போலி மீட்பன்
கதை: செம்பேன் உஸ்மான் தமிழாக்கம்: லிங்கராஜா வெங்கடேஷ்

by olaichuvadi

­­­­­

முகமது ஃபால் அவனது பொலிவான மாநிறத்திலும், வளைந்த மூக்கின் அமைப்பிலும், குறு குறு நடையிலும், பருந்து கண்களையொத்த நிலைகொள்ளாது அலைபாயும் அவனது பார்வையின் குறுகுறுப்புக்கு அவனது நடைவேகம் சற்று குறைந்ததே என்றாலும், அவன்  ஒரு செனகலிய இஸ்லாமியர்களின் வழிவந்தவனாக இருந்தான். “என்னுடையது எனக்கு மட்டுமேயானது, உன்னுடையதை நாம் பகிர்ந்து கொள்வதை எதுவும் தடுக்கமுடியாது” என்கிற தனது முன்னோரின் பாதையைப் பிசகின்றி பின்பற்றுபவனாகையால் அவன் எந்த வேலையும் செய்ததில்லை. வேறுவகையில் சரியாகச் சொல்வதானால் உடல்நோக எதையும் செய்ய விரும்பியதேயில்லை.

“முகமது, உனது ஊரில் ஏன் பூனைகளே இல்லை” என்று குழந்தைகள் அவனை நோக்கி கிண்டலாகாக் கேட்கும்போதெல்லாம் சட்டென்று தனக்கு தெரியாதெனச் சொல்லிவிடுவான். பூனையும் தன்னைப் போலவே எந்த வேலையும் செய்யாமலே பிழைக்கும் என்று சொல்வதை தவிர்ப்பதற்கு அவனுக்கு இதொன்றுதான் வழி. அந்த அரைப்பாலை நிலத்தில் வாழும் பெரும்பாலான மனிதர்கள் இரவில் அடித்த கூடாரத்தை விடியலில் பிரித்துவிட்டு இடம்பெயர்கிறவர்களாக இருக்கிறார்கள். இந்த நாடோடி மனிதர்களோடு ஒட்டுண்ணியாக எந்த விலங்கும் வாழமுடியாது. அதனால்தான் என்னவோ வடக்கு செனகலில் (இந்நாளைய மாரிதானியா) பூனையைப் பார்க்கவே முடியாது. இனம் இனத்தோடு சேரும், இது சொலவடை. ஆனால் முகமதுவுக்கு இங்கே அப்படியொரு இணை இல்லை. இந்த நாட்டில், ஒரு வேளை எங்காவது ஒரு பூனை தென்பட்டால் அது பரிதாபகரமானது.

எந்த வேலையும் செய்யாமலே களைத்துப்போன முகமது வெறுங்கையுடன் மேற்கேயிருக்கும் பிலால்களின் நாட்டிற்கு பயணப்பட முடிவு செய்தான். அவனைப் பொறுத்தவரை இங்கே உள்ள கறுத்த மனிதர்கள் அவனை விடக் கீழானவர்கள். அந்தப்புரங்களில், அங்கே பிறக்கும் குழந்தைகளின் தந்தை யாரென்பதில் சிக்கல் ஏதும் எழாமலிருக்க, காயடிக்கப்பட்டதற்குப் பிற்பாடு காவல் செய்வதற்கே லாயக்கானவர்கள்.

செனகலை அடைந்த முகமது ஃபால் தனது பெயரை மாற்றிக்கொண்டான். அவன் தன்னை ‘அய்தரா’ என அழைத்துக் கொண்டான், இந்த பெயர் அவனுக்கு எல்லா வாய்ப்புகளுக்குமான கதவுகளைத் திறந்து விட்டது. சென்றவிடமெல்லம் மிகுந்த மரியாதையுடன் வரவேற்கப்பட்டான். மாரிதானிய மொழியில் குரானைக் கற்றிருந்தமையால் – செனகலியர்கள் மிகுந்த மதிப்போடு பார்க்கின்ற ஒன்றாக அந்த மொழி இருந்தது – அது அவனுக்கு ஆதாயமானதாக இருந்தது. அவன் முன்னின்று நடத்தும் தொழுகைகள்,  நெடுநேரம் முழங்காலிட்டே அமர்ந்திருப்பது என அவனது செயல்களில் உள்ளூர் மக்கள் திக்குமுக்காடிப் போயிருந்தார்கள். புனித அய்த்ராவின் வழித்தோன்றலை தங்களது இமாமாக பெற்றிருப்பது தங்களுக்கு வாய்த்த பெரும்பேறாகக் கருதினர்.

இந்த புகழாரங்களின் கணத்தில் தனது பங்காளியான பூனையைப் போலவே அவன் முதுகு வளைந்து போயிருந்தான். இயற்கையாகவே அவனுக்கு வாய்த்திருந்த அருமையான பாடுகுரலால் குறிப்பாக பாடல்களின் வரிகளின் இறுதியை நெருங்கும்போது உச்சஸ்தாதியில் குரலெடுத்து  பின் சன்னமான குரலில் நீட்டித்து முடிக்கும் ஒவ்வொரு முயற்சியிலும், சுற்றியிருந்தவர்களை அவனால் அசத்த முடிந்தது. ஐந்து தொழுகைகளின் இடைவெளி நேரத்தை ஒரு ஆட்டுத்தோலில் உட்கார்ந்தபடி ஜெபமாலையின் முத்துக்களை விரல்களால் உருட்டியபடி கழித்துக்கொண்டிருப்பான்.

உணவு வேளைகளில் மற்றவர்களிடமிருந்து தனித்து பரிமாறவேண்டி அடம்பிடிப்பான். குழந்தைகளுக்கும், வயதுவந்தவர்களுக்கும் அவன் செய்கிற ஒரே கைமாறு வரைமுறையற்று அவன் வாயில் ஊறும் எச்சிலை அவர்களின் மீது பேசும்போது தெளிப்பதுதான். அதையும் அவர்கள் முகம் முழுக்க பரவுமாறு கைகளால் துடைத்தபடி “ஆமீன்….. ஆமீன்….” என்பர். மனசாட்சியின் அடியாழத்திலும், தனியனாக இறைவனை நினைக்கும்போதும் தன்னுடைய இந்த போலியான வாழ்க்கை குறித்து முகமது என்ன நினைப்பான் என்பது நமக்கு வியப்பை ஏற்படுத்தும்.

அங்கே நாலு இடம் போய்வர பழகிவிட்ட நிலையில் வயிற்றுக்குப் போதுமானதை மட்டும் ஒவ்வொரு வீட்டிலும் பெற்றுக்கொண்டான். ஆரம்பத்தில் எதையும் கழியாது வாங்கித்தின்ற இந்த விருந்தாளிக்கு நாட்கள் செல்ல செல்ல நாக்கு ருசி கேட்க ஆரம்பித்தது. வழக்கமான ‘குஸ்குஸ்’ (சற்று பருத்த கோதுமையோடு, இறைச்சி மற்றும் காய்கறி சேர்த்துத் தயாரிக்கப்படும் வட ஆப்பிரிக்க உணவு வகை) உணவானது தூக்கமின்மையை ஏற்படுத்துவதாக அவனுக்குத்தோன்றியது. மேலும் அதனால் செரிமானக் கோளாறுகள் வருவதாக புகார் செய்தான். சொர்க்கத்துக்குச் செல்லும் பாதையில் வழி தப்பாமல் பயணிப்பதில் தீவிரமாக இருந்த அவனது உபசரிப்பாளர்கள் அவனது நாக்குக்கு நயமாக விதவிதமாய் பொங்கிப் போட்டார்கள். சில நேரங்களில் தூரத்திலிருந்து வாசனை பிடித்த உணவு சரிதானா என்று பார்க்க அடுக்களைக்குள் நுழைவதற்கும் தயங்க மாட்டான். இது அந்த மக்களால் சகோதரத்துவ பண்பாக மதிக்கப்பட்டது.

இப்படியான நல்ல ஊட்டத்துக்கும் மேலாக முகமது ஃபால் நிறைய காசும் சேர்த்துவிட்டான், ஆனாலும் தான் படும் பாடுகளுக்கு இது ஒருபோதும் ஈடாகாது என்று பொறுமுவான். இங்கேயுள்ள கறுப்பர்கள் தொழுகையின் முக்கியத்துவம் மீது குறைவான மதிப்பே கொண்டிருந்தனர் என்பது நிச்சயம். அங்கே அவனுக்கு மற்றுமொரு குறையும் இருந்தது, ஏன் அவர்கள் (செனகலியர்கள்) பூனை வளர்ப்பதில் விடாப்பிடியாக இருந்தார்கள்? ஒவ்வொரு முறையும் வீடுகளில் பூனையை எதிர்கொள்ளும்போது, கோபக்கார பூனையின் மீசை மயிரைப் போல அவனது மயிர் சிலிர்க்கும், அவன் முகத்தை சுளித்தவாறே பூனையை விரட்டுவான். சிலநேரங்களில் அந்த மக்களிடம் பூனைகளின் உதவாக்கரை தன்மை குறித்து போதிப்பான்.

இப்படியான சிற்சில வெறுப்பான விசயங்கள் அவனுக்கு அங்கே இருந்தபோதிலும், கால ஓட்டத்தில் ஒரு இமாமாக அவனது புகழ் ஓங்கிக்கொண்டேயிருப்பதை முகமது உணர்ந்தேயிருந்தான். முகமது கிறுக்கித் தரும் குறியீடுகளைக் கொண்ட காகிதத்துண்டுகளை மக்கள் எப்போதும் தங்களுடன் வைத்துக்கொண்டே திரிந்தார்கள். அவன் தனது அடையாளத்தையும் உண்மையான நோக்கத்தையும் மறைப்பதற்கு அதிகம் மெனெக்கெடத்தான் செய்தான். தனது அருமை பெருமைகளை உயர்த்திக்கொள்வதற்கு எந்த எல்லை வரை செல்லவும் தயங்கவில்லை, தனது உடல் நரகம் சேர்வதிலிருந்து விலக்குப் பெற்றிருக்கிறது என அறிவிப்பும் செய்தான். மாதங்கள் கழிந்தன, தனது சேமிப்பு கணிசமான அளவு உயர்ந்துகொண்டே வருவதைக் கவனித்தான். முன்பொரு மாலையில் அவன் எவ்வாறு அங்கே வந்து சேர்ந்தானோ அப்படியே ஒரு நாள் காலையில் திடீரென யாரிடமும் சொல்லாமல் கிளம்பிவிட்டான். “அந்திக்கருக்கலில் வந்துசேர்ந்த அந்நியனை விடியக்கருக்கலில் தேடாதே” என்பது (செனகலிய) சொலவடை.

தனது மூட்டை முடிச்சுகளை தோளில் தொங்கவிட்டவாறு தனக்கு விருப்பமான அட்லஸ் மலைகளை நோக்கி விரைந்து கொண்டிருந்தான் முகமது. கொஞ்சமாகவே எங்கேனும் ஓய்வெடுத்து, இரவும் பகலுமாக நடந்துகொண்டேயிருந்தான், அவனது நினைவுகளெல்லாம் அந்த செல்வத்தை எப்படி எவருடைய சந்தேகங்களையும், ஆபத்துகளையும் எதிர்கொள்ளாமல் அனுபவிப்பது என்பது குறித்தே இருந்தது. இதற்காகவே அவன் எந்த நேர்வழியிலும் செல்லாமல் சுற்றுவழியாகவே போய்க்கொண்டிருந்தான். ஆனால் அந்த வழியனைத்தும் எதற்கும் கட்டுப்படாத கள்வர்களின் வசமிருக்கும் விசயம் அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை. அவன் இவ்வாறு போய்க்கொண்டிருக்கையில் தன்னைத் தானே மெச்சிக்கொள்ளவேறு செய்தான் “சைத்தானுக்கு நன்றி!, ஊரார் உடைமகளை ஏமாற்றிப் பறிக்கும் வித்தையை நன்றாகவே தெரிந்துவைத்திருக்கிறேன்”.

அது சரியான கோடைகாலம், தீப்பிழம்பாய் இறங்கிக்கொண்டிருந்த கதிரவனின் கரங்கள் காய்ந்த புல்வெளிகளுக்குத் தீவைத்துக் கொண்டிருந்தன. காற்று அந்தத் தீயினை வாரியடித்து தூரத்தே தெரியும் திரட்டுப் பகுதிக்குத் தள்ளிக்கொண்டும் அப்பகுதியின் நெடுநாளைய அமைதியைக் கலைத்தபடியும் ஊளையிட்டுக் கொண்டே இருந்தது. தகிக்கும் தரையின் மேற்பரப்பிலிருந்து மேலெழுந்த வெப்பக்காற்று வெற்றுவானத்தை நிறைத்துக்கொண்டிருந்தது. விலங்குகளின் எலும்புக்கூடுகள் அங்கே கிடந்தன, அதன் சிதைவுகளின் ஒவ்வொரு நிலையையும் இந்தச் சூழல் சுத்தமாகவே வைத்திருக்கிறது. மேலும் தொடர்ந்து வீசும் காற்று இவற்றை மணலில் புதைத்துக் கொண்டிருந்தது. காற்றில் பறவைகளின் கீச்சொலிகள் இயற்கையிடம் அவை முறையிடுவது போலிருந்தது. நிசப்தமும் நிலைகுலைவும் அங்கே விரவிக்கிடந்தது.

முகமதுவின் கண்ணுக்கெட்டிய வரையில் அந்த ஒற்றை மரத்தைத் தவிர வேறெந்த உயிரினமும் அங்கு தென்படவேயில்லை. அந்தப் பாலைவனத்தில் ஒற்றையாய் தப்பிக்கிடக்கும் அது ஒரு அதிசய மரமே, ஏன் அதிசயமென்றால் அந்த வறட்சியிலும் இலைகள் மிகுந்து பசுமையாயிருந்தது. அது ஒரு புளியமரம்.  தொழுகை நேரம் கிட்டத்தட்ட நெருங்கியிருந்தது. நெடிய நடைபயணத்தின் களைப்பிலும் வெக்கையின் தாக்கத்தாலும் அவன் அந்த ஒற்றைப் புளியமரத்தை அண்டியிருந்தான். உறங்கி எழுந்து தொழுவதா இல்லை தொழுதுவிட்டு உறங்குவதா என்று வேறு யோசித்துக் கொண்டிருந்தான். எப்படியும் முடிவெடுத்தாக வேண்டும். இறுதியாக புளியமரத்தின் அடியில் நீட்டிக்கிடத்தி உறங்கப் போனான். என்னவென்று தெரியவில்லை திடீரென எழுந்து உட்கார்ந்தவன் ஒத்தையில் இருக்கையிலும் பெருங்குரலெடுத்துக் கத்தினான் “ஏய்.. ஏய்… ஆமா…நீ மேலேதான் இருக்கிறாய் கீழே இறங்கு…”

அவனது அலறல் நாலாபுறமும் எதிரொலித்தது. மூன்று முறை அவன் கூப்பிட்டும் மேலிருந்து பதிலொன்றுமில்லை. பிறகு எழுந்துகொண்டான், நான்கு திசைகளிலும் மாறி மாறி ஓடினான். ஆனாலும் அங்கே அவனைத் தவிர யாருமே இல்லை. அந்த ஒற்றைப் புளியமரத்தையும் அவனையும் தவிர அங்கே ஒருவருமில்லை. உள்மனது அதிகமான சந்தேகத்துடன் அவனது பொக்கிசத்தை எங்காவது புதைக்கச் சொல்லி அவனைத் தூண்டியது. தனது முழங்கை மூழ்கும் அளவிற்கு தரையைத் தோண்டிவிட்டான், பிறகு சுற்றும் முற்றும் யாரேனும் தென்படுகிறார்களாவென்று போய் பார்த்தான். ஒருவருமில்லை. திரும்பி வந்து மேலும் இருமடங்கு ஆழத்துக்கு தோண்டினான். மீண்டும் போய் சுற்றிப்பார்த்தான், இப்போதும் ஒன்றுமில்லை. அடர்ந்த மரக்கிளைகளுக்குள் ஊடுருவிப் பார்த்தான், அங்கும் எவரும் ஒளிந்திருக்கவில்லை. குழிக்கு வந்து மறுபடியும் ஆழத்தோண்டினான், முடிந்தவுடன் குழிக்குள்ளேயே உட்கார்ந்து சில்லரைக் காசுகளை எண்ணிக்கொண்டிருந்தான். அந்த அமைதியான சூழலில் காசுகள் ஒன்றன் மீதொன்று பட்டுத் தெறிக்கும் சத்தம் தெளிவாகக் கேட்டுக் கொண்டிருந்தது. மகிழ்ச்சியோடும், நம்பிக்கையோடும் எல்லாவற்றையும் புதைத்தான், பிறகு உடலை நீட்டி மூடிய குழியின் மேலேயே படுத்துக்கொண்டான். ஆனாலும் எல்லாம் வல்ல இறைவனுக்கு பங்கு எதுவும் கொடுக்கவில்லை என்பது நினைவில் இருக்கத்தான் செய்தது. அவன் இறைவனிடம் தெரிவித்தான் “உனக்குத் தருவதாக உறுதியளிக்கிறேன்”.

இவ்வளவும் நடந்து முடிந்தபிறகும் அவனுக்கு தூக்கம் வருவதற்கொன்றும் நெடுநேரம் ஆகவில்லை. அதுவும் அவன் அந்த பாலைவனத்தில் அலைந்து திரிவதான ஒரு கனவோடே வந்தது. (கனவில்) கண்ணுக்கெட்டும் தூரம் வரையும் மணல் மேடுகளும் சரிவுகளும் ஊடுபாய்ந்து கிடக்கும் பெரும் மணற்கடல் காட்சியளித்தது. அமைதியான நடுக்கடலில் கப்பல்கள் செல்வது போல, மணலில் கால் புதைத்து ஒட்டகங்கள் தள்ளாடி நடந்துகொண்டிருந்தன, அதன் நீண்ட கழுத்தின் மேல் தலையானது முன்னும் பின்னுமாய் அசைந்து கொண்டிருந்தது.

வீசியடிக்கும் அந்த மணற்காற்றிலும், அதன் கடிவாளாங்கள் பித்தளையிலான மூக்கு வளையத்தில் அசையாமல் தொங்கிக்கொண்டிருந்தன. இரும்பினும் கடினமான மணலின் துகள்கள் அவனது உடுப்புகளைத் துளைத்து தோலில் குத்தியிருந்தன. பிறகு அக்கனவு மெதுவாக யதார்த்தத்தை ஒத்த நிலைக்கு நெருங்கி வந்தது, மெலிந்த உடலுடன் இடுப்பில் மட்டுமே உடை உடுத்தியிருந்த கரிய நிறமுடைய ஒருவன் தனது உடலைத் தூக்குவதை முகமது பார்த்தான். அந்த மனிதன் முகமதுவின் புதையலைத் தோண்டியெடுத்தான், பிறகு சாவகாசமாக இவனது தலையை மழிக்க எத்தனித்தான். ஒருவழியாக முகமது விழித்துவிட்டான், ஆனாலும் கண்கள் சொக்கிக்கொண்டுதான் இருந்தன, கொட்டாவி விட்டவாறே இறைவனுக்கு நன்றி சொல்லிக்கொண்டான்.

ஒரு நல்ல இறைநம்பிக்கையுடையவனாக! அந்த நாளின் முதல் தொழுகை நினைவுக்கு வர (தண்ணீர் இல்லாத இடங்களில் மணலைக் கொண்டு தொழுகைக்கு முன்பு உடலைச் சுத்தம்  செய்துகொள்ளலாம்) முதலில் மணலை அள்ளி தனது கைகளையும் தோள்களையும் அவன் தொட்ட அசுத்தங்கள் அனைத்தும் தீர துடைத்துக்கொண்டான், பின் முகத்திலும் தலையிலும் மணலைத் தெளித்துக்கொண்டான். இதையெல்லாம் செய்துகொண்டிருக்கும்போது தனது பிடரியில் மயிர் இல்லாததை உணர்ந்து அதிர்ந்து போனான். சட்டென்று இரு கைகளாலும் தலைகோதிப் பார்த்தான் சுத்தமாகத் தலை மழிக்கப்பட்டிருந்தது. மிகுந்த சிரமத்துடன் மெதுவாகத் தன்னைக் கட்டுபடுத்திக் கொண்டே தாடையைத் தடவினான் தாடியும் போயிருந்தது. அச்சம் தொற்றிக்கொள்ள வெறித்துப் பார்த்தவனாய் தனக்குள் ஏதோ அசாதாரணாமய் நிகழ்ந்திருப்பதை மெல்ல உணர்ந்துகொண்டான். அங்கே பேச்சொலி கேட்பதை அவனால் உணரமுடிந்தது, ஆனால் அதுவும் அவனுக்குள்ளிருந்தே வந்தது.

“இறைவன்தான் உன் தலையை மழித்தவன்” முதல் குரல் சொல்லியது.

“இதை உன்னால் எப்படிச் சொல்ல முடிகிறது, இறைவன் யார் தலையையும் மழிப்பவனில்லை” இது மற்றொரு குரல்.

முகமதுவுக்கு கோபம் கொப்பளிக்கிறது. தொடர்ந்து அந்த உரையாடலை கவனிக்கிறான். அக்குரல் அடுத்து ஒரு நமட்டுச் சிரிப்புடன் அவனை வாழ்த்தியது.

“இறைவனிடம் நம்பிக்கை வை, எதிலும் அவனது கருணை நிறைந்திருக்கிறது”

“ஹா….ஹா… எனக்கு நகைப்பை உண்டாக்குகிறாய், உன்னை அண்டிவந்த அந்த வறியவர்களை யாருடைய பெயரில் நீ மொட்டையடித்தாய்?”.

முகமது ஆவேசத்துடன் தலையசைத்து அந்தக் குரலை அடக்க முயன்றான். பலனில்லை. தனது கைகளால் காதுகளைப் பொத்தினான். மேற்கொண்டு கேட்க அவன் விரும்பவில்லை, ஆனாலும் அக்குரல் தொடர்ந்தது.

“தொழு” அவனுக்கு கட்டளையிட்டது, “ஏற்கனவே இரு தொழுகைகளை தவறவிட்டு விட்டாய்”

.“முதலில் உனது புதையலைப் பார்” இது வேறொரு குரல், “அது இல்லாமல் நீ எவ்வழியிலும் மதிக்கப்பட மாட்டாய். நீ ஒட்டகங்களைப் பெறமுடியாது. குடிக்க கஞ்சி கிடைக்காது. பணத்தை முதலில் பத்திரப்படுத்திக்கொள். உன் வயிறு நிறைந்திருப்பது உறுதியானால் தொழுவதென்பது எளிதாகும்”

முகமது இந்தக் கடைசிக் குரலுக்கு உடன்பட்டான். சுற்றிலும் பதைபதைக்கப் பார்த்தான், மிக வேகமாக மண்ணைத் தோண்டி சுற்றிலும் எறியத் தொடங்கினான், அவனது செயல்கள் மனிதனுக்குரியனவாக இல்லை. வெள்ளாடு விளையில் விழுந்தது போல், தடுக்க முயன்றால் யாரையும் கடித்துக் குதறிவிடும் நிலையிலிருந்தான். வியர்த்து விறுவிறுத்து முதுகு வளைந்து கிடந்தான், நாக்குத் தள்ளியிருந்தது. குழியையொட்டி குவிந்த மண்ணைக் கால்களால் தள்ளினான். அவனது மேலங்கி வேறு அவனது குரல்வளையை பாதி நெரித்திருந்தது, எனவே கழுத்தைச் சுற்றியிருந்த அங்கியைத் தளர்த்திவிட்டு இன்னும் வேகமாகத் தோண்டினான். குழியின் அடியைத் தொட்டுவிட்டான், பரிதாபம்… மென்மையான, கருத்த மயிர்கற்றை மட்டுமே அவனது கைகளில் மிஞ்சியது.

மேலே தூக்கிப் பார்த்தான், ஒன்றும் விளங்காமல் அதை வெறித்தான், பிறகு வெற்றுக்குழியை உற்றுப்பார்த்தான். பார்வை மரத்தை நோக்கித் திரும்பியது, இறைவனை சாட்சியாகக் கொண்டு அலறினான், “இறைவா! இது நான் தானா?”.

ஒரு கையில் மயிர்கற்றையை வைத்துக்கொண்டு மறு கையால் தலையில் அடித்தவாறே கண்ணீர் பெருக்கெடுக்க “இறைவா, நான் முகமது ஃபால் இல்லை” மீண்டும் கூறினான் நா தழுதழுக்க.

“எனது நண்பனே, நண்பன் முகமது ஃபாலே! வந்துவிடடா என்னை இந்நிலையிலிருந்து விடுவித்து விடு” தன் ஆவி முழுவதும் தொலையும்படி கத்தினான். அதன் எதிரொலி இவன் குரலை விழுங்குமளவுக்கு இருந்தது, அது அந்த பாலைவெளி முழுவதும் பரவும் முன்பாக தகரக் கூரையில் கல்லெறிந்தால் எழும் ஓசை போல சுற்றிலும் எதிரொலித்துவிட்டு சென்றது. அந்தச் சத்தம் தொலைவில் சென்று கரைந்தது. “என் நெடுநாளைய நண்பனே, முகமது ஃபால்… என்னிடம் விளையாடாதே. எனக்கு உன்னை நன்றாகத் தெரியும்”

தொலைவில் எங்கோ நிலைகுத்திய பார்வையோடு, காதுகளைத் தீட்டிக் கொண்டு கேட்டுப்பார்த்தான். ஒன்றுமே கேட்கவில்லை. வெறுமையே நிலவியது. திடீரென அந்த எக்காளக் குரல் மீண்டும் எழும்பியது.

“நீ தொழப் போகிறாயா இல்லையா”, என்ன செய்கிறோம் என்கிற ஓர்மை கொஞ்சம் இருக்கத்தான் செய்தது அவனுக்கு. மெல்ல எழுந்து மெக்காவின் திசை நோக்கி நின்றான், கைகளைத் தூக்கி உள்ளங்கைகளை முகத்தை நோக்கி விரித்தவாறு “அல்லாஹு அக்பர்….” என்று தொழத் தொடங்கினான். இருந்தாலும் அவனது கண்கள் அவன் காசுகளைப் புதைத்த குழியைச் சுற்றியே ஓடிக்கொண்டிருந்தது.

“நீ சேர்த்ததையெல்லாம் கொள்ளை கொடுத்த பிறகும் உன்னால் தொழ முடிகிறதா…?, இறைவனிடம் கேள் அந்தத் திருடன் யாரென்று.” இது மற்றொரு குரல். அவன் கைகளை உயர்த்தியவாறே செய்வதறியாது நின்று கொண்டிருந்தான். பின் அவன் தனது கனவை மீள நினைவுக்கு கொண்டுவந்தான், தனக்குள்ளே எண்ணிக் கொண்டான் “நான் ஒன்றும் அயர்ந்து தூங்கிவிடவில்லை”.

அவன் அந்த திருடனைப் பார்த்திருந்தான், அவன் தலைமையிரை மழிப்பதைக்கூட உணரமுடிந்திருந்தது. மேலும் எல்லாம் வல்ல இறைவன் இதையல்லாம் நடக்கும்படி பார்த்துவிட்டு வாளாவிருந்தார். அல்லா தனது குரலுக்கு என்றும் செவிமடுக்கப் போவதில்லை என்று நினைத்துக்கொண்டு “இல்லை, நான் இனிமேல் ஒருபோதும் தொழப்போவதில்லை” என்று மெதுவான குரலில் பேசினான். காலடித்தடம் எதுவும் தென்படும் என்ற நம்பிக்கையில் மரத்தை மூன்றுமுறை வீணாகச் சுற்றிவந்தான். வானத்தின் எட்டாத உயரத்தில் வலசைப் பறவையொன்று மகிழ்ச்சியாக பாடிச்சென்றது. முகமது ஃபால் அந்தப் பறவையை வைதான். பிறகு சட்டென்று தன்னந்தனியனாக இருப்பதை உணர்ந்தான். “மூர்களின் மொழியிலே சொல்வதனால், இந்த அடிமைகளின் மக்கள்(கறுப்பினத்தவர்கள்) எல்லாம் திருடர்களே!” என்று முனுமுனுத்தான்.

அவனுக்குப் பித்தம் தலைக்கேறியது, ஒரு கோட்டிக்காரனைப் போல் பாலைவனத்தினூடே ஓடினான், அவனது கிழிந்துபோன மேலங்கி காற்றிலே படபடத்தது. அப்போதுதான் அவன் உணர்ந்திருந்தான் ஒரு திருடனாக இருப்பதற்கு அல்லாவின் மீது நம்பிக்கை வைப்பது அவசியமில்லையென்று.

ஆசிரியர் குறிப்பு

ஆப்பிரிக்க சினிமாவின் தந்தை என்றழைக்கப்படும் செம்பேன் உஸ்மான்(1923-2007), வடமேற்கு ஆப்பிரிக்காவின் செனகல் நாட்டில் 1923ம் ஆண்டு பிறந்தவர். இரண்டாம் உலகப்போரின்போது செனகல் பிரெஞ்சு காலனியாய் இருந்தமையால் கட்டாய இராணுவ சேவையில் சேர்க்கப்பட்டார், பிற்பாடு 1947ல் பிரான்ஸ் சென்று தெற்கு பிரான்ஸின் மார்சே நகரத்தின் துறைமுகத்தில் சரக்குக் கையாளும் தொழிலாளியாகப் பணிபுரிந்தார். மார்சே நகரத்தில் வாழ்ந்தபோது பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியிலும் (இன்றும் வலுவாக உள்ள அதே நேரத்தில் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து முற்றிலுமாக விலகிக்கொண்ட) நிசிஜி தொழிற்சங்கத்திலும் தன்னை இணைத்துக்கொண்டார். வியட்நாமிய காலனியப் போரின்போது மார்சே துறைமுகத்திலிருந்து வியட்நாம் செல்லவிருந்த பிரான்ஸின் ஆயுதக்கப்பலைத் தடுத்து நிறுத்தும் போராட்டாத்திற்கு தலைமையேற்றார். மார்சே நகரத்து வாழ்க்கை செம்பேனின் கலை இலக்கிய வாழ்விற்கு வலுவான அடித்தளமிட்டது. அவரது முதல் நாவல் இங்கு வாழ்ந்த அனுபவங்களைக் கொண்டே எழுதப்பட்டது. தனது 40 வயதில்தான் செம்பேன் சினிமாவைக் கற்றுக்கொண்டார். பிரான்சுக்குச் சென்று சினிமா கற்றுக்கொண்ட அவருக்கு முந்தைய படைப்பாளிகள் போலல்லாது 1963ம் ஆண்டு சோவியத் ஒன்றியம் சென்று மாஸ்கோவிலிருந்த (மார்க்ஸிம்) கார்க்கி திரைப்பட கழகத்தில் இணைந்து சினிமாவைப் பயின்றார். 1966ல் தனது முதல் முழுநீளத் திரைப்படத்தை எடுத்தார்.

செம்பேன் உஸ்மானின் படைப்புகள் வெறுமனே ஆப்பிரிக்கத் தொன்மங்கள் மீதல்லாது அவர்களது பண்பாடு மற்றும் வாழ்வியல் குறித்த வளமான வாய்மொழி வழக்காறுகளில் வேர்கொண்டவை அதே நேரத்தில் வட ஆப்பிரிக்காவில் இஸ்லாமின் பரவல், காலனியமயமாக்கல், பின்காலனிய செனகலின் அரசியல் பண்பாட்டுச் சூழல் போன்றவற்றின் மீது கடும் விமர்சனம் கொண்டவை. ஐரோப்பிய அறிவுஜீவிகளால் குறிப்பாக பிரெஞ்சுக்காரர்களால் எழுதப்பட்ட/தொகுக்கப்பட்ட ஆப்பிரிக்கா குறித்த எழுத்துக்கள், காலனியக் கல்விமுறையின் பின்னணியில் வந்த ஆப்பிரிக்க அறிவுஜீவிகளின் எழுத்துக்கள் என இவை எல்லாவற்றிற்கும் வெளியில் இடதுசாரி இயக்கங்களில் பங்குபற்றிய ஒரு தொழிலாளியாக இருந்து பின்னாளில் எழுத்தாளராக, சினிமாக் கலைஞராக உருவானவர்.

ஒரு தனித்துவமிக்க ஆப்பிரிக்க கதைசொல்லியாக தன்னை நிறுவிக்கொண்ட உஸ்மானின் அனைத்து படைப்புகளும் அடிமைமுறையின் வரலாறு, பெண்ணுரிமை, சுரண்டல், உள்ளூர் பண்பாடுகளைச் செரித்துக் கொள்ளாத அதற்கு அதிகமும் முகம் கொடுக்காத இஸ்லாத்தின் மீதான விமர்சனப் பார்வை போன்றவற்றில் மையம் கொண்டவை. போலி மீட்பன் என்கிற இந்த சிறுகதை “தொல்குடித் தழும்புகள்” என்கிற அவரது சிறுகதைத் தொகுப்பின் முதல் கதையாக இருக்கிறது. இந்த தொகுப்பு லென் ஆர்ட்சென் என்ற ஆங்கிலேயரால் பிரெஞ்சிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.

பிற படைப்புகள்

Leave a Comment