சாம்பல் நிற வேளை
யுவன் சந்திரசேகர்

by olaichuvadi

 

யூ ட்யூபில் கறுப்பு-வெள்ளைக் காலப் பாடல் காட்சிகளைப் பார்ப்பது கிட்டத்தட்ட ஒரு போதைப் பழக்கம் மாதிரி ஆகிவிட்டிருக்கிறது. அது சலித்தால் ஃபேஸ்புக். அதுவும் சலித்தால் வாட்ஸாப். இதுவும் சலித்து யூட்யூபுக்குள் மறுபடியும் போகும் போது, அது புத்தம் புதிதாகக் காட்சி தரும்.

ஓய்வுபெற்ற பிறகு, முற்பகல் பொழுதுகளை சமாளிப்பதுதான் மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. மேற்சொன்ன சமாசாரங்களால் கண்சோர்வதற்கும், மதிய உணவு நேரம் வருவதற்கும் சரியாக இருக்கும். சாப்பிட்ட கையைக் கழுவும்போதே தூக்கம் அமட்டிவிடும்.  விழித்தபிறகு இருக்கவே இருக்கிறது மோட்டுவளை. அறுபது வருட ஞாபகங்களில் ஏதேனும் மேலெழுந்து வந்து கணிசமான நேரம் மூழ்க வைக்கும். அல்லது, சற்றுமுன் ஏதாவது கனவு கண்டிருந்தால், அதை ஆராய்வதில் பொழுது போகும். பகலில் உறங்கும்போது வந்தாலும், அவற்றைப் பகல்கனவு என்று சொல்ல முடியாதில்லையா!

இன்றைக்குக் கடைசியாகப் பார்த்தது, ‘அமுதைப் பொழியும் நிலவே.’ பி.சுசீலாவின் குரலில் உல்லாசமாகப் பாடி நடித்த ஜமுனா, இறுதியில் குகை மனிதன் தோற்றத்தில் வந்த சிவாஜியைப் பார்த்து அலறியதோடு முடிந்த பாடல், கனவில் தொடர்ந்தது. இந்த முறை, ஜமுனா செவிலியரின் தூய வெண்மைச் சீருடையில் ‘வசந்தமுல்லை போலே வந்து’ பாடலுக்கு அபிநயம் பிடித்தார். குதி உயர்ந்த ஷூக்களோடு எப்படித்தான் ஆடினாரோ.

பாடலின் முடிவில் அவர் என்னைப் பார்த்து மிரண்டதும், குகை மனிதன் நின்றிருந்த இடத்தில் நான் நின்றதை நானே மூன்றாம் மனிதனாகப் பார்த்ததும், மேகம் கலைவதுபோலத் தன்னியல்பாக உறக்கம் தேய்ந்து விழிப்பு மலரும்  அன்றாட வழக்கம் போல அன்றி விதிர்த்து நான் விழித்ததும் குறிப்பிடப்பட வேண்டிய சங்கதிகள்.

மோட்டுவளையில் என் சொந்த சினிமா ஓட ஆரம்பித்தது.

கதைகளுக்கும் கவிதைகளுக்கும் திரைப்படங்களுக்கும், ஏன் கனவுகளுக்கும் பொருத்தமான, லேசாகத் தூறல் போட்டுக்கொண்டிருந்த முன்னிரவில், அந்த அறையில் குடியேறப் போய்ச்சேர்ந்தேன். அழைப்புமணியை அழுத்தியபோது, வீட்டு உரிமையாளரே வந்து கதவைத் திறந்தார். ஒரே ஒரு சூட்கேஸுடன் நான் வாசலில் நிற்பதைப் பார்த்து,

இவ்வளவுதானா!

என்று ஆச்சரியப்பட்டார். அதற்காகத் தம்முடைய நிபந்தனைகளை இரண்டாவது தடவையும் மனப்பாடமாக ஒப்பிக்கத் தவறவில்லை.

இரவில் பத்து மணிக்குமேல் விளக்கெரிக்கக் கூடாது. நண்பர்கள் வந்தால் இரவு தங்க வைக்கக் கூடாது. குடி சமாசாரம் கூடவே கூடாது. தண்ணீரை சிக்கனமாகச் செலவழிக்கவேண்டும். மூன்று தேதிக்குள் வாடகையைக் கொடுத்துவிட வேண்டும். நல்லவேளை, சிகரெட் பிடிப்பது பற்றிப் பேச்சே இல்லை. அவரிடமிருந்து அழுத்தமாக சுருட்டு நெடி அடித்ததுகூடக் காரணமாக இருக்கலாம் – என்றாலும், இது ஒரு ஆறுதல்தானே.

மிக முக்கியமான நிபந்தனை, சககுடித்தனக்காரர்களுடன் அநாவசியமாகப் பேச்சுவார்த்தை வைத்துக்கொள்ளக் கூடாது. இந்தக் கடைசி ஷரத்து மட்டும் கொஞ்சம் எரிச்சலாக இருந்தது. தகராறு செய்யக்கூடாது என்றால் நியாயம். சாதாரணமாகப் பேசுவதற்குமா கட்டுப்பாடு? நானாகப் போய்ப் பேச வேண்டாம்; அவர்களாகவே வந்து பேசினால்? நாம் வந்திருப்பது குடியிருக்கவா, தனிமைச் சிறைக்கா!

இந்தியாவின் எத்தனையோ மாநிலங்களில் பணிபுரிந்திருக்கிறேன்; வாட கைக்கு விதவிதமான தங்குமிடங்கள் வாய்த்திருக்கிறது. ஆனால், உரிமையாளர்கள் மட்டும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியானவர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள். போகட்டும், ஆயுள் பூராவும் இங்கேயே வசிக்கப் போகிறோமா என்ன. எந்நேரமும் என்னைக் கண்காணித்துக்கொண்டே இருக்க முடியுமா அவரால்? தவிர, அக்கம்பக்கத்தில் என்னுடன் உரையாட விரும்பும் அல்லது நான் உரையாட விரும்பும் ஜீவன் ஏதாவது இருந்தால்தானே கேள்வியே?

படிக்கொன்றாக சமாதானங்களை அடுக்கியவாறு மாடியில் என்னுடைய அறைக்குப் போனேன். ஆனால், நம்முடைய தீர்மானங்களையும் சமாதானங்களையும் உடனடியாக ரத்துசெய்வதற்கென்றே ஓர் அமைப்பு முழுநேர வேலை பார்த்துக் கொண்டிருக்கிறது அல்லவா? இந்த ஞானத்தை நான் எட்டுவதற்கு எத்தனையோ சந்தர்ப்பங்கள் உருவாகி உருவாகி  நிகழ்ந்து இத்தனை வயது ஆகியும் விட்டது. ஆனால் அதற்கான முதல்விதை மறுநாள் அதிகாலையில் விழுந்தது.

குண்டூருக்கும் விஜயவாடாவுக்கும் இடையிலுள்ள சிறு நகரம் அது. பெயர் சுத்தமாக மறந்துவிட்டது.  கூகிள் வரைபடத்தில் தேடினால் கிடைக்க வாய்ப்புண்டு; அவ்வளவு மெனக்கெட ஆர்வமில்லை. தவிர,  ‘வடை முக்கியமா, தொளை முக்கியமா’ என்பது என் அம்மாவின் அபிமானப் பழமொழி. இவ்வளவும் சொன்ன பிறகு, என் கலங்கலான ஞாபகம், மங்களகிரி என்கிறது. அது சரியாகவும் இருக்கலாம்.

அப்போது எனக்கு சுமார் முப்பது வயது. திருமணமாகியிருக்கவில்லை. வணிகப் பிரதிநிதிகளுக்குப் பெண்கொடுக்க அந்த நாளில் அநேகம்பேர் விரும்ப மாட்டார்கள்.  இந்தத் தகவலை எதற்காகச் சொல்கிறேன் என்றால், பார்வை விளிம்புக்குள் வரும் பெண்கள் அத்தனை பேரையுமே ஊடுருவிப் பார்க்கும் கண்கள் இன்னமும் மிச்சமிருந்த பிராயம் அது.

தயாரிப்பு மற்றும் வர்த்தக நிறுவனம் ஒன்றில் ஆரம்பநிலைப் பயிற்சி மேலாளராகப் பணியில் சேர்ந்திருந்தேன். முதன்முதலாக நாலு இலக்கச் சம்பளம். எடுத்த எடுப்பிலேயே, மொழி தெரியாத பிரதேசத்தில் நியமிப்பது நிறுவனத்தின் பணிவிதிகளில் ஒன்று. சைகைமொழியின் மூலமாக இலக்கை எட்டும் திறன் இருக்கிறதா என்று பரிசோதிப்பதற்காகவோ என்னவோ.

பொதுவாக, கடைக்கோடி விற்பனையாளருக்கு எஞ்சும் கமிஷனைப் பொறுத்ததுதான் விற்பனை என்பது எளிய சூத்திரம். எங்கள் நிறுவனத்தின் பொருட்கள் அகில இந்தியப் புகழ் பெற்றவை என்பதால், விற்பனை தானாகவே நடந்து விடும். அதனாலேயே கமிஷன் வீதம் மிகக் குறைவாக இருக்கும்; தரத்தில் குறைவான உள் ளூர்ப் பொருட்கள் எங்கள் சரக்கை சுலபமாக இடம்பெயர்க்கும் என்பதுதான் என் போன்றவர்களுக்கான சவால். நல்லவேளை, பயிற்சிக்காலத்தில், மாற்றுமொழிப் பிரதேசத்தில், நாங்கள் அதிகரித்தாக வேண்டிய விற்பனைக்கு இலக்கு என்று ஏதும் நிர்ணயிக்கமாட்டார்கள் என்பது ஓர் ஆறுதல்.

விற்பனையை விடுங்கள்; தனிநபருக்கு என்ன ஆகிறது என்பது முக்கியமல்லவா. ஒரு வருடம் கழித்து மனம் நிறைந்த அனுபவத்துடன் தாய்மொழி மாநிலத்துக்குத் திரும்பியபோது, அந்நிய மாநிலத்துக்கு வந்துசேர்ந்த மாதிரி உணர்ந்தேன் – இது எனக்கு மட்டும்தானா, மற்றவர்களுக்கும் இப்படித்தான் இருக்குமா என்பது உறுதியாகத் தெரியவில்லை.

ஆனால், நான் ஆந்திரம் சென்ற அதே காலகட்டத்தில் வடகிழக்கு மாநிலத்துக்குப் போய்ச் சேர்ந்த  ஜயசீலன் போன்றவர்கள் எப்போதோ ஒருதடவை பணிபுரியச் சென்ற இடம் உள்ளூரப் பிடித்துப்போனதினாலோ, உள்ளூருக்குத் திரும்பிவர இயலாதபடி சிக்கல் ஏதும் நேரிட்டிருந்ததாலோ, அந்த ஊர்ப் பெண்ணைக் காதல் திருமணம் செய்ததாலோ மாற்றுமொழி மாநிலத்திலேயே நிரந்தரமாகத் தங்கிவிட்டதும் உண்டு. பெரும்பாலும் ஒரே நிறுவனத்துக்குத் தாலிகட்டிக்கொண்டு குடித்தனம் செய்தவர்களும்  உண்டு. என்னைப் போன்ற உருளும் கற்கள் சராசரி மூன்று ஆண்டுகளுக்கு ஒரு தடவை கிளை தாவிவிடுவோம்.

என்னுடைய பதினோராவது நிறுவனத்தின் அகில இந்திய விற்பனையாளர் கருத்தரங்கத்துக்கு வந்தபோதுதான் ஜயசீலனை முதன்முறையாகச் சந்தித்தேன். கிட்டத்தட்ட ஐம்பதை நெருங்கும்  வயதில். நீ போ வா, அவனே இவனே என்று பேசுமளவு நெருக்கம் ஏற்பட, அயல்நாட்டு மால்ட் விஸ்கியின் இரண்டு ரவுண்டுகள் போதுமானதாய் இருந்தது. இப்படியே போனால், அவன் சொன்ன கதையை முதலில் சொல்லிவிடுவேனோ என்று அச்சமாய் இருக்கிறது.

சரி, குண்டூருக்கு, அதுதான் மங்களகிரிக்கு, மீண்டும் வந்துவிடுகிறேன். 

என்னதான் மேலாளர் என்று பதவியின் பெயர் இருந்தாலும்,  தனியாக வீடு எடுத்துத் தங்குமளவுக்குப் பயிற்சிக்காலத்தில் உபரிச் சலுகை தரமாட்டார்கள். சம்பளம் உயர உயர வசதிகளின் சொகுசை அதிகமாக விழைந்து, கடன்களில் அமிழ்ந்து, மாதத் தவணைகளுக்கும் சம்பளத்துக்குமான சமன்பாட்டை எப்போதுமே குளறுபடியாக வைத்திருந்து என்று, கிட்டத்தட்ட பணிக்காலம் முழுவதுமே முதல் சம்பளம் அளவுக்கே மூச்சுத்திணறி  வந்தது என் ஒருவனுடைய அனுபவமாக மட்டும் இருக்குமா என்ன.

ஒரே வீட்டைத் தடுப்புகளால் மனம்போலப் பகுத்து வாடகைக்கு விட்டிருந்த புரவலர், கிட்டத்தட்ட எண்ணூறு கேள்விகள் கேட்டுத் திருப்தியுற்ற பிறகு, எட்டடிக்கு எட்டடிப் பகுப்பு ஒன்றை எனக்கு ஒதுக்கினார். ஒரு கட்டில் போட்டது போக, ஓர் ஆள் விசாலமாக நடமாடும் நடைபாதை மட்டுமே கொண்டது அது. சுவர்கள் மரப்பலகையால் ஆனவை. அடுத்த பகுப்புக்காரர் இருமினால் நம் தூக்கம் கெடும்.

அந்தக் குடியிருப்பின் ஒரே வசீகரம், அறைகளுக்குப் பொதுவாக இருந்த நீள வராந்தா. மற்றபடி,  குடியேற வந்தபோது அவர் விதித்த நிபந்தனைகள்தாம் உங்களுக்கே தெரியுமே.

மறுநாள் காலையில் இதமான குளிருக்கும், புதிய ஊரின் நிர்மலமான சாம்பல் வெளிச்சத்துக்கும், நிர்ணயிக்க முடியாத அமைதிக்கும் கண்விழிக்கிறேன் – அவற்றை அனுபவிக்க விடாமல் குறுக்கே வந்து பாய்ந்தது ஓர் இன்ப அதிர்ச்சி. பின்னே, முதல்நாள் முழுக்க திகட்டத்திகட்டக் காதில் விழுந்திருந்த தெலுங்கு ஒலிக்கு மாற்றாக, பி.சுசீலாவின் தமிழ்ப்பாட்டு கேட்டால்! நிதானமாகச் சுழன்றெழும் புகைபோல மாடியறையை நோக்கி உயர்ந்து வந்த

                அரண்மனை அறிவான் அரியணை அறிவான்

என்ற வரியை ஆஆஆஆஅ என்று ஆலாபனை தொடர்ந்தது. சுசீலா என்ற தேவதையின் குரலில் மட்டுமே பிறக்கும் மாயம், இதோ வாத்தியங்களின் பின்னணியின்றி தொண்ணூறு சதவீதம் ஒலிக்கிறது. சறுக்குமரத்தில் ஏறியிறங்கி நேரடியாய்க் கேட்கும் ஒலி கிறக்குகிறது.  ஆலாபனை முடிந்து, மீண்டும் அதே வரியைப் பாடிவிட்டு,

                அந்தப்புரமொன்று இருப்பதை அறியான்…

என்ற வரிக்கு நகர்ந்தபோது குரல் மெலிதாக உடைந்தது.

அதில் படர்ந்திருந்த சன்னமான துயரத்தை ஆராய விடாமல் வேறொரு அம்சம் உறுத்த ஆரம்பித்தது. ஆமாம், இந்தக் குரலில் எனக்கு மிகமிகப் பரிச்சயமான ஏதோவொன்று இருக்கிறது… மானசீகமாகப் பராமரித்து வரும் முகங்களின் தொகுப்பில் இந்தக் குரலுக்குரியது இருக்கிறதா என்று நிம்மதியாய்த் தேடிப் பார்க்க அனுமதிக்காமல், பாட்டில் நுட்பமான சங்கதிகள் உதிரும் இடங்களில் சுசீலாவின் மலர்ந்த முகம் இடைப்பட்டு தொந்தரவு செய்தது.

இதற்குள், அடுத்த பாட்டு ஆரம்பித்துவிட்டது – அந்த நாள் இலங்கை ஒலிபரப் புக் கூட்டுத்தாபன ‘ஒருபடப் பாடல்’ நிகழ்ச்சியின் சாயலில். கர்ணன் படத்தின் ‘கண்கள் எங்கே…’ குழுவினரின் பகுதியையும் சேர்த்துத் தனியொரு குரலில் தானே பாடி அபாரமான இன்பமளித்த அந்தப் பெண்முகத்தை தரிசிக்க ஆவல் பொங்கியது – இன்னும் பாடச் சொல்லிக் கேட்கவேண்டுமென்ற பட்டியல் தன்னிச்சையாகக் கிளர்ந்தது.

எவ்வளவு தேடியும் அந்த முகம் அகப்படாத சோர்வில் மீண்டும் தூங்கத் தலைப்பட்டிருப்பேன் போல. அல்லது, ‘கண்ணுக்கு குலமேது’ என்று ஆரம்பித்த அடுத்த பாடலை முதல் வரியிலேயே ரத்து செய்து உரத்து ஒலித்த குக்கர் விசில்கூடக் காரணமாய் இருந்திருக்கலாம்.

மறுபடி விழிப்புத் தட்டி, அடடே வெய்யில் கனத்துவிட்டதே, நேரமாகிவிட்டதோ என்ற பதட்டத்துடன் அவசரமாய் வராந்தாவில் வந்து நின்றபோது, வளாகத்தின் வாசலை நோக்கிப் போய்க்கொண்டிருந்த உருவம் தென்பட்டது. வெண்ணிறச் சீருடை, தொப்பியுடன் விசையாய் நடந்துபோன செவிலி.

பொதுவாகவே, கதை கேட்பதில் எனக்குள்ள ஈடுபாடு அலாதியானது. சொல்கிறவரின் மனோபாவமும் சேர்ந்து உள்ளே இறங்குமா, நடப்புக் கணத்தின் அலகுகளும் புனைவின் வசீகரம்கொண்டு கிளுகிளுக்க வைக்கும். சிலசமயம் எது நிஜம், நான் கதைகேட்கும் தற்போதைய வேளையா, அல்லது கேட்கும் கதையில் உருவாகும் மாயப்பொழுதா என்று திகைப்பும் ஏற்படும்.

முன்னமே ஒரு சிற்பியின் வழித்தோன்றலிடம் ஆந்திரத்தின் கடப்பா மாவட்டத்தில் கேட்ட கதையை விலாவரியாக விவரித்திருக்கிறேன். இந்தமுறை கேட்ட கதை குவஹாட்டியிலிருந்து வந்திருந்த சக ஊழியன் ஜயசீலன் சொன்னது. (அப்போதெல்லாம் அது கௌஹாட்டி.) ஆனால், அந்தக் கதை அவனே சொன்னது அல்ல – அஸ்ஸாமியரான அவனது மண்டல மேலாளர் தனக்குச் சொன்னது என்று சொன்னான். கைமாறி வரும் சங்கதிகள் அனைத்துக்குமே உள்ள பிறழ்வுகளும் புளுகுகளும் இந்தக் கதையிலும் இருக்கக்கூடும். என்னைப் பொறுத்தவரை, இரண்டே அளவு கோல்கள்தாம் – ஒன்று, அந்தக் கதை கைக்கொள்ளும் தர்க்கம் சீராக இருக்கிறதா? இரண்டு, தர்க்கம் குலைந்தே கிடந்தாலும், உணர்வுபூர்வமாய் இருக்கிறதா? மூன்றாவதாக ஒன்றையும் சொல்லலாம்; நமக்கு அந்தக் கதையுடன் ஒட்டுதல் இருக்கிறதா? அவ்வளவுதான். நாம் கேட்கும் ஒவ்வொரு கதையுமே வரலாறாக இருக்க வேண்டிய அவசியம் உண்டா என்ன.

ஆனால், எவ்வளவு கதைகள் கேட்டு என்ன, பீடிகையில்லாமல் ஒரு கதையை திருப்பிச் சொல்லத் தெரியவில்லை. ஆனால், இந்தச் சிக்கல் எனக்கு உள்ளது மட்டுமல்ல, பெரிய பெரிய எழுத்தாளர்களுக்கே இந்தப் பிரச்சினை இருந்திருக்கிறது – இல்லாவிட்டால், ஒரு முழுப்பக்கம் சூழலையோ, கதாபாத்திரத்தின் பாவனைகள் மற்றும் அடையாளங்களையோ விவரித்து ஆரம்பமாகும் கதைகளுக்கு என்ன காரணம் இருக்கமுடியும்!

அந்த மட்டில், இப்போது சொல்லப்போகும் கதைக்கு ஒரேயொரு வரிப்பீடிகைதான். ஜெயசீலன் கதை சொல்லியிருக்காவிட்டால், ருக்மணியக்காவை இருபது வருடம் கழித்து இன்னொரு தடவை சந்தித்திருக்கமாட்டேன் – இந்த முறை மானசீகமாகத்தான் என்றாலும்.

அவன் சொல்லி முடித்த மாத்திரத்தில் அவள் மின்னல்போல எனக்குள் வந்து போனாள் – உதித்த பிம்பம் அவள்தான் என்பது உறுதியாய்த் தெரியும். ஆனால், ஜயசீலன் சொன்ன கதையில் வந்தது அவளேதானா என்பது சரியாய்த் தெரியவில்லை. அவள் இவளை ஞாபகப்படுத்தினாள் என்பது முக்கியமல்லவா.

ஜயசீலன் சொன்னதை மீட்டுச் சொல்வதற்கு முன்னால், குண்டூரில் எனக்கு நடந்ததைச் சொல்லிவிடுகிறேன். அப்போதுதான் தானாய் எழும்பும் குறளிகளுக்கும் தீர்க்கமான தர்க்கப் பின்புலம் இருக்கிறது என்பது எனக்கே உறுதிப்படும்.

அன்று வேலை சீக்கிரம் முடிந்துவிட்டது. ஐந்தரை மணிக்கெல்லாம் வீடு திரும்பிவிட்டேன். அவ்வளவு சீக்கிரம் இருட்டாத ஊர் என்றுதான் கேள்விப்பட்டிருந்தேன். ஆண்டின் அந்தப் பருவத்தில் ஒருவேளை சீக்கிரம் இருட்டிவிடுமோ என்னவோ.  வெளிச்சம் மெல்ல மெல்ல மங்கி மஞ்சள் கலந்த சாம்பல் நிறம் பூணுவதை இலக்கில்லாமல் கவனித்துக்கொண்டு, வராந்தாவில் நிரந்தரமாய்க் கிடக்கும் இரண்டு மூன்று நாற்காலிகளில் ஒன்றை இழுத்துக் கைப்பிடிச் சுவரருகில் போட்டு, இன்னொரு நாற்காலியைக் கால்போட வாகாய் அமைத்து, சாவகாசமாய் சிகரெட் பிடித்தபடி  உட்கார்ந்திருந்தேன். மற்ற போர்ஷன்கள் அத்தனையும் பூட்டி இருந்தன.

கையைச் சுட்ட சிகரெட் துண்டை குனிந்து தரையில் அழுத்தித் தேய்க்கிறேன், வளாகத்தின் கதவு திறந்து அந்தச் செவிலி வந்தார். கோணலாகத் தலையில் பதிந்த தொப்பி இல்லாவிட்டால் முகத்தை இன்னும் கொஞ்சம் நன்றாகப் பார்க்கலாமே என்று நான் ஆதங்கப்படுவதை உள்ளுணர்ந்தவர் மாதிரி எனக்கு நேர் கீழே நின்று முகத்தை உயர்த்தினார். மேலே இருந்து தம்மை வெறித்துப் பார்க்கிறவன் யார் என்று பார்க்க அப்படிச் செய்திருக்கலாம். அல்லது அவரது தினப்படி வழக்கமாகக்கூட இருந்திருக்கலாம். எப்படியோ, உடனடியாக எனக்குள் மின்னல் வெட்டி, உடலெங்கும் மனமெங்கும் பரபரப்பு கிளர்ந்தது. உரத்துக் கேட்டேன்:

நீங்க ருக்மணியக்காதானே?!

அட… ……

என்றார் அவர். இப்போது அட! என்று ஆச்சரியப்படுவது என் முறை. பின்னே, நொடியில் அடையாளம் கண்டுவிட்டாரே – இத்தனைக்கும் சிறுவனாய் இருந்தபோது மறைந்துபோய், முதிர்ந்த வாலிபனாய் உதித்தவன்…

…எலே!… சுந்தரு…

லுங்கி பனியனோடு இருந்தவன் வேகமாகக் கீழே போனேன். அக்கா என் கைகளைப் பிடித்துக்கொண்டார். அவரது கண்கள் லேசாகக் கசிந்திருந்த மாதிரிப்பட்டது என்னுடைய பிரமையாகக்கூட இருக்கலாம். ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டு,

 இரு, ட்ரெஸ் மாத்திக்கிட்டு வந்தர்றேன்.

என்று உள்ளே போனார்.

நான் வீட்டு உரிமையாளரை எண்ணி சில விநாடிகள் விசனப்பட்டுவிட்டு மாடிக்குப் போனேன். இந்தமுறையும் படியேறும்போது சில சமாதானங்கள் உதித்தன. சக குடித்தனக்காரருடன் அநாவசியமாகத்தானே பேசக்கூடாது; நானாகப் போய்ப் பேசவில்லையே; தவிர, என் பால்யத்தின் அழுத்தமான சின்னமாக எதிரில் நிற்கும் ருக்மணியக்காவை சக குடித்தனக்காரர் என்று சொல்வது தகுமா? எங்களுடைய பாசம் சகோதரப் பாசத்தைவிட ஒரு மாற்று அதிகமானது அல்லவா?

உண்மையில் நெப்போலியனுடன் சேர்ந்து அவள் காணாமல் போவது வரைக்கும், எங்கே சென்றாலும் என்னைத்தான் உடன் அழைத்துச் செல்வாள். நெப்போலியனைப் பார்ப்பதற்குக்கூட அழைத்துச் சென்றிருக்கிறாள். என்னைப் பார்த்தவுடனே கையில் ஐந்து பைசாவைக் கொடுத்து,

 ஏதாச்சும் வாங்கித் தின்னு.

என்று அனுப்புவார் அவர். ஊர் எல்லையில் உள்ள தோப்பு என்பதால், நான் திரும்ப ஊருக்குள் போய் கடலை மிட்டாயோ காரக்கடலைப் பொட்டலமோ வாங்கித் தின்றுவிட்டு வருவதற்கு நேரம் சரியாக இருக்கும்.

ருக்மணியக்கா என் தோளில் கைபோட்டு, தன்னுடைய வேகத்துக்கு என்னையும் தள்ளிக்கொண்டோ இழுத்துக்கொண்டோ போகும்போது, சிலவேளை அவளுடைய வலது மார்பு என் காதருகில் அழுந்திய உணர்வு, நான் கல்லூரியில் நுழைந்த நாட்களில் முன்னிரவுத் தனிமையில் எவ்வளவோ உதவிகரமாய் இருந்திருக்கிறது. லுங்கியில் ஈரம் படிந்த மாத்திரத்தில் குற்றவுணர்வால் குமைவேன். பின்னர், நேரில் தென்பட ஆரம்பித்த என் சமவயது அழகிகள் அக்காவை இடம்பெயர்த்தார்கள். சிறுகச் சிறுகக் காணாமல் போனவள், இதோ, முழுசாக எதிரில் நிற்கிறாள்!

ஆமாம், உடைமாற்றிக்கொண்டு வந்த ருக்மணியக்கா எதிரில் நின்றாள். சீருடையில் இருந்ததைவிடவும் புடவையில் இன்னும் வடிவாக இருந்தாள். முன்னந்தலையில் ஓடைபோலப் பாய்ந்த நரை மட்டும் இல்லாவிட்டால் என்னைவிடப் பத்து வயது பெரியவள் என்று யாரும் நம்ப மாட்டார்கள். அதிலும் அந்த முக்கோண முகமும், ரோமானிய மூக்கும், கையால் வரைந்ததுபோன்ற அடர்புருவங்களும், ஒரு இம்மி வெளிப்புறம் பிறழ்ந்த கண்களும்…

 இந்த ஊருப்பக்கம்  எப்பிடிரா வந்து சேந்தே!

என்றவாறு, எதிர் நாற்காலியில் அமர்ந்தாள்.

 நீங்க எப்பிடி இங்கே…

என்று இழுத்தேன். அவள் என் முகத்திலிருந்து பார்வையை விலக்கியவளாக வாசல் பக்கமாக முகத்தைத் திருப்பிக்கொண்டாள். ஒற்றைக் காளை இழுத்துச் செல்லும் பாரவண்டி வாசலுக்கு நேரெதிராக வந்தது. யாரோ வீடு காலிபண்ணிப் போகிறார்கள் போல. நாலு பக்கமும் தொட்டி மாதிரிக் கட்டிய தார்ப்பாலினுக்கு வெளியே, உச்சியில் ஒரு நடைவண்டி மட்டும் அல்லாடிக்கொண்டிருந்தது, எந்த நிமிடமும் உருண்டு விழுந்துவிடப் போவது மாதிரி. பக்கவாட்டில் நடந்துவந்த வண்டியோட்டி, அவசியமேயில்லாமல் அதட்டி காளையின் முதுகில் சாட்டையை வீசினான். உரத்த பெருமூச்சுடன் ஒருமுறை ஏறித் தாழ்ந்தாள் அக்கா.

படபடவெனப் பேச ஆரம்பித்தாள். கிட்டத்தட்ட இருபது வருட அழுத்தமானது வெளியேறக் கிடைத்த வாய்ப்பை முழுசாகப் பயன்படுத்திக்கொள்ள ஆசைப்பட்டது போலப் பீறிப் பாய்ந்தது. அவள் பேசப்பேச மின்னல்போல எனக்குள் உதித்து மறைந்த பழைய நாள் நினைவுகளையும் அடுத்தடுத்துச் சொன்னால்தான் எனக்கும் அடங்கும்.

… ஒரு வேகத்துல பொறப்புட்டுட்டோமெ யொளிசி, அன்னைக்கி மதுரேல ரயில் கிளம்புற வரைக்கி எங்க ரெண்டுபேத்துக்கும் இருந்த நடுக்கத்தெ இப்ப நெனைச்சாலும் கெதக்குங்குது. ப்ளாட்ஃபாரத்துலெ யாரெப் பாத்தாலும் ஊர்க்காரவுக மாரியே இருக்கு. அவரு யாரெப் பாத்தாலும் காலனிக்காரவுகளோண்டு பயப்புடுறாரு. ’கொஞ்சம் ரோசிச்சி நிதானமாப் பண்ணிருக்கலாமோ ருக்கு’ண்ராரு. ‘விடுங்க, தலைக்கிமேலெ போயிருச்சு; வர்றதெப் பாத்துக்கிருவோம்ண்டு நாஞ்சமாதானம் சொல்ற மாரி ஆயிப்போச்சு…

ஆமாம், இவர்கள் கிளம்பி வந்ததுக்கப்புறம், ஊரில் மிகப் பெரிய பிரச்சினை வெடித்தது. உயிர்ச்சேதம் ஏதும் இல்லையே தவிர, ஏகப்பட்ட பொருட்சேதம். ருக்மணியக்காவின் வயலில் அறுவடைக்குத் தயாராக நின்ற நெற்பயிருக்கு நள்ளிரவில் தீவைத்து விட்டார்கள். காலனிக்காரர்கள் மூட்டியது என்றும், சேர்வார் தனக்கு ஒரு சாக்கு வேண்டி, தானே ஆள்வைத்துக் கொளுத்திக்கொண்டார் என்றும் இரண்டுவிதமான அபிப்பிராயங்கள் நிலவின. எப்படியோ, காவக்காரர் பார்த்து ஊர்க்காரர்களைத் திரட்டுவதற்கு முன்பே முக்கால் வயல் எரிந்துவிட்டது. ஆனால், அக்காவின் குடும்பம் தாங்கும் – தொடர்ந்து மூன்று போகம் சாவியடித்தாலும் தாங்கும்.

நெப்போலியன் குடும்பம் அப்படியல்ல. அடுத்த வேளை சாப்பாட்டுக்கே  கையேந்தும் அளவுக்கு இழப்பு. அத்தனையும் பறிகொடுத்துத் தெருவில் நின்ற குடும்பத்தை, ‘ஓடிப்போனவர்களைக் கொண்டுவந்து சேர்க்கும்வரை’ ஊரைவிட்டு விலக்கி வைத்தது பஞ்சாயத்து. நெப்போலியனின் அப்பாவை பதிமூன்றுதடவை விழுந்து வணங்கச் சொன்னது. ஊரார் என்ன ஊரார், இத்தனை வருடம் கழித்தும் எதிரில் இருப்பவளை அக்கா என்று குறிப்பிடும் நான், அவளைவிட நாலைந்து வயது பெரியவரை பெயர் சொல்லித்தானே குறிப்பிடுகிறேன் – நேரிலும் பெயர் சொல்லி அழைத்திருக்கிறேன் என்பதை இந்த வயதில் அவமானமாக உணர்ந்து பிரயோசனமென்ன?

அப்பறமென்ன, குருவிக்காரங்க மாதிரித் திரிஞ்சம். அங்குட்டுச் சுத்தி இங்குட்டுச் சுத்தி, மைசூருலெ போய்க் குடிவச்சம். இவுரு சேல்ஸ் ரெப் ஆனாரு. மெத்தெக் கம்பெனி. என்னைய நர்ஸிங்லெ சர்ட்டிவிக்கேசன் படிக்கச் சேத்து விட்டாரு. ஒரு வருசம் போல நல்லாத்தான் போச்சு. சிறுகச் சிறுக அவருக்கு ஊரெ நோங்கீருச்சு. ’எங்க அப்பன் ஆத்தா என்ன கஸ்டப்படுறாகளோ; ஒரு தபா போயிப் பாத்துட்டு வந்துறணும் ருக்கூ’ன்னு நெதோமும் பொலம்ப ஆரமிச்சாரு.

வந்தீங்களாக்கா?

அசட்டுத்தனமான கேள்வி என்று கேட்டதற்குப் பிறகு உணர்ந்தேன். வந்திருந்தால் பார்த்திருக்க மாட்டேனா. சாதாரணப் பிரளயமா நடந்திருக்கும். ஒருவேளை, இரவோடு இரவாக ரகசியமாக வந்து திரும்பியிருந்தால்?…

அதென்னான்னு வர்றது. உசிரோட திரும்ப முடியுமா?

அதுவும் சரிதான்.

‘நாம் மட்டுமாச்சும் திருட்டுத்தனமாப் போயி அவுகளெப் பாத்துட்டு   வந்துர்றணே’ம்பாரு. நா வேணா வேணான்னு கிளிப்பிள்ளைக்கிச் சொல்லுற மாரி சொல்லுவென். இப்பிடியே பேசி, ரெண்டு பேத்துக்கும் நெதோமும் சண்டெ வர ஆரமிச்சிருச்சு…

பெருமூச்சு விட்டாள். முகம் சிவந்து, கூம்பி, துயரத்தின் பேரழகு அவள் முகத்தில் பொலிந்தது. வைத்த கண்ணை அகற்றாமல் அவள் முகத்தையே பார்த்திருந்தேன்…

…ஒனக்கென்னா, காரெவீட்டுக்காரி. என்னெப் பெத்தவுக குடுசையிலெ என்னா கஸ்டப்படுறாகளோ. என்னென்ன அவமானம் பட்டாகளோன்னு வகெதொகெயில்லாமப் பேசுவாரு. நானும் சும்மா விட மாட்டென். தெரிஞ்சுதானெ கெட்டிக்கிட்டீகன்னு சரிக்குச் சரி மல்லுக்கு நிப்பென். நாசமாப் போன சண்டெயிலெ நான் செயிச்சித் தொலெச்சிருக்கலாம். அவரு அளுகெ தாங்கமாட்டாமெ, ‘செரி வாங்க. ரெண்டுபேருமே போவோம். வாழ்வோ சாவோ, ரெண்டுபேரும் ஒண்ணா அனுபவிச்சிக்கிருவோம்.’ன்னு சொன்னேம் பாரு. அளுகெ இன்னம் சாஸ்தியாயிருச்சு.

 அப்பன்னா, வந்தீங்களாக்கா!

 அட, இர்றா. இவன் ஒருத்தன். என்னைக்கிமே முந்திரிக்கொட்டெதானே நீயி!

என்றபோது அவள் குரலில் அபூர்வமான வாஞ்சை எழுந்தது. மெனக்கெட்டுத் தன் நாற்காலியிலிருந்து எட்டி, என் கன்னத்தில் செல்லமாகக் குத்தினாள். ஓரிரு கணங்கள்தாம்; பழையபடி மேகம் மூடிவிட்டது. ஆனாலும், வராந்தாவின் அழுது வடிந்த விளக்கில் தெரிந்த அவள் முகத்தின் காந்தி குறையவில்லை என்றே எனக்குப்பட்டது. 

…அப்பறமென்னா, பொறப்புட்டுப் போனாரு. இந்தா, இன்னக்கி வரைக்கும் திரும்பி வாறாரு. ஆனா, அவரு கிளம்பிப்போனது நம்ப ஊருக்கில்லே. வடக்கே ஏதோ ஒரு ஊருக்கு ஆபீஸ் விசயமாப் போனவரு… அப்பிடித்தான் எங்கிட்டெ சொல்லிட்டுப் போனாரு. பெரியமனுசன், எங்கெ போனாரோ. நா அவுக கம்பேனியிலே போயிக் கேட்டுப் பாத்தேன். அவுகளும், தாக்கல் ஒண்ணும் இல்லெயேம்மான்னு கைவிரிச்சிட்டாக. ஒரு மாசம் போலப் பொறுத்துப் பாத்தென். இன்னமே அந்த ஊருல தனியா இருக்குறது சரிப்பட்டு வராதுன்னு மனசுக்குப்பட்ருடுச்சு. இங்குட்டு வந்துட்டேன். அந்த மகராசன் புண்ணியத்துல வாங்குன சர்ட்டிவிக்கேட்டு இருந்துச்சு கையிலெ…

சிறு இடைவெளி விட்டாள். அவள் மூச்சுவிடும் சப்தம் உரத்துக் கேட்டது. வராந்தாவில் படர்ந்திருந்த மங்கல் வெளிச்சத்தில் இருளின் விகிதம் அதிகரித்துவிட்ட மாதிரி உணர்ந்தேன். அவள் பொழிந்து முடித்தபிறகு, என்னுடைய பங்காக என்ன சொல்வது என்று மனம் தயங்கத் தொடங்கியது. அவளே தொடர்ந்தாள்:

… ஆனாக்கெ,  இத்தன வருசத்திலே, ஒடம்பும் மனசும் மரத்துப் போச்சு. ஒங்கிட்டச் சொல்றதுக்கு என்னா தம்பி, மனசெ ஒடம்பு செயிச்சதாலெ தானே ஓடியாந்துட்டம்ன்னு நெனச்சுப் பாதி ராத்திரிலே குமுறிக் குமுறி அளுகக் கூடச் செஞ்சிருக்கென்….

ஆழமாக, உரத்துப் பெருமூச்சு விட்டார். குரல் வெகுவாகத் தழைந்துவிட்டிருந்தது. நான் வளாக வாசல் கதவையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தேன்.

இருட்டு அழுத்தமாக இறங்கியிருந்தது. யாரோ மாடிப்படியேறிவரும் ஒலி கேட் டது. வீட்டு உரிமையாளர்தான் வருகிறார், நாளைக் காலையில் என்னைக் காலிபண் ணச் சொல்லப் போகிறார் என்று நினைத்தேன். இரண்டுமே தவறு. வந்தவர் பக்கத்துத் தடுப்பில் தங்கியிருந்த லுங்கி வியாபாரி.

தவிர, மறுநாள் காலி செய்தது நான் அல்ல. பயத்தின் வேர்கள் எத்தனை ஆழம் பாயக்கூடியவை என்பது யாருக்குத்தான் தெரியும்? ருக்குமணி அக்கா தொண்டையைச் செருமினாள், தான் சொன்ன கதையின் கடைசி வரியைச் சொல்வதற்கு ஆயத்தமாகிறவள் மாதிரி.

இத்தனெ வருசம் ஓடிப் போச்சே, இன்னமும் வாசல் கதவு சத்தம் போட்டுச்சுன்னா, ஓடிப்போயி ஒளிஞ்சுக்கிறணும்னு கால் துடிக்கத்தான் செய்யிது, தம்பி.  வேணுமின்னா விசாரிச்சு வந்துற மாட்டாகளா? ஆமா, மனசுலெ ஒரு பக்கம் வெளிச்சமா இருக்கும் – அவருதான் வந்துட்டாரோன்னு. இன்னோரு பக்கம், சண்டாளங்ய தேடிக் கண்டுபிடிச்சுட்டாங்யளோன்னு அப்பிடி ஒரு பயம்.                 சித்ரவதெடா தம்பி. ஆயுசு முளுக்க எனக்கு விதிச்சது இதுதான் போல…

மேற்கொண்டு எதுவுமே பேசாமல் இறங்கிப் போனாள். வரும்போது நடையில் இருந்த துள்ளல் இல்லை இப்போது. என்னுடைய மனமுமே கூம்பித்தான் கிடந்தது.

மறுநாள் காலையில் பாட்டுச் சத்தம் கேட்கவில்லை. சாயங்காலம் அலுவல் முடிந்து திரும்பிவந்தபோது,  அக்காவின் போர்ஷனில் பூட்டுத் தொங்கியது. நான் அங்கே இருந்த ஒருவருடத்தில் வெவ்வேறு மூன்று பூட்டுகள் அந்தத் தாழ்ப்பாளில் தொங்கின.

வீட்டு உரிமையாளரிடம் கேட்கலாம். தெலுங்குத் தமிழில் சுருட்டு மணத்தோடு அவர் சொல்லக் கூடிய பதில் எனக்கே தெரிந்திருந்தது:

ஒங்களுக்கு என்னாத்துக்கு அது?

ரிமோட் கண்ட்ரோலுக்குக் கிறுக்குப் பிடித்த மாதிரி, ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத  காட்சிகள் தாமாகவே மாறுவதும், அடுத்தடுத்துக் கோர்த்துக்கொள்வதும் என்னுடைய மனத்தில் மட்டுமே நிகழ்வதா, எல்லார் மனத்திலும் அப்படித்தானா என்பதை எப்படித் தெரிந்துகொள்வது?

மேற்சொன்ன பத்தி தோன்றியதற்குக் காரணம், அக்கா இறங்கிப் போன காட்சியைத் தொடர்ந்து, மெல்ல முளைவிடும் விதைபோல எனக்குள்ளிருந்து நிதானமாக உயர்ந்த இன்னொரு காட்சிதான்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு, அதே ஆந்திரத்தின் தலைநகரில், ஐந்து நட்சத்திர ஓட்டல் உணவகத்துக்கு வெளியே வராந்தாவில் நிகழ்ந்தது இது. ருக்மணியக்காவுடன் பேசிக்கொண்டிருந்த காட்சியின் தொடர்ச்சி, என்று நானாக முடிச்சுப்போட்டு வைத்திருக்கிறேன்.

சரி, எனக்கே இன்னதென்று விளங்காத காட்சி. இன்னார் என்று தெரியாத சந்தர்ப்பம். இதைப் போய் யாரிடம் விசாரித்து உறுதி செய்துகொள்ள?

அப்போது நான் பணிபுரிந்த  நிறுவனம்  ஆண்டுதோறும் ஒரு  விருந்து நடத்தும். ஏதாவது ஒரு மாநிலத் தலைநகரில், போக்குவரத்து விமானச் செலவும் ஐந்து நட் சத்திர ஓட்டலில் தங்கும் செலவும் போய்வரும் காலத்துக்கான விடுப்பும் தந்து, நடத்தப்படும் இரண்டுநாள் விமரிசை. சுமார் ஐம்பது அதிகாரிகள் வரை கூடுவோம்.

இதற்கெல்லாம் செலவு செய்வார்கள். சம்பளத்தில் பத்துரூபாய் கூட்டச் சம்மதிக்க மாட்டார்கள்.

என்று ஆதங்கப்பட்டவாறே, அதற்கும் சேர்த்து இன்னொரு ரவுண்டு குடித்துக் கலைவோம்.

அந்த முறை குழுமியதில் இரண்டே பேர்தான் தமிழர்கள். நானும், திண்டுக்கல்காரரான ஜயசீலனும். ஆளுக்கொரு கண்ணாடிக்கோப்பையில்  விஸ்கியை எடுத்துக்கொண்டு, விருந்து அரங்கின் வெளிப்புறம் இருந்த புல்வெளியில் கிடந்த பிரம்பு நாற்காலிகளில் போய் அமர்ந்தோம். வழவழப்பாக வர்ணம் பூசிய சாதாரண நாற்காலிதான்; புட்டத்துக்கும் முதுகுக்கும் அணைவாய் இருந்த மெத்தை மட்டும் ஐந்து நட்சத்திர மெத்தை.

வருசத்திலே ரெண்டு நா மஹாராஜாவா இருக்குறது மட்டும்தான் நமக்குக் குடுத்து வச்சிருக்குது, சுந்தர். அப்பறம் பழைய கணக்குக்குத் திரும்பி மூச்சுத் திணறிக்கிற வேண்டியதுதான்…

என்று சிரித்துக்கொண்டே ஒரு மிடறு விழுங்கினார். காற்றேறும் பலூன்போலப்  பெரிதாகிக் கொண்டேபோன தலையை இன்பமாய் ஆட்டி ஆமோதித்தேன். அவர் தொடர்ந்தார்:

ஆனா என்ன, திரும்பிப் போறதுக்கு நாம இருக்கோம். காத்திருக்க நமக்குக் குடும்பமும் இருக்குது…

எதற்கு இதைச் சொன்னார் என்று எனக்குப் புரியவில்லை. ஆனாலும், அமைதியாய் இருந்தேன். மது உள்ளே இறங்கியதும் அலாதியான சாந்தம் என்மீது படர்ந்து விடுவதாக நண்பர்கள் பலபேர் பலதடவை சொல்லியிருக்கிறார்கள். நேர்மாறாக, ஜயசீலன் நிறையப் பேசினார். படபடவென்று பேசினார்.

…எதுக்குச் சொல்றேன்னா, எத்தனையோ பேரு வீட்டெவிட்டு வெளியே போறான் திரும்பி வர்றதுக்கு உத்தரவாதம் கிடையாது. இப்பிடித்தான், அஸ்ஸாம்லெ, முன்னாடி ஒரு மெத்தெக் கம்பெனிலே இருந்தன். எனக்கு ஒரு ஜோனல் மேனேஜர் இருந்தாரு. அவரு ஒரு கதெ சொன்னாரு. இதே மாதிரி மீட்டிங்கு. இந்தியா முளுக்க இருந்து ஆளுக வந்திருக்காக. காசிரங்காவுக்குப் பக்கத்துலெ ஏதோவொரு ரிசார்ட்லெ. பாதி விருந்துலே நாலஞ்சுபேர் வந்து ஒரு ரெப்போடெ பேசி வெளியெ கூட்டிட்டுப் போனாகளாம். அம்புட்டுத்தேன். அவென் திரும்ப வரவேயில்ல. அந்த அதிகாரி ரெண்டு விசயம் சொன்னாரு: ஒண்ணு வந்தவிங்ய இவனுக்கு முன்னக்கூட்டியே தெரிஞ்சவுக மாதிரி இருந்தாலும், அந்தாளெ அவிங்ய கூட்டீட்டுப் போன மாதிரித் தெரியலே. ஒடம்பெத் தொடாமெ, தரதரன்னு இளுத்துட்டுப் போன மாதிரித்தான் இருந்துச்சாம். ரெண்டாவது, இந்தப் பையன் புதுசாச் சேந்தவன். தெக்கத்தியான்றது பாத்த வொடனே தெரிஞ்சுரும். ஆனா, எந்த ஸ்டேட்டுன்னு கேட்டாச் சொல்ல மாட்டானாம். சிரிச்சுக்கிட்டே நகந்துருவான்னாரு. ஆனாலும், வந்தவிங்யளெப் பாத்தா தெக்கத்திக்காரங்யன்னுதான் தோணுச்சாம்.  தமிளு தெலுங்கு கன்னடம் மலையாளம் எல்லாக் களுதையும் அவுகளுக்கு ஒண்ணாத்தானே தெரியும் – நம்மூர்க்காரவுகளுக்கு அஸ்ஸாம்காரனுக்கும் நாகாலாந்துக்காரனுக்கும் வித்தியாசம் தெரியுமா என்ன?…

வராந்தாவையொட்டி, ஓட்டல் சுற்றுச்சுவர் வரைக்கும் வண்ண விளக்குகளின் அலங்காரம் இருந்தது. சுவருக்கு மேலே கடுமையான இருட்டு. இருளுக்குள் பதிந்த பார்வையை விலக்காமலே, கால்சட்டைப் பையிலிருந்து  சிகரெட் பாக்கெட்டை எடுத்துத் திறந்தார் ஜயசீலன். அனிச்சையாக என்பக்கம் நீட்டிவிட்டு, தாமும் ஒன்றை எடுத்துப் பற்றவைத்தார். லைட்டரின் சுடரை என்னிடம் நீட்டியபோது அவருடைய கைகள் நடுங்கியதைக் கவனித்தேன். அளவைத் தாண்டிக் குடித்துவிட்டதோ, ஹைதராபாதின் வெட்டவெளியில் மண்டியிருந்த குளிரோகூடக் காரணமாய் இருக்கலாம்.

… இது நடந்து வருசக்கணக்கா ஆயிருச்சு. அவரு எங்கிட்டச் சொன்னம்போதே ரொம்ப வருசம் ஆயிருந்துச்சு. கதையெக் கேட்டப்ப எனக்கு ஒண்ணும் தோணலே. ஆனா, அந்த சண்டாளப்பாவி, சொல்லி முடிச்சப்ப ஒதற ஆரமிச்சிருச்சு. சாதாரணமாச் சொன்னாரு: ‘அந்தப் பயலும் கிட்டத்தட்ட ஒன் சாடைலதான் இருப்பான்…’ அதுக்கப்பறம், வெளி மாநிலத்திலே மீட்டிங்ன்னாலே நிம்மதிக் கேடா ஆயிரும். நாமளும் வேற சாதிப் பொண்ணெத்தானெ கட்டியிருக்கோம், ரெண்டு குடும்பத்துக்கும் இஸ்டமில்லாமெ…

கொக்குபோல ஒற்றைக்காலில் ஓங்கி நின்ற கோப்பையில் கணிசமாக மிச்சமிருந்ததைப் படுவேகமாக முழுங்கினார்.

என் அறைக்குத் திரும்பி, நிறை போதையிலும் அரைத் தூக்கத்திலும் புரண்டு கொண்டிருந்தபோது காரணமே இல்லாமல் ருக்மணியக்கா செவிலியர் உடையில் உதித்தாள். இத்தனை வருட இடைவெளிக்குப் பிறகு அவளுடைய உருவெளித் தோற்றம் என்முன் தோன்றியதற்கு என்ன தர்க்கம் இருக்க முடியும்? தவிர, முற்றிலும் புதியவனான என்னிடம் தன் அந்தரங்கத்தை லேசாகத் திறந்து காட்டினானே ஜெயசீலன், பன்மை விகுதியோடு  எனக்குள் நுழைந்தவன், எந்த விநாடியில் ஒருமைக்கு மாறினான் என்பதற்குப் போலவே, அதற்கும்தான் என்ன தர்க்க அடிப்படை இருக்க முடியும்?

தொடர்ந்து விதவிதமான காட்சிகள் தோன்றித்தோன்றி அழிந்தன.

மேலப்பெருமாள் மேஸ்திரி வீதியில், இருள் இறங்கிய நேரத்தில், தரையில் குத்தவைத்து உட்கார்ந்திருந்த ஒருத்தரை ஐந்தாறுபேர் சேர்ந்து ஆளுக்கொரு கழியால் தாக்கியது.

சென்னை மண்ணடிப் பகுதியில் கிளைத்திருந்த சந்து ஒன்றில் பட்டப்பகலில் பிச்சுவாக்கத்தியால் உதரவிதானத்தில் குத்துவாங்கிச் சரிந்த இளைஞன். கீழே விழுந்தபிறகும் சரமாரியாகக் குத்து வாங்கினான். பரபரப்பாக இருந்த அந்த இடம் ஒரே நிமிடத்தில் வெறிச்சோடிய விதம்.

கறுப்புவெள்ளைப் படத்தில், தானும் அடர்கறுப்பு நிறமாய், விளக்குக் கம்பத் துக்கருகில் சாலையோர நடைபாதையில் அம்மணமாய் அமர்ந்து, காலிரண்டையும்  நீட்டி, வேதனையாலோ அவமானத்தாலோ தலைகவிழ்ந்திருக்கும் நடுவயதைத் தாண்டியவர். சுற்றிலும் நின்று கெக்கலிக்கும் சின்னப்பயல்கள். பொட்டலம் மடித்து வரும் தாளையே முழுக்கப் படிக்கும் பழக்கம் உள்ள நான்,  முடிவெட்டக் காத்தி ருந்தபோது, தேய்ந்த பெஞ்ச்சில் கிடந்த பத்திரிகையில் இந்தப் படத்தைப் பார்க்க நேர்ந்த விபரீதம்.

ஆந்திரத்திலோ, மத்தியப்பிரதேசத்திலோ, பகல்நேர விரைவு வண்டியில், வெயில் உறுத்தாத குளிர்பதனப்பெட்டியின் ஜன்னலோரம் வேடிக்கைபார்த்துப் போனபோது, ரயில்பாதையோரம் தலையற்றுக் கிடந்த சடலம்….

இத்தனை காட்சிகளும் வேவ்வேறு தருணங்களில் வெவ்வேறு வருடங்களில் நிகழ்ந்து கழிந்தபோதும், நிர்ணயிக்க முடியாத சாம்பல் நிற வெளிச்சத்தில் என் முன் தோன்றி அழிந்தது இன்னமும் புரியாத ஆச்சரியமாய் எனக்குள் மீந்திருக்கிறது.

மற்றபடி, யார்யாரோ பெருக்கிய ரத்தப் பிரவாகத்தில் அமிழ்ந்து மூச்சுத் திணறித் தூங்கிப் போனேன் அன்று.

 

பிற படைப்புகள்

Leave a Comment