“என்னை விடத் தீவிரமாக இயங்குங்கள்” – இயக்குனர் பெலா தார்
நேர்காணல்: மார்டின் குட்லாக் தமிழாக்கம் : இரா.தமிழ்செல்வன்

by olaichuvadi

பெலா தார்

ஹங்கேரியன் திரைப்பட இயக்குனர் பெலா தார். 1979ம் ஆண்டு வெளியான ‘ஃபேமிலி நெஸ்ட்’ திரைப்படம் மூலம் தனது வருகையை அழுத்தமாய்ப் பதிந்தவர். எந்த வரையறைகளுக்குள்ளும் அடக்கி விட முடியாத காட்சி மொழி இவருடையது. 9 திரைப்படங்கள், 3 குறும்படங்கள், தலா ஒரு ஆவணப்படம், தொலைக்காட்சிப்படம் இயக்கியுள்ள இவர் ‘தி டுரின் ஹார்ஸ்’ திரைப்படத்துடன் தான் ஓய்வு பெறப்போவதாக அறிவித்தார். நிச்சயம் கலைஞர்களுக்கு மரணம் வரையிலும் ஓய்வில்லை என்பதை மெய்ப்பிக்கும் வகையில் தற்போது சரஜிவோயில் திரைப்படப்பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். இன்னமும் தீவிரத்தன்மை குறையாமல் இயங்கி வரும் அவருடனான ஓர் உரையாடல்…

ஓய்வுக்குப் பிறகான உங்கள் வாழ்கை எப்படி இருக்கிறது?

நான் ஓய்வில் இருக்கிறேனா என்று எனக்கே தெரியவில்லை. ஏனெனில் நான் எனது திரைப்படப் பள்ளி சார்ந்த பணிகளில் தீவிரமாக இயங்கிக் கொண்டிருக்கிறேன்.

போஸ்னியாவில் உள்ள சரஜிவோயில் துவங்கியுள்ளது போல் குரோசியாவிலும் நீங்கள் திரைப்படப் பள்ளியைத் தொடங்கலாமே?

இல்லை இதுவே போதும். இங்கு எனக்கு 35 மாணவர்கள் இருக்கிறார்கள்.  அவர்கள் அனைவரும் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்வேறு காரணங்கள் மற்றும் கனவுகளுடன் வந்திருக்கிறார்கள். அவர்களை வழிநடத்துவதற்கும், அவர்களுடன் செலவிடுவதற்குமே நேரம் சரியாக இருக்கிறது. அதனால்தான் சொன்னேன் எனது ஓய்வு நாட்கள் எப்படி போகிறது என்று கேட்காதீர்கள் என்று.

உங்கள் ஒளிப்பதிவாளர் பிரெட் கிளமெண்ட்டை நீங்கள் உங்கள் பள்ளிக்கு அழைப்பதுண்டா?

சில நேரங்களில் பயிற்சி வகுப்புகளுக்கு அவரையும் அழைப்பதுண்டு. மற்றபடி உலகின் சிறந்த கலைஞர்கள் பலரையும் அழைத்து வருகிறேன்.

குறிப்பிட்டு யாரையாவது சொல்ல முடியுமா?

அபிசார்த் வீய்ரசேத்தகல், கார்லோஸ் ரேய்காடஸ், கெய் மாடின், பெட்ரோ கோஸ்டா, கஸ் வான் சண்ட், எட் லாச்மேன் ஆகியோர் அவர்களில் சிலர்.

நீங்கள் இவர்களை சிறந்த படைப்பாளிகளாக கருதுகிறீர்களா?

நிச்சயமாக அவர்கள் மிகச்சிறந்த படைப்பாளிகள். நான் மோசமான படைப்பாளிகளை அழைப்பதில்லை ஏனெனில் காரணமயில்லாமல் நம் வீட்டுக்கு யாரையும் அழைக்கமாட்டோம் அல்லவா?

ஒரு சுதந்திரமான படைப்பாளியாக உங்களின் திரைப்படங்களில் இருக்கும் தீவிர கருத்துகளுக்காக நீங்கள் தீவிர விமர்சனங்களையும், பிரச்சனைகளையும் எதிர்கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் உங்கள் மாணவர்களை அம்மாதிரியான படைப்புகளைக் கொடுக்க ஊக்குவிக்கிறீர்களா?

பிரச்சனைகள் என்று எதைக் கூறுகிறீர்கள்?

கம்யூனிஸ்ட் ஆட்சிக் காலங்களில் உங்கள் திரைப்படங்களில் இருந்த அரசியல் கருத்துகளுக்காக, உங்கள் திரைப்படங்களுக்கு நிதி வழங்கப்படாமல் போனதே?

ஆமாம், ஆனால் கம்யூனிஸ்ட் ஆட்சிக்காலத்தில் மட்டுமல்ல எல்லா காலங்களிலும் எனக்கு பிரச்சனைகள் இருந்திருந்திருக்கின்றன.

ஆனால் உங்களுக்கு கம்யூனிஸ்டுகளுடன் அதிகம் கருத்துவேறுபாடு இருந்ததல்லவா?  

கம்யூனிஸ்டுகளுடன் மட்டுமல்ல மற்றவர்களுடனும்தான்.

முதலாளித்துவத்துவ அரசுகளுடனுமா?

ஆம் அவர்களுடனும்தான், உங்களுக்கு ஒன்று தெரியுமா? நான் கம்யூனிச ஆட்சிக் காலங்களில் வளர்ந்தவன். அன்று திரைப்படத் தணிக்கை என்பது அரசியல் ரீதியிலாக இருந்தது. பின்னர் அது சந்தைக்கான தணிக்கையாக மாறியது. பின்னர் மீண்டும் அரசியல் கருத்துகளுக்கான தணிக்கையாக மாறியிருக்கிறது. என்னைப் பொறுத்த வரையிலும் எதுவும் மாறியிருப்பதாகத் தோன்றவில்லை.

உங்கள் திரைப்படப் பள்ளிக்கு வருபவர்களில் திறமையானவர்களை எப்படி அடையாளம் காண்கிறீர்கள்?

எங்கள் பள்ளியில் வெவ்வேறான கலாச்சாரம், வாழ்க்கை முறை கொண்ட 35 மாணவர்கள் பயில்கிறார்கள். அவர்கள் ஷிண்டோஸ், இந்து, பௌத்தம், இஸ்லாம் என வெவ்வேறான மத நம்பிக்கை உடையவர்கள். அவர்கள் எல்லோருக்கும் பொதுவாக இதுதான் இயக்கம், இதுதான் படிப்பு என எப்படிச் சொல்ல முடியும்? எல்லோருக்கும் தனித்தனியாக ஒரு திறன் இருக்கிறது.  அதை கண்டறிவதுதான் எனது வேலை. சற்று கடினமானது என்றாலும் அதை நான்தான் செய்தாக வேண்டும்.

நீங்கள் தற்காலத் திரைப்படங்களை கவனிக்கிறீர்களா?

கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன், இன்றைய திரைப்படங்களில் மிகப்பெரும் குழப்பம் இருப்பதாகப் பார்க்கிறேன். மக்களாலும் அதை எளிதாகக் கண்டுகொள்ள முடிவதில்லை. இங்குள்ள வணிகமய சூழலின் எதிர்பார்ப்புகளும், அதன் தேவைகளும் வேறானதாக இருக்கிறது. இன்றைய இளம் படைப்பாளிகளுக்கு வணிகம் சார்ந்த எதிர்பார்ப்புகளை புறந்தள்ளும் அளவுக்கு துணிச்சலில்லை. அவர்களுக்கும் இதுதான் தேவைப்படுகிறது.

உங்கள் உதவியாளரான லாஸ்லோ நீம்ஸ்-ன் சன் ஆஃப் ஸோல்திரைப்படம் விமர்சன ரீதியில் அதிகம் கவனிக்கப்பட்டிருக்கிறது. உங்களின் சக இயக்குனரான லாஸ்லோ ராஷ்க்ம் அந்த படத்தினை புதிய திரை மொழிக்கான தொடக்கப்புள்ளி எனக் கூறுகிறார். இது குறித்து லாஸ்லோ ராஷ்க்ம்  குறிப்பிடும்போது அத்திரைப்படம் மனித உடலையும் அதன் இயக்கங்களையும் விண்வெளியாகக்  கொள்கிறது. அந்த வெளியும் சப்தங்களின் மூலமாகவே சுட்டப்படுகிறது. அதற்கு இங்கு சிறப்பு சப்தங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. நாம் இம்மாதிரியான திரைப்படங்களைப் பார்த்திருந்தாலும் இப்படத்தில் இறுதி வரை நாம் அதைக் காண்கிறோம். இதைத்தான் நான் கதை சொல்லலுக்கான புதிய திரைமொழி என்கிறேன். இங்கு பார்வையாளர்கள் விண்வெளியைப் பார்ப்பதில்லை ஆனாலும் புரிந்துகொள்கிறார்கள். இதை நான் கதை சொல்லலுக்கான முக்கிய நிகழ்வாகபார்க்கிறேன்என்கிறார்.

இதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா?

நான் இனிமேல்தான் அத்திரைப்படத்தைப் பார்க்க வேண்டும். நேரமின்மை காரணமாக எங்கள் இருவராலும் சந்திக்க முடியவில்லை. லாஸ்லோ நீம்ஸ் எனக்காக தனிப்பட்ட முறையில் படத்தை திரையிட்டுக் காட்டுவதாகக் கூறியிருக்கிறார்.

உங்கள் வேலையை பற்றி நீங்கள் விளிக்கும்போது, எப்போதும் பன்மையிலேயே பதிலளிக்கிறீர்களே?

ஆம், ஏனெனில் இங்கு பெலா தார் என்பது ஓர் வர்த்தக அடையாளம் மட்டுமே. ஆனால் இங்கு நான் மட்டுமே அல்ல. என்னுடன்  ஆக்னஸ் ஹிரெனெட்ஸ்கி, லேஸ்லோ கிராஸ்னஹோகாய், மிஹலெ விக் என நாங்கள் நால்வரும் இணைந்துதான் கடந்த 30 ஆண்டுகளாக இயங்கியிருக்கிறோம். அதனால்தான் நான் எப்போதும் பன்மையிலேயே பதிலளிக்கிறேன். அப்படி இது என்னுடைய படம் என்று எதையாவது நான் சொன்னால் அது உண்மையில்லை.

நீங்கள் உங்கள் வேலைகளைப் பிரித்து அதை கூட்டு முயற்சியாக செய்யும் போது உங்களது படைப்புத் திறன் பாதிக்காதா?

நிச்சயமாக பாதிக்காது. ஏனெனில் அனைத்திலும் இறுதி முடிவுகளை நான்தான் எடுக்கிறேன். அவர்களுக்கு நுண்ணுணர்வுகள் அதிகம், நாங்கள் எதைக்குறித்து பேசினாலும் வாழ்க்கையை பற்றியோ, அதன் சூழல்களை பற்றியோ அல்லது எது குறித்தாக இருந்தாலும் எங்களது பார்வைகள் ஒரே புள்ளியில் இருக்கும். ஆம், மிஹலெ ஒரு இசைக்கலைஞர், லேஸ்லோ ஒரு எழுத்தாளராக இருந்தாலும் நாங்கள் பேசிக்கொள்வது வாழ்க்கையைப் பற்றித்தானே ஒழிய திரைப்படத்தைப் பற்றியல்ல.

நீங்கள் ஒளிப்பதிவுக்காகக் கொண்டாடப்படுகிறீர்கள். உங்கள் கேமரா இயக்கம் மற்றும் அதன் அழகியல் சார்ந்த முடிவுகளை யார் எடுக்கிறார்கள்?

எல்லா நேரங்களிலும் அது என்னுடைய முடிவாகவே இருக்கும்.

நீங்கள் உங்கள் திரைக்கதைக்கு ஸ்டோரி போர்டுகள் பயன்படுத்துவதில்லை என்று கருதுகிறேன்?

ஆம், ஏனெனில் படப்பிடிப்புத் தளத்தில் நமக்கு என்ன செய்ய வேண்டும் என்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கும்போது ஏன் அதை விட்டுவிட்டு ஸ்டோரிபோர்டுக்குள் நமது கோணத்தை சுருக்க வேண்டும்?

அப்படியானால் நீங்கள் பரிசோதனைகளை படப்பிடிப்புத் தளத்திலேயே செய்து பார்க்கிறீர்களா?

அப்படியில்லை, படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே என்ன செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்திருப்பேன். படப்பிடிப்பு தொடங்கும்போது என் திரைப்படத்தின் முதல் காட்சியிலிருந்து இறுதிக் காட்சி வரை எப்படி வரப்போகிறது என்பது எனக்குத் தெரியும்.

நீங்கள் உங்கள் திரைப்பட வாழ்க்கையை அரசியல், சமூகம் சார்ந்த ஆவணப்படங்களின் மூலம் தொடங்கினீர்கள். ஆனால் இறுதியில் மனோதத்துவம் சார்ந்த திரைப்படங்களை இயக்கினீர்கள். இந்த மாற்றம் எப்படி நிகழ்ந்தது?

அது படிப்படியாகத்தான் நிகழ்ந்தது. நான்  ஒவ்வொரு பிரச்சனைகளையும் புரிந்துகொள்ள மெதுவாகவே அதன் ஆழத்தை நோக்கி நகர்ந்திருக்கிறேன் என்பதை எனது திரைப்படங்கள் மூலம் நீங்கள் கவனித்திருக்கலாம்.

ஆனாலும் அவை அனைத்தும் அரசியல் சார்ந்ததுதானே?

ஆம் எனக்கும் சமூகக் கருத்துகள் இருக்கின்றன. நிச்சயம் எனது திரைப்படங்களில் அரசியல் சார்ந்த கருத்துகள் இருக்கின்றன, ஆனால் அது முற்றிலும் அரசியல் சார்ந்தது மட்டுமல்ல. இங்கு அரசியல் செயல்பாடு என்பது தினமும் கையாளப்படும் பொருள் போன்றது, ஆனால் என் திரைப்படங்கள் அப்படியானவையல்ல.

நீங்கள் கூறுவது போல் உங்களது திரைப்படங்களில் அரசியல் சார்ந்த அர்த்தங்கள் இருக்கிறது எனில், அதை உங்கள் சொந்த விளக்கத்தின் மூலமாகவா? அல்லது எங்கிருந்து பெற்று அதனைக் காட்சிபடுத்துகிறீர்கள்?

நான் ஏற்கனவே சொன்னது போல் எனக்கும் சமூகம் சார்ந்த  கருத்துகள் இருக்கின்றன. நான் தனி மனித கண்ணியத்தை மதிக்கிறேன் ஆனால் அதற்காக ஒருவரின் விருப்பம் சார்ந்த, அரசியல் சார்ந்த விஷயங்களுக்காக நான் கவலைப்படுவதில்லை. எனக்கு என்ன தோன்றுகிறதோ அதைச் சொல்கிறேன்.

நீங்கள் மேலே கூறியதுபோல உங்களுக்கும் லேஸ்லோவுக்கும் ஒரே கண்ணோட்டம் இருப்பதால்தான் அவர் நாவல்களை அதிகம் பயன்படுத்துகிறீர்களா?

நான் அவர் நாவல்களை தழுவி படம் எடுப்பதில்லை. நான் அவர் புத்தகங்களைப் படித்து, பின் அதில் அவர் கூற வருவதை புரிந்துகொள்வதின் மூலம் நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்கிறோம். அதனால் நாங்கள் இருவரும் பணியாற்றுவது எளிதாக இருக்கிறது.

நீங்கள் டார்கோவ்ஸ்கியை தழுவி எடுக்கப்பட்ட ஆண்ட்ரி ரூப்லேவ் பற்றி…

எனக்கு ஆண்ட்ரி ரூப்லேவ் பிடித்திருந்தது அவ்வளவே. டார்கோவ்ஸ்கி கடவுள் நம்பிக்கையுள்ளவர் ஆனால் நான் அப்படியல்ல.

நீங்கள் ஒரு முற்போக்கு படைப்பாளியா?

நான் கடவுள் நம்பிக்கையற்றவன் அவ்வளவே.

அப்படியென்றால் கடவுள் வெறுப்பாளரா?

இல்லை

த டுரின் ஹார்ஸ்திரைப்படம்தான் உங்களது கடைசி படம் என கூறியிருக்கிறீர்கள். ஏன் அது உலகின் முடிவைக் கொண்டிருப்பதாலா?

நாம் பேரழிவைப்பற்றி பேசுகிறோம் ஆனால் அப்படி ஒரு நிகழ்வு என் புரிதலில் இல்லை. வாழ்க்கை மிக மெதுவாக, படிப்படியாக நம் முன்பாகவே மறைந்து போகும் அவ்வளவே.

ஆனாலும் உங்களது வெர்க்மெய்ஸ்டர் ஹார்மோனிஸ் (Werckmeiste HTarrmonies) திரைப்படத்தில் பேரழிவைப் பற்றிய குறிப்பிடல்கள் இருந்ததே?

அப்படி எதுவுமில்லை. அந்தத் திரைப்படத்தை எடுக்கும்போது அதில் சில விசித்திரங்கள் இருப்பதாகத் தோன்றியது. மக்களால் எப்படி எல்லாம் அழிக்கப்பட்டு மக்களுக்கான அரசியல் வளர்ந்தது என்பதைத்தான் அப்படம் கூறுகிறது. நாம் இப்படிப் பார்ப்பதன் மூலம் அந்தத் திரைப்படம் எவ்வளவு இயல்பானதாக மாறுகிறது.

ஆனால் அப்படத்தில் வரும் திமிங்கலக்காட்சி வெளிப்படையாகவே ஒரு அதிர்வை ஏற்படுத்துகிறது. அதை நாம் மதம் சார்ந்த குறியீடாகக் கூட விளங்கிக்கொள்ளலாம் அல்லவா?

அத்திரைப்படம் மூன்று முக்கியப் பாத்திரங்களைச் சுற்றியே இருக்கும். அந்த மூவருக்கும் ஏதோ ஒரு வகையில் முடிவின்மையுடன்  ஒரு தொடர்பு இருக்கும். வால்சுகவுக்கு அண்டதினுடனும், எஸ்தருக்கு தூய குரல்களுடனும் ஒரு தொடர்பு இருக்கும், அந்தத் திமிங்கலம் கடலிலிருந்து வந்திருக்கும், அந்த மூவருக்குமே முடிவின்மையுடன் தொடர்பிருக்கும். அதே போல் இன்னொரு பக்கத்தில் எல்லோரும் அவரவர் வாழ்க்கையை தங்களது அன்றாட தேவைகளுக்காக வாழ்கிறவர்கள். அவர்களின் தேவைக்காக மற்றவரைக் கொல்லவும் தயங்காதவர்கள். அவர்களை நாம் திமிங்கலத்துடன் ஒப்பிடலாம்.

உங்கள் நண்பர் ஆண்ட்ரு கோவேச் அவரது நூலில் உங்களால் இனிமேல் சமகால சினிமாவின் எல்லைக்குள் தீவிரமாக இயங்க முடியாது என சொல்லியிருக்கிறாரே. அந்த உணர்வு உங்களுக்கும் இருக்கிறதா?

நான் இன்னும் அவரின் புத்தகத்தை முழுமையாகப் படிக்கவில்லை, ஏனெனில் அவர் என் படங்களில் இருக்கும் நீண்ட காட்சிகளைப் பார்த்து அதீதமாக கற்பனை செய்துகொள்கிறார். அவரின் கற்பனாவாத எழுத்தைப் படிக்கும்போது கொஞ்சம் உணர்சிவசப்பட்டு விடுகிறேன் என்பதால் அப்புத்தகத்தை படிக்காமல் பாதியிலேயே நிறுத்திவிட்டேன். ஆனால் நான் அவர் எழுதியதியதைப்பற்றி கவலைப்படவில்லை.

அவர் கூறுவதைப்போல் இனி உங்களால் தீவிரமாக இயங்க முடியாது என்பதை ஏற்றுக்கொள்கிறீர்களா?

மிகத்தீவிரமாக இயங்கும் திரைப்படக் கலைஞர்களில் நானும் ஒருவன். ஆனால் என்னுடைய பிரச்சனை என்னவெனில் எனக்கு பின்னால் இருப்பவர்களைப் பார்த்து கொஞ்சம் உரக்கவே சொல்கிறேன் “என்னை விட தீவிரமாக இயங்குங்கள்” என்று. இளைய இயக்குனர்களிடம் நான் சொல்வது மிகத்தீவிரமாக இயங்குங்கள், என்னை விட இன்னும் புரட்சிகரமாக இயங்குங்கள் என்று.

தீவிரமாக இயங்கச் சொல்வது முறையாகவா அல்லது அதன் பொருள் சார்ந்தா?

எல்லாம் சேர்த்து.

உங்களது ஒற்றைப்படை கவித்துவத்துக்காக, உங்களை நவீனத்துவ படைப்பாளியாகக் கருதலாமா?

நிச்சயமாக, உங்களுக்குத் தெரியுமா எனக்கு எத்தனை பட்டங்கள் இருக்கிறதென்று… லெஜெண்டரி, மாஸ்டர்…

இன்னும் நீங்கள்…..?

நிச்சயமாக, அவைகளை மறந்துவிடுங்கள்… ஏனெனில் நான் இன்னும் உயிரோடுதான் இருக்கிறேன். அதனால் எனக்கு இந்த அடைமொழிகள் வேண்டாம். அவைகள் என்னைக் காயப்படுத்துகின்றன. எனக்கு இந்த சாதாரண வாழ்க்கையே போதும்.

உங்களைக் காய்ப்படுத்தவோ அல்லது இழிவாகப் பேசவோ இதனை கேட்கவில்லை, உங்களது தனித்தன்மையையும், சினிமாவில் உங்கள் பங்கையும் நீங்கள் உணர்ந்திருக்கிறீகளா என்பதை அறியத்தான்.

நியூயார்க்கில் எனக்கு அளிக்கப்பட்ட ‘The ITarrst Modernist’ என்ற பட்டம் என்னை மிகவும் காயப்படுத்தி விட்டது. எனக்குப் புரியவில்லை எப்படி அவர்களால் ‘கடந்த’ என்கிற வார்த்தையைப் பயன்படுத்த முடிகிறது.

உங்களை நீங்கள் தத்துவவாதியாக நினைத்ததுண்டா?

எனது சிறுவயதில் அப்படியாக நினைத்திருக்கிறேன்.

நீங்கள் உங்கள் படங்களை தத்துவமயமாக்குகிறீர்களா?

இல்லை நான் ஒரு சாதாரண திரைப்பட இயக்குனர் அவ்வளவே.

என்னமாதிரியான? எந்த காலத்தைச் சார்ந்த தத்துவத்தை நீங்கள் பரிந்துரைப்பீர்கள்?

எதுவுமே இல்லை

நீட்சேவின் தத்துவம் கூடவா இல்லை? ஏனெனில் டுரின் ஹார்ஸ் படத்தில் மணமுறிவுக்குக் காரணமாக நீங்கள் அவருக்கு நடந்த சம்பவத்தைதான் குறிப்பிட்டிருப்பீர்கள்.

இல்லை. எனது பள்ளி நாட்களில் நான் பெரிய தத்துவவாதியாக இருக்க வேண்டுமென்று நினைத்ததுண்டு. அக்காலகட்டங்களில் நான் தீவிர இடதுசாரியாகவும் இருந்தேன். பின்னாட்களில் நான் தத்துவம் குறித்த எண்ணங்களையும் மறந்து போனேன். இவையெல்லாம் நடந்து வெகுகாலங்கள் ஆகின்றன.

உங்களை நீங்கள் பரிசோதனைகள் மேற்கொண்ட கலைஞராக பார்த்ததுண்டா?

நான் என்னை கலைஞன் என்றே நினைத்தது கிடையாது. நான் சாதாரண திரைப்பட இயக்குனர் அவ்வளவே.

உங்களது திரைப்படங்களுக்கு ஆரம்ப காலங்களில் பண உதவிகள் கிடைக்காமல் தவித்திருக்கிறீர்கள் அல்லவா?

அது ஒரு நீண்ட அரசியல் சார்ந்த கதை. கம்யூனிச ஆட்சிக்காலத்தின் கடைசி காலமது. நாங்கள் புதிய தலைமுறையைச் சார்ந்த திரைப்படப் படைப்பாளிகளாக இருந்தாலும் எங்களை அரசாங்கம் கொல்ல நினைத்தது. எல்லா அமைப்புகளுக்கும் வெளியிலிருந்து படமெடுத்த காலம் அது.

உங்களுக்கான பண உதவிகளை எங்கிருந்து பெற்றீர்கள்?

படத்தயாரிப்பு ஸ்டுடியோக்களில் கேமரா இருக்கும், சில மீட்டர் ஃப்லிம் எப்போதும் கைவசம் இருக்கும், கொஞ்சம் கையிருப்பு மட்டுமே போதுமானதாக இருந்தது. ஏனெனில் ஃப்லிமின் விலை மிக மிகக் குறைவு, ஆகவே பணத்தேவை என்பது பெரிதளவுக்கு இல்லை. படப்பிடிப்பைத் தொடங்கி நடத்த வேண்டியது மட்டும்தான் எங்களது பணியாக இருந்தது.

நீங்கள் சொன்ன மேற்கோளிலிருந்து தீவிரமான கலைவடிவங்கள் நேரடியாகவே அதன் பார்வையாளர்கள் மேல் தாக்கம் செலுத்த வேண்டுமாஇதை கொஞ்சம் விரிவாக சொல்லுங்கள்…

இதனை சொன்னதாக எனக்கு நினைவில்லை. ஒரு திரைப்படம் என்பது வெறும் படம்தான். நான் சொல்ல வருவது இது ஒன்றைத்தான். திரையரங்குக்குச் செல்லுங்கள், இருளில் அமர்ந்து படத்தைப் பாருங்கள் பின் நீங்கள் திரையரங்கை விட்டு வெளியேறும் போது எப்படி இருக்கிறீர்கள்? எவ்வாறு உணர்கிறீர்கள்? கொஞ்சம் வலிமையாக உணர்கிறீர்களா? அதில் இருந்து எதையாவது பெற்றுக்கொண்டீர்களா? அல்லது நீங்கள் திரையரங்கினுள் நுழையும்போது இருந்த அதே உணர்வில்தான் இருக்கிறீர்களா? அவ்வளவுதான்.

தி டுரின் ஹார்ஸ் திரைப்படத்திலிருந்து…

எடுத்துக்காட்டாக  உங்கள் த டுரின் ஹார்ஸ்திரைப்படத்தை எடுத்துக் கொள்வோம். அதன் உள்ளடக்கம் இருண்மை, கொடுங்கனவுகள் அதோடு உலகின் இறுதி நாட்களின் சூழல்கள்தான் இல்லையா?

இல்லை

அதை நீங்கள் ஒப்புக்கொள்ளவில்லையா?

இல்லை

அப்போது அது மகிழ்ச்சி நிறைந்த திரைப்படமா?

அதே கேள்வியை நான் உங்களிடம் கேட்கிறேன், அப்படத்திலிருந்து வெளியேறும்போது நீங்கள் எப்படி உணர்ந்தீர்கள்?

எனக்குப் புல்லரித்துவிட்டது

நீங்கள் வலிமையானவர்தான்

ஆனால் அதனால் மாத்திரம் அதை ஒப்புக்கொள்ள முடியுமா? பல பார்வையாளர்களுக்கு அது உலகின் அழிவைத்தான் நினைவுபடுத்தியது

இருக்கலாம் ஆனால் எல்லோரும் அப்படித்தான் உணர்ந்திருப்பார்கள் என்று சொல்ல முடியாதே.

இன்றைக்கு வரும் இளம் விமர்சகர்களை ஆதரிக்கிறீர்களா, அது ஏன் முக்கியமென்று நினைக்கிறீர்கள்? இன்றைய திரைப்படம் குறித்த விமர்சனம் எப்படி இருக்கிறது?

உண்மையில் நாம் இப்போது ஒரே அணியில் இருக்கிறோம். இங்கு திரைப்படக் கலாச்சாரம் என்பது ஒரு குழு. ஆவணப்படம், அனிமேஷன், திரைப்படங்கள், திரைப்படம் சார்ந்த வரலாற்றாய்வாளர்கள், திரைப்படம் சார்ந்த பத்திரிக்கைகள் அனைத்துமே ஒரே குழுதான், அவற்றுள் எதாவது ஒன்றுதான் முக்கியமென்பது முட்டாள்தனமானது. திரைப்பட விமர்சகர்கள் பணியும் முக்கியமானதுதான் ஆனால் அவர்கள் நம்மைப் புரிந்துகொள்ள வேண்டும்.

எனக்கு விமர்சகர்களுடனான பிரச்சனை என்பது அவர்களுக்கு நாம் எப்படி படம் எடுக்கிறோம் என்பதே தெரியாது. இருவருக்குமான  அகராதி என எதுவும் இல்லை என்பதால் சில நேரங்களில் நாம் நம் மொழியை புரிந்துகொள்ள அவர்களுக்கு அதிக அழுத்தம் தர வேண்டியிருக்கிறது. அதனால்தான் எனது திரைப்படப் பள்ளியில் ஒளிப்பதிவு, நடிப்பு மட்டுமின்றி கொஞ்சம் திரைப்படம், பத்திரிக்கை குறித்தும் மாணவர்கள் அனைவரையும் ஒரே இடத்தில் வைத்து சொல்லித் தருகிறோம்.

பிற படைப்புகள்

Leave a Comment