைச்சலைக் கிழிக்கும் அளவுக்குக் கதறி அழுதபடி அலைவாய்க்கரை நெடுக அங்கும் இங்கும் அலைகிறான்.

“அப்பா… ஸ்டீபண்ணா”

கடல் கொஞ்ச நேரத்தில் சாந்தமாகிறது. சற்று எட்ட கறுப்பாய் ஏதோ ஓர் உருவம் இராபர்ட்டின் கண்ணுக்குப் புலப்படுகிறது. உணர்ச்சிப்பொங்கக் கதறியவாறு இராபர்ட் முழந்தாளளவு நீரில் இறங்கிச் செல்கிறார். இராபர்ட்டின் குரலுக்கு பதில் வருகிறது.

அப்பாவின் குரல்.

“ஸ்டீபன் கரையேறி விட்டானா?”

அப்பாவின் குரலில் கலக்கம் தெரிகிறது. இரண்டு பேரும் இருளில் கடலை நோக்கிக் கூவியழைத்துக்கொண்டே இருக்கின்றனர். மரணத்துயர் காற்றை நிரப்புகிறது. கடல் பதில் தரவேயில்லை.

வெள்ளக்காடாக விரிந்துகிடக்கிறது கடல். உட்கடலுக்குள் போய்விட்டால் கண்ணுக்கு எட்டிய தொலைவு வரை நீர்ப்பெருவெளி. கடலோடியைப் பொறுத்தவரை அப்படியல்ல. கோயில், குளம், தெருக்கள், ஊர்கள் என நில எல்லைகளை நம் நினைவில் பதித்திருப்பது போல, தான் புழங்கும் கடல் கடலோடிக்கு அத்துப்படி. கடலுக்கடியிலும் சமதளம், பள்ளத்தாக்கு, மேடுகள், பாதாளங்கள், சேற்றுநிலம், பாறைகள் எல்லாம் உண்டு. தலைமுறை தலைமுறையாக வரும் அனுபவத்தின் பயனாக அவற்றையெல்லாம் சமூக நினைவு அடுக்குகளில் பதித்து வைத்துள்ளான். கடற்பரப்பின் நிறங்களை, நீரோட்டத்தின் போக்குகளை முன்வைத்து மீன்களின் வரவை  கணிக்கிறான். மீன்களை அடையாளம் காணுகிறான்.

நிலத்தைப் போலன்றி கடல் ஒரு முப்பரிமாண ஊடகம். நிலையாமை என்பது கடலின் அடிப்படைப் பண்பு. ஓடு கயிறு (தூண்டில் கயிறு) கிட்டக் கல்லுடன் (தூண்டிலைக் கடலாழத்துக்குச் செலுத்தும் இரும்புக் குண்டு) கீழே போனபிறகு நீரோட்டங்களின் போக்குக்கு ஏற்ப அது வளைந்து, விறைத்து நிற்பதுண்டு. ஆயினும் தூண்டிலை அணுகும் மீனைத் துல்லியமாய்க் கணித்தறியும் திறன் கடலோடிக்கு உண்டு. இரையை அணுகும் முறை மீனுக்கு மீன் மாறுபடுகிறது. இதை பாரம்பரிய மீனவன் அனுபவத்தில் தெரிந்து வைத்திருக்கிறான். இரையை விழுங்கும் மீனின் எடையைக்கூட அவனால் சொல்ல முடியும்.

எல்லாம் அவன் சுட்டுவிரல் நுனியில் பிடித்திருக்கும் தூண்டில் கயிற்றின் அதிர்விலிருந்து கிடைக்கும் தரவு! இடங்கணிப்பான் (Global Positioning System), எதிரொலிப்பான் (Echosounder/sonar) ஆகிய நவீன மின்னணுவியல் கருவிகள் இன்று சாதாரணமாக எல்லோர்க்கும் கிடைக்கின்றன. கைப்பேசிகளில்கூட இப்போது இடங்கணிப்பான் செயலி உண்டு. ஆனால் பாரம்பரிய மீனவர்கள் பகலிலும் இரவிலும் கண்காணாக் கடலுக்குள் சென்று குறிப்பிட்ட மீன்வளத் திட்டுகளைத் துல்லியமாய்க் கண்டடையும் திறன் கொண்டவர்கள்.

‘கணியம் குறித்தல்’ பாரம்பரிய கடலோடிகளின் அற்புதமான திறன். பகலில் நிலத்தில் தெரியும் மலை முகடு போன்ற அடையாளங்களை எல்லைகளாகக் குறித்து கடலில் குறிப்பிட்ட இடத்தைக் கணித்தறிவதுதான் ‘கணியம் குறித்தல்’. கரையில் மூன்று எல்லை அடையாளங்கள் இதற்குத் தேவை. நேர்கரை, இடது கரை எல்லை, வலது கரை எல்லை. வலையைக் குறிப்பிட்ட இடத்தில் அமிழ்த்திவிட்டு, மறுநாள் அதே இடத்துக்குச் சென்று அந்த வலையை இழுத்து வருவது கணியம் குறிக்கத் தெரிந்தால்தான் சாத்தியம். பனிப்பிள்ளை செறுமங்கரைப் பாரில் அவ்வாறுதான் கணியம் குறித்து வருகிறார். பாரம்பரிய கடலோடிகளின் இந்த ‘மூன்று எல்லை குறிக்கும்’ கணிய சூட்சமம்தான் ஜிபிஎஸ் என்கிற செயற்கைக்கோள் இடங்கணிப்பு நுட்பத்தில் தொழில்படுகிறது.

பூமியைச் சுற்றிவரும் 24 கோள்களிலிருந்து சங்கேத அலைவரிசைகள் இடங்கணிப்பானுக்குக் கிடைக்கிறது. குறைந்தபட்சம் மூன்று செயற்கைக்கோள் அலைவரிசை கிடைத்தால் போதும், ஜிபிஎஸ் கருவி பூமியிலுள்ள எந்த இடத்தையும் சதுரமீட்டர் சுத்தமாகக் கணித்துவிடும். இந்த அறிவியல் சாதனையின் கருகோளை முக்கோணக் கணிப்பு (Triangulation) என்கிறார்கள். பாரம்பரிய மீனவர்களின் மரபார்ந்த கடலறிவுக்கு அருமையான சான்று ‘கணியம் குறித்தல்’ புலமை வாய்ந்த சூழலியல் பேராசிரியர் ஒருவர் மீனவர்கள் கடலில் எப்படி மீன்பிடிக்கிறார்கள் என்று நேரில் பார்க்க விரும்புகிறார். இராபர்ட் அவரை அலெக்சின் படகில் அழைத்துச் சென்ற அனுபவத்தை விவரிக்கிறார்.

வலியதுறையிலிருந்து ஏறத்தாழ 10 கிலோமீட்டர் உட்கடலில் பயணிக்கிறது அலெக்சின் படகு. கரையை நோட்டமிட்டவாறு வரும் அலெக்ஸ் படகு ஓட்டுபவரிடம் வேகத்தைக் குறைக்கச் சொல்கிறார். படகு வேகம் தணிந்து மெதுவாக நகர்ந்துகொண்டிருக்கிறது. ‘படகை நிறுத்து’ என்றவாறு அலெக்ஸ் பேராசிரியரிடம் சொல்கிறார் – ‘இதுதான் சங்குமுகம் கப்பல் பார்’. பேராசிரியர் ஜிபிஎஸ் கருவியில் பார்க்கிறார். சங்குமுகம் கப்பல் பாரின் இருப்பிடத்தில் துல்லியமான இருப்பிட எண்களைக் காட்டுகிறது (Geo Position) பேராசிரியரால் நம்ப முடியவில்லை! அலெக்ஸ் தூண்டில் வீசத் தொடங்குகிறார். கொஞ்ச நேரத்தில் தூண்டில் இரையை ஒரு மீன் அணுகுகிறது. ‘அது ஒரு பெரிய கலவா மீன்’ (Grouper) என்கிறார் அலெக்ஸ்.

“பிறகு அதை ஏன் தூக்காமல் விட்டு வைத்திருக்கிறீர்கள்?”

ஆர்வம் தாங்காமல் பேராசிரியர் கேட்கிறார். அலெக்ஸ் பொறுமையாக விளக்குகிறார்.

“இரையைப் பிடித்தவுடன் தூண்டில் கயிற்றை இழுத்துவிட முடியாது. சிக்கியிருப்பது பெரியமீன், தூண்டில் கயிறு பலவீனமானது. அது மட்டுமல்ல (கலவா) மீன் இரையைத் தொட்டவுடன் தூண்டிலை இழுத்தால் எளிதில் நழுவிப் போய்விடும். இரையை மீன் விழுங்கும் வரை பொறுமையுடன் காத்திருக்க வேண்டும்”.

“உங்கள் விரல் நுனியில் கண் இருக்கிறதா என்ன!”

நூல் முழுக்க இப்படி எத்தனையோ அனுபவங்கள். பொறுமையும் கவன நிலையும் பழங்குடி வாழ்வின் மையக்கூறுகள். கடலில் கரணம் தப்பினால் மரணம் என்பது மட்டுமல்ல, சடலம் கூட மிஞ்சாது.

ஆழமான, அதிர்ச்சியூட்டும் பதிவுகளிடையே சில வேடிக்கையான பதிவுகளும் நூலில் உள்ளன. தொழில்புலமை அவர்களின் மரபான சொத்து என்றால் பாமரத்தனம் கிராமத்து வாழ்க்கையின் இன்னொரு கூறு. எதையும் எளிதாக நம்பிவிடுகிற கிராமத்துப் பண்பு.

‘இரையில்லாத் தூண்டில்’ நுட்பத்தை வலியதுறையில் அறிமுகப்படுத்திய பனிப்பிள்ளை ஏராளம் மீன்பிடித்து வருகிறார். பொறாமைப்படும் ஆரோக்கியம் பிரிசந்தி தரப்பு ‘இரை போடாமல் மீன்பிடித்து வருவது கத்தோலிக்க மத நம்பிக்கைக்கு எதிரானது’ என்று பிரச்சாரம் தொடங்குகிறது. பிரச்சினை பெரிதாகி ஊர்க்கமிட்டியின் கவனத்துக்குப் போகிற நேரத்தில் ஊரிலுள்ள பெரும்பான்மை மீனவர்களும் புதிய நுட்பத்தைப் பயன்படுத்தத் தொடங்கியிருந்தனர். தகராறு, காவல்நிலையம், நீதிமன்றம் என்று சிக்கல் நீண்டுபோனாலும் குறுகிய காலத்தில் அந்தப் பிரச்சாரம் காணாமல் போனது. வலியதுறை கிராமம் மட்டுமின்றி அந்தப் பிரதேசம் முழுவதும் இரையில்லாத் தூண்டில் நுட்பம் பரவிவிட்டது. வானத்தை யார் வலைபோட்டுப் பிடிப்பது?

ஏறத்தாழ அதே காலத்தில் இன்னொரு சுவாரஸ்யமும் அந்தப் பகுதியில் அரங்கேறியது. கத்தோலிக்க மதத் தலைமைகள் கம்யூனிஸ்டுகளுக்கு எதிராகக் கடுமையான பிரச்சாரத்தில் இறங்கியிருந்த காலம் அது. கம்யூனிஸ்டுகளின் அடையாள நிறம் சிவப்பு என்பதன் அடிப்படையில் கடற்கரைப் பிரதேசத்தில் சிவப்புடன் ஒவ்வாமை நிலவியது. ஊரில் கம்யூனிஸ்ட் ஆதரவாளர் ஒருவரின் பெட்டிக்கடையில் தொங்கிக் கொண்டிருந்த செவ்வாழைக்குலைகள் ஒரு கத்தோலிக்க அனுதாபியின் கண்ணை உறுத்த, பாதிரியிடம் போய்ப் புகார் சொல்லியிருக்கிறார். பாதிரியார் கோவிலிலிருந்து அறிவித்தார்

“கம்யூனிஸ்டுகளின் சிவப்புப் பழத்தை ஊரில் யாரும் வாங்கவும் கூடாது, விற்கவும் கூடாது”

ஊர் திரண்டுபோய் அந்தப் பெட்டிக்கடையைத் துவம்சம் செய்துவிட்டது. இது பழைய கதை. அண்மையில் நான் (பரதர்) உவரிக்குப் போயிருந்தபோது கப்பல் மேலே விமானம் இருப்பதுபோல் வடிவமைக்கப்பட்டுள்ள செல்வமாதா கோயிலுக்கு அருகில் இப்படியரு கல்வெட்டுக் குறிப்பைக் காண நேர்ந்தது.

‘உவரி ஊர்ப் பிரதானிகள் 91 பேர் கூடி ஏகமனதாக எடுக்கப்பட்ட தீர்மானமாவது: வெளியூரிலிருந்து உவரியில் திருமணம் செய்துகொள்பவர்கள் சொந்தமாக ஏற்றினங்களை வைத்துத் தொழில் செய்யக்கூடாது’

வலியதுறை கிராமத்தினர் இதுபோன்றவொரு தீர்மானம் எடுத்திருந்தால் பனிப்பிள்ளை என்கிற சாகசக் கடலோடியை வரலாறு அறிந்திருக்காது. நல்லவேளை, அப்படி எதுவும் நடந்துவிடவில்லை.

பிற படைப்புகள்

Leave a Comment