அகவை நாற்பத்தி மூன்றில் வெங்கிடசாமி
வா.மு.கோமு

by olaichuvadi

 

குமாரசாமி குளித்து முடித்து விட்டு பாத்ரூம் கதவை திறந்து வெளிவந்தான். இடுப்பில் துண்டு மட்டும் சுற்றியிருக்க தலைமுடியை உதறிக் கொண்டே தன் அறை நோக்கிச் சென்றவன் கண்ணிற்கு ஹாலில் ஷோபாவின் மீது அன்றைய தினத்தந்தி கவனிப்பார்றறுக் கிடக்கவே அதைத் தூக்கிக் கொண்டு வந்தான். அப்பா இந்த நேரத்திற்கு ஷோபாவில் அமர்ந்தபடி கண்ணுக்கு கண்ணாடி மாட்டியபடி பேப்பரை புறட்டிக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் சமையல் கட்டிலிருந்து தோசை மணம் வீடு முழுக்க இருக்கவே அவர் இன்று நேரமே வயிற்றுக்கு ஆகாரம் போட சென்றிருப்பார் என நினைத்தான். அறைக்குள் வந்தவன் டேபிளில் கிடந்த அலைபேசியை எடுத்து தன் முகநூல் பக்கத்தை ஒரு பார்வை பார்த்தான்.

குளிக்கச் செல்வதற்கும் முன்பாக தன் புரபைல் படத்தை மாற்றிச் சென்றிருந்தான் குமாரசாமி. பதினைந்து விருப்பக்குறிகள் விழுந்திருந்தன. வெங்கிடசாமி மாமன் கமெண்ட் இட்டிருந்தார். ‘மாப்ளே! செமெடா மாப்ளே! அந்தக் கண்ணாடிய இன்னிக்கி குடு! நானும் கண்ணாடி போட்டுட்டு செலுபி எடுத்துக்கறேன்” என்று கூறியிருக்க இவன் அதற்கு என்ன கமெண்ட் பண்ணலாமென நினைத்தபடி தலைக்கு மரச்செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெயை தடவிக் கொண்டான். “உங்களுக்கு இல்லாத கண்ணாடியா மாமா, வெச்சுக்கோங்க!” என்று போட்டு விட்டு மாமன் அதற்கு லைக் குத்துகிறாரா? என்று சற்று நிமிடம் கவனித்தான். மாமனைக் காணவில்லை. மாமன் குளிக்கச் சென்றிருக்கலாமென இவனாக நினைத்துக் கொண்டே பேப்பரை எடுத்துக் கொண்டு படுக்கையில் அமர்ந்தான்.

தலைப்புச் செய்தியே கேடான செய்தியாக இருந்தது.பேரிடர் பயிற்சியின் போது கல்லூரி மாணவி லோகேஸ்வரி பரிதாபச் சாவு. பதை பதைப்போடு விசயத்தைப் படித்தான். கைதானவர் போலிப் பயிற்சியாளர் என்று அவரது புகைப்படமும் போட்டிருந்தார்கள். லோகேஸ்வரியின் வயது பத்தொன்பது என்று இருக்கவே இவன் பெல்லாவை நினைத்துக் கொண்டான்.
பெல்லாவை கடந்த ஒருவருட காலமாக இவன் உருகிக் காதலிக்கிறான். இந்த இடத்தில் உருகி என்ற வார்த்தை சரியானது தானா? என்றும் தெரியவில்லை. மெழுகுவர்த்திகள் தான் எரிய எரிய உருகி வழியும். அப்படிப்பார்த்தால் பெல்லா இவன் தலையில் தீயைக் கொளுத்தியிருக்க வேண்டும். இவன் உருகி வழிந்து கொண்டிருக்க வேண்டும். பெல்லாவுக்கு பேரிடர் பயிற்சிக்கெல்லாம் எந்த நோக்காடும் வரவில்லை. அவள் டிப்பார்ட்மெண்ட் ஸ்டோரில் வேலை பார்க்கிறாள். பெல்லாவின் பிறந்த நாள் முடிந்து பத்து நாட்களே ஆகியிருந்தது. இவன் அவளுக்கு பச்சை வர்ணத்தில் சுடிதார் வாங்கி பரிசளித்திருந்தான்.

தனது வயது பத்தொன்பது என்று தகவல் சொல்ல முந்தைய நாள் இரவில் பனிரெண்டு மணி வரை கண்களில் தண்ணீரை விட்டுக் கொண்டு விழித்திருந்து டான் என அவளை அலைபேசியில் அழைத்து வாழ்த்தைச் சொன்னான். அவளோ தூக்கத்தில் புறண்டு அலைபேசியை எடுத்திருப்பாள் போல! ‘சாமத்துல என்னடா வாழ்த்து மயிரு வேண்டிக் கிடக்கு? தூங்க வுடுடா!’ என்று தன் அலைபேசியை அணைத்துக் கொண்டாள். இதிலெல்லாம் சிக்கல் இருக்கிறது என்று இவனுக்கே தெரியும். அப்படி கூப்பிடாவிட்டால் காலையில் ‘நாயே, நீ கூப்பிடுவீன்னு பன்னெண்டு மணிக்கி போனை கையிலயே வச்சுட்டு உட்கார்ந்திருந்தேன் தெரியுமா! உன்னையப் போயி லவ் பண்டினேன் பாரு. என்னை கரடி பொம்மையாலயே அடிச்சிக்கணும்’ என்பாள்.

குமாரசாமி என்கிற பெயரை இவன் காதலிக்கத் துவங்கிய காலத்திலிருந்தே பெல்லா வெறுத்தாள். ’பொட்டுக் காட்டு வலசு குமார்னு உன்னோட முகநூல்ல போட்டுக்க! சாமியத் தூக்கிடு’ என்று அவள் சொல்லவும் தன் வீட்டிலிருந்து வெளிஉலகம் வரை சந்திக்கும் மனிதர்களிடமெல்லாம் குமார் என்றே அழைக்கும்படி சொல்லி விட்டான். ஆக குமாரசாமி குமார் ஆன கதை இவ்ளோ சுருக்கமாக இருக்கிறது வாசிப்பாளர்களுக்கும் சிரமம் தான்.

பொட்டுக் காட்டு வலசிலிருந்து பத்துக் கிலோ மீட்டர் தூரத்திலிருக்கும் குருநகரமொன்றில் தான் இவனது போட்டோ ஸ்டூடியோவும் இருக்கிறது. அங்கு தான் பெல்லாவும் இருக்கிறாள். பெல்லாவின் முகநூலில் இவன் எட்டிப் பார்க்கையில் புரபைல் படத்தில் யேசுநாதர் இதயத்தைக் காட்டிக் கொண்டிருந்தார். அது இவனுக்கு கடுப்பாய் இருந்தது. ‘முதலில் அதை தூக்கி விட்டு ஒரு ரோசாப் பூவை வை!’ என்றான் அன்பை குரலில் இயற்கை உரத்துடன் சேர்த்து விதைத்தபடி. ‘போடா, இந்தப் பன்னாட்டெல்லாம் என்கிட்ட வச்சிக்காதே’ என்று முளை விட்டிருந்த வெண்டைச் செடிகள் சிலவற்றை மிதித்து நாசமாக்கினாள் பெல்லா.

குமாருக்கு தைமாதம் வந்தால் சென்னிமலை தைப்பூசம் துவங்கி விடும் என்பது தெரியும். கூடவே தன் வயதும் இருபத்தி நான்கைத் தொட்டு விடுமெனவும் தெரியும். ஆள் நெடும்பனை மரம் போல் உயர்ந்திருப்பான். பெல்லா இவனுடன் நின்றால் இவன் நெஞ்சு அளவிற்குத் தானிருப்பாள். அவளென்ன.. நிறையப் பெண்கள் இவனது நெஞ்சு அளவிற்குத்தான் இருக்கிறார்கள். படிப்பு பனிரெண்டோடு போய்விட்டதால் இவன் சித்தப்பாவைப் போன்றே கேமிராவைத் தூக்கிக் கொண்டான்.

பெல்லாவை தன் கடைக்கு வரவழைத்து படுத்துப் படுத்தெல்லாம் அவளை புகைப்படமெடுத்துக் காட்டினான் கம்ப்யூட்டரில். ஒன்றில் பெல்லாவின் முன்னழகு எடுப்பாய் இருக்கவே மெளசை நகர்த்தியவன் அம்புக்குறி போய் முன்னழகில் படவே கோபம் மிகுதியாகி உடலின் அனைத்துப் பகுதிகளிலும் புகைவர கடையை விட்டு இறங்கி ஓடிப் போனாள். இரண்டு நாட்களுக்கு பிறகு அவளை அலைபேசியில் அழைத்து ‘ஏன் கடையை விட்டு அவசரமா ஓடுனே பெல்லா? வயிற்றுக் கோளாறு எதாச்சிமா? கம்ளெக்ஸ்லயே பாத்ரூம் இருந்துச்சே!’ என்றான். ‘எங்கம்மா பஜ்ஜி சுடறேன் நாலு மணிக்கின்னாங்க.. மணியை பார்த்தேன் நாலு ஐஞ்சின்னு இருக்க பஜ்ஜி ஆறிடக் கூடாதேன்னு அவசரமா கிளம்பிட்டேன் வீட்டுக்கு!’ என்றாள்.

காதல் என்று ஆணுக்கும் பெண்ணுக்கும் வந்து விட்டால் சண்டை சச்சரவுகள் இருந்தால் தானே கொண்டாட்டமாய் இருக்கும். அலைபேசியில் மணிக்கணக்காய் காதில் சிவப்பு வர்ண திரவம் ஒழுகும் அளவுக்கு கத்திக் கொள்வார்கள்.

‘நீ சம்பாதிச்சு எனத்த வச்சிருக்கே? எனக்கு எனத்தப் போடுவே? உங்கொப்பன் காசுல உக்கோந்து திங்கறவன் தான நீயி! ஒரு காரு கூட உங்கூட்டுல ஏன் இல்ல! எங்க சர்ச்சுக்கு எத்தன பேரு காருல வர்றாங்க தெரியுமா? எங்கக்கா ஸ்வீட்லின் ஊட்டுக்காரரு கூட மாருதி வச்சிருக்காரு! நீயி ஹீரோ போண்டா வச்சுட்டு இருக்கே? வெய்யில்ல உன் கூட சுத்தி கருகிப் போயிருவேன்!” பெல்லாவின் தொடர் தாக்குதல்களுக்கெல்லாம் இவனிடம் ஒரு ரியாக்சனும் இருக்காது.

அம்மாவிடம் போய் அமர்ந்து கொண்டு ‘சும்மா கத்தீட்டே இருக்காம்மா! அவ எனக்கு சுத்தப்பட மாட்டா!’ என்பான். அம்மாவோ ‘இந்தக் காலத்துப் பிள்ளைங்கெல்லாம் அப்படித்தான் வெவரமா இருக்கோணும். ஒரு நாளைக்கி நம்மூட்டுக்கு அப்பா இல்லாத சமயத்துல கூட்டிட்டு வாடா கொமாரு!’ என்பாள். ‘அதெல்லாம் சொன்னேன்மா.. நீயி நெத்தில செவப்பு பொட்டு வச்சிடுவியாம். மறுக்க முடியாதாம். சாமி கும்பிடச் சொல்லுவியாம்! என்னென்னமோ சொல்றாம்மா!” என்பான்.
அன்று அப்படித்தான் ஸ்டுடியோவில் வேலை இவனை பெண்டு எடுத்துக் கொண்டிருந்தது. எப்படி வேலை செய்தாலும் நேரம் கடந்து கொண்டேயிருந்தது. சேரில் அமர்ந்திருந்தவனுக்கு இடுப்பு வலியும் ஆரம்பித்து விட்டது. பெல்லாவின் அழைப்பு அந்த சமயத்தில் இவனுக்கு வந்தது. அலைபேசி திரை அமுல் பேபி என்று காட்டியது. எடுத்துக் காதுக்கு கொடுத்தான். வழக்கமான விசாரிப்புகளுக்கெல்லாம் தொய்வாக பதில் சொன்னான். கடைசியாக அந்த விசயத்தை சொன்னாள் பெல்லா என்கிற அமுல் பேபி. “கொமாரு நாளைக்கி சண்டே. நீ காலையில சர்ச்சுக்கு வாடா! நீ வரலின்னா நான் ப்ரே பண்ணவே போக மாட்டேன்!’ ‘அங்க வந்து நானு சரைக்கிறதாடி?’ என்று கத்தி விட்டு போனை அணைத்துக் கொண்டான். அப்புறம் அவள் குமாரை கூப்பிட இரண்டு வாரங்களாயிற்று என்பதை பதிவு செய்ய வேண்டியதில்லை.

“என்னடா பண்ணிட்டு இருக்குறே? நாங்கெல்லாம் சாப்டுட்டு ரெடியாயிட்டோம். உங்க மாமன் காரெடுத்துட்டு வந்துடுவாண்டா” வெளியே அம்மாவின் குரல் கேட்கவே எழுந்து போய் அயர்ன் பண்ணி வைத்திருந்த ஜீன்ஸ் பேண்ட்டை அணிந்து கொண்டான். பச்சை வெள்ளையில் பெரிய பெரிய கட்டம் போட்ட சட்டையை எடுத்து பட்டன்களை ஒவ்வொன்றாய் கழற்றிய சமயம் அலைபேசி ‘செங்கதிரே செங்கதிரே! தலை தொங்கியது யாராலே!’ பாடியது. பெல்லா தான்.
“என்ன கிளம்பிட்டியா குமாரு? சொத்து பத்தெலாம் கரைக்ட்டா பொண்ணு வீட்டுல இருக்குதான்னு பார்த்துக்கோ. அப்புறம் இப்பெல்லாம் ஏமாத்து வேலையெல்லாம் கல்யாண விசயத்துல பண்டிடறாங்களாம்” என்றாள்.

“எங்குளுதுல அப்படியெல்லாம் ஏமாத்த மாட்டாங்க பெல்லா. என்ன கல்யாணம் பேசி முடிவாயிடுச்சுன்னா காரு வாங்கித் தர்றதா பொண்ணோட அப்பா, அதான் என் வருங்கால மாமனாரு சொல்றாரு. பத்தேக்கரா நெலம் இருக்குது. தென்னை ஒரு எழுபது மரம் இருக்குது போல! இப்ப எங்களுக்கும் தான் பத்தேக்கரா இருக்குது”

“இத்தனை நாள் சொல்லாமெ இப்பச் சொல்றே? பத்தேக்கரா இருக்குதுன்னு!”

“நீ கேக்கவே இல்ல, நானும் சொல்லவே இல்ல. அதும் ரோட்டும்பேர்லயே இருக்குது. நாளைக்கி வித்தாக்கூட நல்ல ரேட்டுக்கு போகும். பொண்ணோட அக்கா தான் கலியாணமாகி புருஷங்கூட வாழாம வீட்டுல வந்து உக்காந்துக்கிச்சாம்! பாவம்”

“கொடுத்து வச்சவன் குமாரு நீயி! அக்காளும் வேற ஊட்டுல இருக்குதுன்னு சொல்றே. ஆமா பொண்ணு பேரு என்னுமோ சொன்னியே.. அம்சவேணியா! அம்சமாத்தான் இருப்பா. ஒரு வயசு உன்னை விட மூத்தவள்னு வேற சொல்றே. அறிவியல் ரீதியா பார்த்தா அது தப்பு தெரியுமா உனக்கு? ஆமா என்னைய லவ் பண்டீட்டு எப்பிடிடா இன்னொருத்திய பொண்ணு பாக்க போறே?”

“லவ்வு இன்னம் பலபேரை பண்ணலாம் பெல்லா. நீயும் பண்ணுவே. அதெல்லாம் ஜாலிக்கி. கலியாணம்னு வந்தா சொந்த பந்தத்துல பார்த்து கட்டிக்கிட்டு லைப்ல செட்டிலாயிடணும். நினைச்சுப் பாரு நீயி.. குமாரசாமி போயி சர்ச்சுல நின்னுட்டு பாதர்கிட்ட தோத்ரம்னுட்டு .. போனை வச்சுட்டியா பெல்லா?” இவன் சிரித்துக் கொண்டே பேப்பரை எடுத்துக் கொண்டு அறைக்கதவை சாத்தி விட்டு வெளி வந்தான்.

அந்த சமயத்தில் தான் வெங்கிடசாமி மாமனும் வீட்டினுள் ‘அக்கா அக்கா’ என்று குரல் எழுப்பிக் கொண்டு உள்ளே வந்தார். ஏற்கனவே இவன் அம்மாவும் அப்பாவும் கிளம்பி தயாராய் இருந்தார்கள்.

“இவன் தான் இன்னும் சாப்பிடாம இருக்கான் வெங்குடு. ரெண்டு தோசையை இவன் தின்னுடட்டுமே! ஆமா அந்த சிவான் காரையா எடுத்துட்டு வந்திருக்கே?”

“ஏண்டா மாப்ளெ தோசை தின்னே ஆகணுமா? போயி பொண்ணு வூட்டுலயே பாத்துக்கலாமே! எப்பிடியும் பஜ்ஜி, போண்டான்னு சுட்டு வச்சிருப்பாங்க! சிவானைத்தான் கூட்டியாந்தேனக்கா! நீயி ராசி பாக்குறியா? அதெல்லாம் பாக்காதக்கா. குப்புற உழுந்தாலும் ஒட்டுற மண்ணு தான் ஒட்டும் பார்த்துக்கோ! சோசீகாரன் இந்தக் கட்டாப்பு உறுதியா சொல்லிட்டான். வடக்க தான் பொண்ணு அமையும். அதிலயும் வடக்கு முகனா இருக்குற ஊட்டுல தான் அமையும். நேரம் காலமெல்லாம் இப்பத்தான் கூடி வந்திருக்குதுன்னு!”

குமாரசாமி அலைபேசியை நோண்டிக் கொண்டே வீட்டை விட்டு வெளி வந்தான். சங்கிலியில் கட்டி வைக்கப்பட்டிருந்த மணியான் ‘ங்கூஊ’ என்று எழுந்து இவனுக்கு மரியாதை செய்தான். இவன் காருக்குச் சென்று பின் கதவை இழுத்து உள்ளே போய் அமர்ந்து கொண்டான். ஏசியோடு செண்ட் மணமும் உள்ளே வீசிற்று. மாமனோடு இந்த நாள் வரை பெண் பார்க்கும் படலத்திற்கு இவன் சென்றதேயில்லை. எல்லாம் அம்மாவும் அப்பாவும் மட்டுமே பார்த்துக் கொள்வார்கள். மாமன் இந்தமுறை கல்யாணமே முடிந்து விட்டது போன்று மகிழ்ச்சியாக இருக்கிறது.

முகநூலில் கவிதைகளாய் எழுதி போஸ்ட் போடுகிறது. அவரது கவிதைகளில் காதல் ரசம் சொட்டுகிறது. மனைவியாக வரப்போகிறவள் மீது புளிரசத்தையே ஊற்றி மகிழ்கிறார். அவருக்கு சேலம் எட்டுவழிச் சாலைக்காக நில அபகரிப்பு பற்றி கவலையில்லை. பிரதமரின் யோகாசன வீடியோ பற்றி கவலையில்லை. காலா தியேட்டருக்கு வந்துச்சா போச்சா?வென்ற கவலையில்லை.

மாமனுக்கு நாற்பத்தி மூன்று வயதாகிவிட்டது. வீட்டில் அவரின் அம்மா தான் ஒத்தையாய் அமர்ந்து மாமனுக்கு வக்கணையாய் ஆக்கிப் போட்டுக் கொண்டு உட்கார்ந்திருக்கிறது. மாமன் தன் நிலத்தில் மழை பெய்தால் சோளம் பயிரிடுகிறார். தட்டுப் போர் போடுகிறார்.

மாட்டுக்காரர்களுக்கும் விற்கிறார். பாதி வளர்ந்து விட்ட நிலையில் எழுபது தென்னைகள் நிற்கிறது. மாமன் வீட்டில் தறிப் போட்டிருக்கிறார். பத்துப் பேருக்கு வேலை கொடுக்கிறார். அவரது அம்மாவின் கவலையெல்லாம் இருக்கும் காலத்தில் பேரனையும் பேத்தியையும் பார்த்து விட வேண்டும் என்று தான். அதற்கு கல்யாணம் என்ற ஒன்று நடக்க வேண்டும் என்பதையும் தெரிந்திருக்கிறது. ஆனால் பெண்ணைக் கொடுப்பார் தான் இவ்வையகத்தில் எங்கே என்று தெரியவில்லை.

மாமனுக்கு மண்டையில் முன்புறமாக சமீப காலங்களில் வழுக்கை விழுகிறது. மாமன் சிக்சேம்புவை தொடுவதில்லையென சபதமிட்டார் ஒரு நாள் முகநூலில். இரநூற்றி ஐம்பது லைக்கிகளும் முப்பத்தியைந்து கமெண்ட்டுகளும் குவிந்தன. வழுக்கை மண்டையர்கள் தங்களின் வேதனைகளை அதில் சொல்லியிருந்தார்கள். மாமன் ஒவ்வொருவருக்கும் விருப்பக்குறியிட்டு பதிலையும் சொல்லியிருந்தார். ’மசுரு போனா மசுராச்சு!’ என்று சரக்கைப் போட்டுக் கொண்டு வந்து தனியே ஒரு பதிவிட்டார். “சொட்டைகள் சூழ் உலகு’ என்று இருபது வரிகளில் கவிதையெழுதிப் பதிவிட்டார். மாமனுக்கு பைத்தியம் பிடித்து விட்டதாக இவன் நினைத்துக் கொண்டான். மாமனுக்கு ஒரு பிரி கழண்று விடும் சமயங்களிலெல்லாம் முகநூல் ரத்தக் களறியாகிவிடும்.

கூடப் படித்த நண்பர்களின் பிள்ளைகளுக்கெல்லாம் பூப்புனித நன்னீராட்டு விழாவுக்குச் சென்று ஐநூறு ரூபாய் மொய் எழுதி வந்தார். ’எம் புள்ளைக்கி நான் வெக்காம யாரு வெக்கிறது? எங்க பிள்ளைங்கொ!’ என்று வசனம் பேசுவார். காதில் கேட்பவர்கள் நிஜமாகவே இவர் பிள்ளை தானோ? என்று குழம்பியபடி மண்டபத்திலிருந்து வெளியேறுவர். மாமனிடம் கேட்க குமாரசாமியிடம் பல கேள்விகள் இருக்கின்றன. இருந்தும் மாமனிடம் அவைகளை கேட்க முடியாது.

பாலியல் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த என்ன செய்கிறீர்கள் மாமா? பாயில் இரவில் அனாதை போன்று தூங்கி விழிக்கையில் இந்த வாழ்வை எந்த மாதிரி மனநிலையில் எதிர்கொள்கிறீர்கள்? உங்களுக்கு இன்றுவரை ஏதேனும் பெண் தொடர்பு இருக்கிறதா? அந்தத் தொடர்பால் நீங்கள் இழந்த சொத்து பத்து எவ்வளவு? அது இன்னமும் இனிக்கிறதா? நிஜமாகவே இந்த மண்ணில் உங்களுக்கு பெண்ணைக் கொடுக்க ஒரு மனிதன் கூடவா இல்லை? இரண்டாம், மூன்றாம் கல்யாணம் செய்து கொள்ளும் பெண்களுக்கும் இந்த மண்ணில் போட்டி இருக்கிறது என்கிறார்களே அது உண்மையா? ஸ்கேனிங் செய்யும் வசதி இந்த மண்ணில் வந்த பிறகுதான் பெண் பிறப்பு விகிதம் குறைந்ததாக சொல்கிறார்களே அது உண்மையா?

இவர்கள் பெண் வீட்டுக்கும் முன்பாக காரிலிருந்து இறங்குகையில் கும்பிடு போட்டு வரவேற்ற மனிதர்களை இவன் முதலாகப் பார்க்கிறான். கூச்சமாய் இவனும் கையை உயர்த்தி கும்பிடு வைத்தான். இந்தப் படலத்தில் முதலாக கலந்து கொள்வதில் இவனுக்குள் உள்ளூர கிலுகிலுப்பு சேர்ந்து கொண்டது. பெண் எப்படியிருப்பாள்? என்னவோ இவனே பெண் பார்க்க வந்தது போல இவனுக்குண்டான அந்த இருதயம் டப டபவென துடித்தது. பெண் அழகாக இருந்தால் மாமனுக்கு மம்பட்டி ஒன்றை கையிலெடுத்துக் கொடுத்து விட்டு இவன் தட்டிக் கொண்டு பறந்து விட வேண்டும். கிறிஸ்துமஸ் விழாவையெல்லாம் மாமனார் வீட்டில் புத்தாடை அணிந்து அமர்ந்து சிறப்பிக்கும் பக்குவமெல்லாம் இவனிடமில்லை. ’அனே’ ங்கற புத்தி வேறு போகாது என்கிறார்கள்! பனையோலையில மண்டாப்பிடி, என்று வேறு சொல்லி பீதியூட்டுகிறார்கள்.

அட வேற கெடைக்கவேயில்லியா பங்காளி? அந்தக் குழியிலயா போயி உழுந்து குடும்ப மானத்தெ வாங்குவே? நாளையிம் பின்னியு ரோட்டுல எப்பிடி மாப்ள நிமுந்து சோடியா போவே? நீ போயிடுவே கூச்ச நாச்சமே இல்லாம! நாங்க தான் முட்டுச் சந்துலயெல்லாம் உனக்காகவும் உம்பட பொஞ்சாதிக்காகவும் ஒளிஞ்சு நின்னுக்கணும்! இவன் காதில் பங்காளிகள் குரல் வரிசையாகக் கேட்டது. கொஞ்சம் ஏமார்ந்தாலும் மாமனின் நிலைதான் தனக்கும் வரும் என்கிற பயமும் அடிவயிற்றை கலக்குமளவு இருக்கிறது.

வீடு இரண்டு மாடிகளோடு நின்றிருந்தது. ஆசாரத்தில் பழைய பாணியில் தொட்டி கட்டியிருந்தார்கள். மேலே கம்பி வலை போட்டப்பட்டிருந்தது. மழைக்காலத்தில் மாமன் வீட்டினுள்ளேயே நீச்சலடித்து மகிழலாம்! வாயிற்குள் தண்ணீரை நிரப்பி மனைவியின் முகத்தில் புரீச்சென பீய்ச்சி விளையாடலாம்!

மிகப் பெரிய அறை ஒன்றினுள் புதுப் பாய் விரித்திருந்தார்கள். பெண்வீட்டாரின் சொந்த பந்தங்களும் வீட்டினுள் நடமாடினர். இவர்களை பாயில் அமர வைத்து ஒருவர் சென்ற பிறகு, தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தவர் பெண்ணின் அம்மாவாக இருக்க வேண்டும். குள்ளமாக இருந்தார் அவர். பெண்ணின் அப்பா கட்டங்கரேலென தீயில் கருக்கிப் போட்ட பன்னி போன்று குட்டையாகவும் இருந்தார். இவரது வர்ணம் பெண்ணிற்கும் பாய்ந்திருந்தால் நிச்சயமாக் அந்த இருபத்தியைந்து இருக்கும்.

அந்த அறையில் எல்யீடி டிவி ஒன்று பெரியதாய் நின்றிருந்தது. ஜன்னலில் நிற்கவைத்திருந்தார்கள். பெண் வீட்டு சொந்தமெல்லாம் எதிர்க்கே பாயில் வந்து அமர்ந்து கொண்டு சம்பிரதாய வார்த்தைகளை பகிர்ந்து கொண்டார்கள். நல்ல பசி என்றானபோது வெங்காய போண்டா வந்து சேர்ந்தது. ‘மாப்ள தானுங்க சாப்பிடாம வந்துட்டான்! எடுத்து சாப்புடு மாப்ளெ!’ என்று மாமன் சொல்லிக் கொண்டே ஒரு போண்டாவை லபக்கென எடுத்துக் கடித்தது.

மாமனுக்கு அல்சர் இருக்கிறது. காரமென்றாலோ, பச்சைமிளகாயில் செய்திருந்தாலோ ஒன்றே ஒன்று மட்டும் பெயருக்கு சாப்பிடுவார். போக மாமனுக்கு உயர்குருதி அழுத்தம் வேறு இருக்கிறது. மாமனுக்கு உடலில் பல பார்ட்கள் இயங்கு கண்டிசனிலிருந்து மாறிக் கொண்டிருக்கின்றன. இருந்தும் இன்றென்னவோ சுத்தமாக மழிக்கப்பட்ட முகமாய் புன்னகையுடன் இருந்தார். குமாரசாமி காட்டுச் சாமியிடம் ஒரு வேண்டுகோளை வைத்துக் கொண்டான். மாமனுக்கு இந்த இடம் ஓகே ஆனவுடன் காட்டுச் சாமிக்கி ஒரு சேவல் பார்சேல்!

பொண்ணுப்பிள்ளை காபி டம்ளர்கள் நிறைந்த சில்வர் தட்டமொன்றைக் கொண்டு வந்தது. இது வரை ஆவலுடன் எதிர்பார்த்த பெண் குமாரசாமிக்கு சப்பென்றாகி விட்டது. பெண் குள்ளம். ஒரு சுத்து பெருத்திருந்தது. இருபத்தி ஐந்து வயது தானா? முப்பதா? என்ற சந்தேகமும் குமாரசாமிக்கு எழுந்துவிட்டது. மாமனே இந்த பீப்பாயை கட்டிக் கொள்ளட்டும். எனக்கு அத்தை முறையாகட்டும்! என மனதினுள் நினைத்துக் கொண்டே அத்தை நீட்டிய காபி டம்ளரை எடுத்துக் கொண்டான்.
அடுத்த அரைமணி நேரம் பேச்சாய்ப் பேசினார்கள் இரு குடும்பத்தாரும். மாமன் மகிழ்ச்சி வெள்ளத்தில் கோல்டு பில்ட்டர் குடிப்பதைக் கூட மறந்திருந்தார். அவர் மனதில் கல்யாணம் முடிந்து பிள்ளையை எல்கேஜி வேனில் தாட்டி விடும் கனவு வந்திருக்க வேண்டுமென இவனாக நினைத்துக் கொண்டான். மாமனுக்கு அடிக்கடி கேஸ் பிரியும். அன்று ஏனோ எந்த சப்தமும் இல்லை.

இறுதியாக மாப்பிள்ளையும் பெண்ணும் பேசிப் பழகிக்கட்டும் பத்து நிமிசம்! என்று வீட்டார்கள் முடிவெடுத்தார்கள். காலம் மாறிவிட்டதையும் பேசினார்கள். ஒரு பீட்சா கூட தின்னதேயில்லை என்று ஒரு பொக்கை வாய் பேசிற்று. டிவியில் தான் பீட்ஸாவை பார்க்கிறதாம்.
மாமனுக்கு தொணைக்கு குமாரசாமியும், பொண்ணு பிள்ளைக்கி தொணைக்கி அவள் அக்காவும் ஒரு பெரிய அறையில் குழுமினார்கள். துணைக்கி வந்த குமாரசாமி என்னவோ பேசிக்கொள்ளட்டுமென ஒரு சோபாவில் சென்று அமர பெண் பிள்ளையின் அக்காவும் நாகரிகம் கருதி குமாரசாமி அமர்ந்த சோபாவிலேயே வந்தமர்ந்து ஒரு சிரிப்பு சிரித்தது. வாயிலிருந்த பற்கள் பூராவும் வெத்திலைக் கறை.

“அடச் சொட்டமண்டெ, நீயெல்லாம் இந்த அம்சவேணி வேணும்னு எவ்ளோ தயிரியமிருந்தா படியேறி வந்திருப்பே! உம்பட வயசென்ன.. நாப்பத்தி மூனாம்! எனக்கு இருவத்தி அஞ்சி தான் ஆச்சி! ஆமா என்ன நெனப்புல காத்தால கிளம்பி வந்திருக்கே?”

“இதபாரம்மணி, புடிக்கலீன்னா புடிக்கலீன்னு சொல்லிட்டு போ! அத வுட்டுட்டு அங்க சொட்டெ இங்க சொட்டேன்னு சொல்றதெல்லாம் வச்சிக்காதே.. நீயிந்தான் பூசணிக்காடிக்கி கையும் காலும் மொளச்ச மாதிரி இருக்கேன்னு சொல்ல எனக்கு எவ்ளோ நேரமாயிடும்? எதோ புரோக்கரு நல்ல பொண்ணு இருக்குதுன்னு சொன்னான். ஜாதகம் பாக்குறப்ப பொருத்தமும் கூடி வந்துச்சு! தகவல் கொடுத்தோம். உங்க அப்பாவும் வரச் சொல்லிட்டாரு. சரி மொதல்லயே போட்டா குடுத்து உட்டுருந்தம்ல எங்க வீட்டுல இருந்து. அதப் பார்த்ததும் வேண்டாமுன்னு உங்கய்யங்கிட்ட சொல்லியிருந்தா நாங்க ஏன் இங்க வர்றோம்? காருக்கு வாடகைல இருந்து எல்லாமும் வெட்டி தானம்மிணி!”

“நான் பிஎஸ்சி டிகிரி வாங்கியிருக்கேன் தெரியுமா! நீ பத்தாங்கிளாசு பெய்லுன்னு உங்கொக்கா இப்பத்தான சொல்லிட்டு இருந்துச்சு கேட்டனே! ஏணி வச்சா எட்டுமா உனக்கும் எனக்கும்? இன்னிக்கி காத்தால இருந்தே எனக்கு நேரமே செரியில்ல! எல்லாம் எழவாவே இருக்குது” அந்தப் பெண் தஸ் புஸ்சென மூச்சு வாங்கிக் கொண்டு கோபத்தில் தவிப்பதை குமாரசாமி பார்த்தான்.
அந்தப் பெண்ணுக்கு.. சீ, அத்தைக்கி ஆஸ்துமா தொந்தரவு இருப்பது போலத்தான் தெரிந்தது. அம்மசவேணியிடம் எந்த அம்சமும் இல்லை. மாமனின் நிலை தான் இவனுக்கு பரிதாபமாக இருந்தது. எவ்வளவோ நம்பிக்கையில் இவனையுமல்லவா புதியதாய் ஜோடி இழுத்துக் கொண்டு வந்திருக்கிறது. மாமன் இன்று மப்பில் மசக் கவிதைகள் பல போஸ்ட் போடுவார் என்பது இப்போதே தெரிந்து விட்டது. முகநூல் பக்கமே மூன்று நாளைக்கி குமாரசாமி லீவ்!

அந்த சமயத்தில் தான் ‘ மம்மீ லட்சுமி ஆண்ட்டி என்னை நம்ம வீட்டுக்கே போக கூடாதுன்றா மம்மி! வீட்டு வாசல்ல நிக்குற காரு போனதீம் தான் நம்ம வீட்டுக்கு வரணும்னு தலையில கொட்டுக்கா வேற வக்கிறா இந்த லட்சுமி ஆண்ட்டி குண்டி!” என்று கத்திக் கொண்டு ஆறு வயது பெண்குழந்தையொன்று ஓடி வந்து பெண்பிள்ளையின் கால்களைக் கட்டிக் கொள்ள பெண்பிள்ளை திரு திருவென மாமனைப் பார்த்தது. பக்கத்து வீட்டு லட்சுமி ஆண்ட்டி இப்போது உள்ளே நுழைந்து பாப்பாவை குத்திடுவேன் என்று மிரட்டியது. அப்போது குமாரசாமியின் அலைபேசி வேறு, ‘செங்கதிரே செங்கதிரே.. தலை தொங்கியது யாராலே! சங்கடமோ சஞ்சலமோ, அதை எத்திவிடு காலாலே!” என்று டைமிங்காய் கத்தியது. அதை அணைத்தான் குமாரசாமி.

“அறுத்துட்டு வந்தவளா இல்ல புருசனைத் தின்னுபோட்டு வந்தவளா அம்மிணி நீயி? இந்த லச்சணத்துல எம்பட சொட்டெ மண்டெய வேற நக்கல் உடறே? இங்க பாரம்மணி.. எவனோ பெத்த புள்ளைக்கெல்லாம் நான் அப்பனா இருக்க முடியாது அம்மிணி. வேற எவனாச்சிம் இளிச்சவாயன் கெடச்சா பாத்துக்கோ! மாப்ளெ எந்திர்றா போலாம். எனக்கு கலியாணமே ஆகாட்டியும் தொலையுது இந்தக் கருமங்களையெல்லாம் படியேறி வந்து பாத்துத் தொலைய வேண்டியிருக்குது பாரு” மாமன் மிச்சமிருந்த முடியை நீவிக் கொண்டு ஸ்லோமோசனில் வெளியேற குமாரசாமியும் கிளம்பினான்.

 

பிற படைப்புகள்

Leave a Comment