தத்துவார்த்த அரசியல் அரங்க அரசியலாய் உருக்கொண்டது
ஞா.கோபி

by olaichuvadi

 

கடந்த மார்ச் 27ம் தேதி மாலை, தென்னகப் பண்பாட்டு மையம், தஞ்சாவூரில் ‘மாள்வுறு’ நாடகம் நிகழ்த்தப்பட்டது. தற்காலத் தமிழ் அரங்கச் சூழலில் இந்நாடக நிகழ்வு, அது உருவான விதம், அப்பிரதி முன்னெடுக்க விழையும் அரசியல் நிலைப்பாடு மற்றும் நடிகர்களின் வழங்கு நுட்பங்கள் போன்றவற்றை மிக நுட்பமாக நோக்க வேண்டிய தேவையிருக்கிறது. 1961ல் International Theatre Institute முன்னெடுப்பில், மார்ச் 27ஆம் தேதி ‘உலக நாடக தினம்’ என குறிக்கப்பட்டு இன்று வரை கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக அன்றைய தினம் உலக நாடுகள் அனைத்திலும் நாடக நிகழ்வுகள், கருத்தரங்கங்கள் என நடத்தப்பட்டு வருகிறது. அவ்வகையில் கலாச்சாரத்துறை அமைச்சகம், இந்திய அரசு, தென்னகப் பண்பாட்டு மையம், தஞ்சாவூர் ஆகியவற்றுடன் இணைந்து தஞ்சையை இயங்குதளமாகக் கொண்டு இயங்கும் ‘உதிரி நாடக நிலம்’ நாடக தினத்தைப் புதிய பல பார்வையாளர்களோடு கொண்டாடியது. சமகால நாடகச் செயல்பாட்டார்களைச் சிறப்பித்தல் மற்றும் உதிரி நாடக நிலத்தின் புதிய படைப்பான “மாள்வுறு” நாடகம் என்பதே நிகழ்வின் உள்ளடக்கம்.

மாநில அரசுகளும் நாடகக் கல்வித் தளங்களும் இத்தினத்தைக் கொண்டாடுவதில் சோர்ந்துவிட்ட நிலையில் இதுபோன்ற நிகழ்வை உதிரி நாடகக் குழு தொடர்ச்சியாக மூன்றாம் ஆண்டாகத் தஞ்சையில் நிகழ்த்துவது என்பது முக்கியத்துவம் நிறைந்தது. ஏனெனில், தமிழக நாடக வரலாற்றில் பல புதிய முன்னெடுப்புகள் தொடர்ச் செயல்பாடுகளாய் வளர் நிலை நோக்கி நகராமல் தேங்கிப்போனதற்கு பார்வையாளர்கள் மரபின் கால நிலையில் ஏற்பட்ட இடைவெளி ஒரு முக்கிய காரணமாகும் என்பது யாவரும் அறிந்ததே.

அவ்வகையில் மூன்று ஆண்டுகளாக இத்தினத்தில் தொடர்ப் பார்வையாளர்களைத் தக்கவைத்தல் மற்றும் புதிய பார்வையாளர்களை இணைத்தல் போன்றவை  நடந்தேறிக் கொண்டு வருவதே இச்செயல்பாடு முக்கியத்துவம் பெறுவதற்கான காரணம். மேலும் அம்முக்கியத்தினுள் ஒளிந்திருக்கும் பாடுகளைப் பற்றி பேசாமல் இச்செயல்பாட்டின் இறுதி நிலையில் நிற்கும் நிகழ்த்துப்பிரதி குறித்துப் பேசுதல் இயலாது. நிகழ்த்துத் தளம் எனும் அளவில் மட்டுமே அரசு பக்கமிருந்து உதவி எனும் நிலையில் தொடங்கும் இவ்விழா வேலைகள், ஏனைய பெரும் பொருட்செலவுகளுக்கு ஆர்வமுள்ள தனி நபர்களிடமிருந்தும் சில தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்போடும் பெறுவது என்பதெல்லாம் அவ்வளவு எளிதான காரியமல்ல என்பதே நிதர்சனம். அப்படியான பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க, விழாவை வடிவமைப்பவர், தானே பொறுப்பேற்றுக் கடனுக்கு வாங்கி நிகழ்வை நடத்தி முடிக்கிறார். அப்போதைக்கு அது பெரும் பிரச்சனை இல்லை எனும்போதும் அப்பிரச்சனைகளிலிருந்து மீண்டு வருவதற்கு அவ்வியக்குநர் தன்னுடைய தொடர்ப் படைப்புச் செயல்பாடுகளுக்குள் பெரும் இடைவெளிகளைச் சந்திக்கிறார். இருப்பினும் இழப்பீடுகளுள் நின்று தொடர் முயற்சிகளைச் செய்து கொண்டே இருப்பதன் காரணம், பார்வையாளர்களைத் தக்கவைத்தல் என்பதற்காகவே. ஏனெனில் பார்வையாளர்களே நிகழ்த்துப்பிரதி முழுமையடைவதன் காரணகர்த்தாக்கள். அவ்வகையில் உதிரி நாடக நிலத்தின் நிறுவனர் கு.விஜயகுமாரின் தன் தொழில் சார் அரசியல் நிலைப்பாடு என்பது மிகத் தெளிவானதாக இருப்பது புலனாகிறது.

 

அவருடைய அத்தகைய தெளிவான நிலைப்பாட்டுடன்  நிகழ்த்தப்பட்ட ‘மாள்வுறு’ எனும் நாடகத்தின் பிரதி உருவாக்கம் தொடங்கி அதன் செயல்பாட்டு முறைமைகளையும் அணுகும்போது இன்னும் முக்கியத்துவம் நிறைந்த பல களன்களைக் காணலாம்.

“முன்னர் என் அரசியல் நிலைப்பாடும் அரங்கமும் தனித்தனியே இருந்தது. அந்தப் பிளவை நாங்கள் உணர்ந்த நேரத்திலிருந்து எங்கள் தத்துவார்த்த அரசியல் அரங்க அரசியலாய் உருகொண்டது” – என்ற பாதல் சர்க்காரின் கூற்று இங்கு பொருந்துகிறது. ஆம் ‘மாள்வுறு’ நாடகப்பிரதி உருவான தளம் கல்லூரி என்பதும் நடிகர்கள் கல்லூரி மாணவர்கள் என்பதாலும், இயக்குநரான விஜயகுமாரின் தொடர் செயல்பாட்டில் கண்ட நிலைப்பாட்டோடு இப்பிரதிக்கேயுரிய அரசியல் நிலைப்பாடு பொருந்தி இந்நாடகம் ஒரு புதிய அரசியல் பிரகடனத்தை அந்நடிகர்கள் மூலம் முன் வைத்தது எனலாம். அது ‘கல்வியில் நாடகம்’ எனும் களத்தில் மிக முக்கிய காரணியாக முன் வைக்கப்படுவது ‘படைப்பூக்கத்தை மேம்படுத்த நாடகத்தைக் கைகொள்வது’ என்பதாகும். அப்படைப்பூக்கம் என்பது என்ன? வெறும் கற்பனைகளை விசாலப்படுத்துவதா? இல்லை. சமகாலம் தொடங்கி எதிர்கால வாழ்வியல் சிக்கல்கள் வரை எதிர்கொள்ள எவ்விதமாக எதிர்வினைகளை உருவாக்குவது என்பதை  நாடகச் செயல்பாட்டின் வழி அனுபவமாக்கிக் கொள்வது. சான்றாக,

“Drama in Education (DiE) is a specialization that privileges make – believe play as a significant learning medium in the human lifespan. Participants can role-play situations, act out imaginary scenarios, or demonstrate fictitious images for the purposes of insight and growth. This approach is shaped by a commitment to three processes: Action, Reflection,Transformation (ART)” – (Educational Theatre concept note, Department of music and performing arts professions, new york university) முன் வைப்பதை நினைவு கொள்ளலாம். அவ்வகையில் தஞ்சாவூர் அன்னை வேளாங்கண்ணி கலை அறிவியல் கல்லூரியில் உள்ள காட்சித் தொடர்பியல் துறையின் (visual communication) முதலாம் ஆண்டு மாணவர்கள் 30 பேருக்கான ஒரு மாத கால நாடகப் பயிற்சிப் பட்டறையில் தொடங்கி, செயல்பாட்டில் நாடகக் கருப்பொருளை விவாதக் களன்களின்வழி கண்டடைந்து, பங்குபெற்ற அனைவரையும் நிகழ்வுக்கும் கொண்டு வந்த அளவில் நிறைவுற்று இருக்கிறது. மேற்கண்ட நாடகக் கல்வியின் அடிப்படை நோக்கத்தில் வழுவாமல் பயணித்திருக்கிறது என்று சொல்வது மிகையாகாது.

பள்ளிக் காலம் முழுக்க ‘வெளிப்பாட்டுச் சுதந்திரம்’ என்றால் என்ன? என்ற பிரக்ஞையற்ற சூழலிலேயே இருந்து வெளியேறும் மாணவர்கள் கல்லூரிக்குள் வந்ததும் கட்டற்ற சுதந்திரம் என்பதனை நோக்கிச் செல்கிறார்கள். அவர்களின் அனுபவத்தில் சினிமாத்தன நாயகர்களும் நாயகிகளும் நிறைந்திருக்கும் நிலை ஒருபுறம். மற்றொருபுறம் விளம்பரங்களின் வலையில் சிக்கி வாழ்க்கை முறைகளில் உலகளாவிய நிலைக்கு உயரத் துடித்துத் தொடர்ந்து போராடுவது. இத்தகைய தொடர்ப் போராட்டங்களால் அவர்கள் அங்கும் தத்தமது சுயசக்திகளைக் கண்டு உணரும் கணங்களைப் பயன்படுத்தாமலே கூட்டத்தோடு கூட்டமாகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமெனும் நிலையில் சில பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் நாடகப்பயிற்சிகளின் விளைவை கண்டுணர்ந்தவர்களால் முன்னெடுக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது.

அவ்வரிசையில் தஞ்சாவூர் அன்னை வேளாங்கண்ணி கலை அறிவியல் கல்லூரியும் சேர்ந்திருக்கிறது. இதுபோன்ற பயிற்சிகள் பற்றிய எந்த பிம்பமும் தங்கள் அனுபவக் கிடங்கில் இல்லாத மாணவர்களை வைத்து விஜயகுமார் தொடங்கிய முதல் வகுப்பு எப்படி இருந்திருக்கும்? நினைத்துப்பார்க்கலாம். முதலில் அந்த சூழலுக்குத் தேவையான அவரவரின் உடலும் மனங்களும் அதற்குள் பொதிந்து கிடக்கும் விளையாட்டு உணர்வுகளை மீட்டெடுத்து இருப்பார். அத்தகைய விளையாட்டு உணர்வில் ஆழப் பொதிந்திருக்கும் தனி நபர் அனுபவம்சார் திறன்களைக் கண்டடைதல், பின் அதன் வழி கூட்டுச் செயல்பாடுகளுக்குத் தங்களை ஒப்புக் கொடுத்தல் எனும் பெரும் சக்தி நோக்கி முன்னேறியிருப்பார். மேலும், பங்கேற்ற அவர்களுக்கேத் தெரியாமல் அவர்களின் உடல் மனம் ஒருங்கிணைந்த புதிய செயல்பாட்டு அனுபவங்களைத் தாங்கள் கற்றுக்கொண்டுதான் இருக்கிறோம் என்பது தெரியாமலேயே அவர்களுக்குள் உட்செலுத்தியிருப்பார். மேலும், அடிப்படைப் பயிற்சிகளை மட்டுமே கொடுத்து பட்டறையை நிறைவு செய்வது என்றில்லாமல் ஒரு நாடக நிகழ்வு இறுதி நிலை, என்ற வடிவமைப்புடன் வேலையைத் தொடங்கியிருப்பார்.

 

அதனாலேயேதான் இந்நாடகத்தின் செயல்பாட்டு வடிவத்தைப் பற்றி பேசாமல்போக இயலா நிலையைக் கொண்டிருக்கிறது இக்கட்டுரை.  அச்செயல்கிரமத்தில், மாணவர்களிடத்தில் விவாதப் பொருட்களாய் அவர் தேர்ந்தெடுத்த சமகாலப் பிரச்சனைகளே இந்த ‘மாள்வுறு’ எனும் நிகழ்த்துப்பிரதியாய் உருமாறியிருக்கிறது. அச்செயல்பாடே மாணவர்களிடத்தில் அறம் சார்ந்த ஒரு அரசியல் முன்னெடுப்புக்கான அனுபவக்களமாகவும் மாறியிருக்கிறது. இன்றைய சூழலில் நம் கண்முன் நடக்கும் சாதி வன்மக்கொலைகள், கார்ப்பரேட் சந்தைகளின் வழி மனிதர்கள் வெறும் பொருட்களாக மாற்றப்பட்ட சூழல், உலக அரசியல் யாரால் தீர்மானிக்கப்படுகிறது? என்று தெரிந்தும், உள்ளூர் அரசியல் வெறும் வியாபாரமாகிவிட்ட நிலையென அனைத்தும் தெரிந்தும், நம்மால் Like, Share என்பது தாண்டி வினையாற்ற முடியாததற்கு என்ன காரணம்? அதே நேரம் இதே காலத்தில்தான், எதிர்வினையாற்றிக் கொண்டே தொடர்ப் போராட்டக்களத்தில் இருக்கும் சிந்தனையாளர்களும் செயல்பாட்டாளர்களுக்கும் எங்கிருந்து கிடைத்தது அச்செயல் ஊக்கி? அவரவர் சார்ந்த நிலைப்பாட்டுடன் ஒத்துப்போன பொதுவுடைமை, சமத்துவம் முன்வைக்கும் அரசியல் அமைப்புகளால் அவர்கள் கள அனுபவம் தந்ததும் தருவதும்தானே!

அத்தகைய கள அனுபவத்துக்கு நெருக்கமான உடல், மனம் ஒருங்கிணைந்த அரசியல் உரையாடல்களை முன்னெடுக்கும் கற்றல் கற்பித்தல் முறைகளை, போட்டித்தேர்வுகளுக்கு ஆகாதது என்று நிர்வாகமும் ஆசிரியர்களும், ஏன்? பெற்றோர்களும் சேர்ந்து குழி தோண்டி புதைத்து ஆண்டுகள் பல ஆகிவிட்டது. இந்நிலையில் நின்று பார்த்தால், முற்றிலும் செயல் அனுபவக் களனான நாடகம் வழி அக்குறைபாட்டைக் களைய முடியும். ஆம், பங்கேற்போர் ஒவ்வொருவரும் தத்தமது வெளிப்பாட்டு வகைமையை உணர்ந்து எதிர்வினையாற்றுவது, சக மனிதர்களை நேசிப்பதும் அதிகார மையத்தினை உடனுக்குடன் கேள்வியெழுப்பி தமது உரிமையை மீட்பது என்பதையெல்லாம், போலச்செய்தல் என்பதன் களனான  நாடகச்செயல்பாட்டு வழி செய்வதன்றி, வேறு வழி என்ன இருக்க முடியும்?

ஆம், முதலில் நாடகக் களனை அவர்களிடத்தே நேர்ந்த உரையாடல் வழி கட்டமைப்பது என்பது அப்பிரதிக்கு அவர்களே உரிமையுடையவர்கள் (ownership) என்பதாகிறது. அந்த முதல் அங்கீகாரம் தரும் உற்சாகத்தில் அவர்களை மேலும் நிருபிக்க ஒத்திகை நேரம் போக மற்ற நேரங்களிலும் உழைத்துத் தங்களை மெருகேற்றிக் கொள்ளத் துவங்குகின்றனர். அதன் பயன் மொத்தக் குழுவினது தயாரிப்புக்கு வலுசேர்க்கிறது. அந்த வலுவென்பது நாடகக் கரு தானே. ‘தீர்ந்த சுனை, காய்ந்த பனை, நேர்ந்த வினை’ என்பதுவே இந்நாடகக்கரு.  இதை இம்மாணவர்கள் தத்தமது நடிப்புடலைக் கண்டடைந்து நிகழ்த்துப் பிரதியாக்கியிருப்பது இக்காலத்தின் முக்கிய அரசியல் செயல்பாடாகியிருக்கிறது. குறிப்பாக, இந்தச் செயல்முறைத் திட்டங்கள் பற்றி ஏதுமறியா பார்வையாளர்களுக்கு அந்த நடிப்புடல்கள் வழி நிகழ்வில் கிடைத்த நிகழ்த்துப்பிரதி என்பதுதான் மேற்கண்ட அரசியல் முன்னெடுப்புக்கான காட்சி வழி சாட்சி.

இந்நாடகம் முழுக்க இந்த நடிகர்கள் ஒரு குறிப்பிட்ட பாத்திரத்துக்குள் அடங்காமல் பல்வேறு பாத்திரங்களுக்குள் நொடிக்கு நொடி நுழைந்து வெளியேறியபடியே இருக்கிறார்கள். இயற்கையின் பிரதானக் கொடையான தண்ணீர் நம் காலத்தில்தான் வியாபாரப் பொருளாகியிருக்கிறது என்பது தொடங்கி, சக மனிதனைச் சாதியின் பெயரால் கொலை செய்வது நம் காலத்திலும் தொடர்வது, உரிமை கேட்டு சமர் செய்த வீரக் குடிகளைப் போர் அறம் மீறி  நம்முன் கொன்று குவித்ததைப் பார்த்த தலைமுறை நாம்தான் என்பதும், நாட்டையே நச்சுக் காடாக்கி உலக அளவில் வியாபாரத்திற்கான களமாகத் தமிழகத்தைத் தேர்வு செய்து சாவுச் சடங்குகளை தொடர்கதையாக்கிக் கொண்டிருப்பது, நம் நாட்டு விதைகளை நம் கையால் மலடாக்குவது என்பதையே நவீன வாழ்வியல் முறையென வாழ்ந்து கொண்டிருப்பது என அனைத்தும் தெரிந்தும் ‘பார்க்கலாம் பார்க்கலாம்’ என அனைத்தையும் மிக இயல்பாய்க் கடந்து போகும் நம் எல்லோரையும் போல முதலில் தோன்றி நாடகத்தை வளர்த்தெடுத்தார்கள். தொடர்ந்த பகுதிகளில் வியாபார வலை நம் கண்முன்னே பின்னப்பட்டு நம் மீதே வீசி நம்மையே அதில் அள்ளியெடுத்துக் கரன்சியாய் மாற்றிப் பார்க்கும் வியாபார வல்லுருக்களாகவும் ரூபமெடுத்து நம் வாழ்வியல் முறையில் உள்ள அபத்தத்தைக் காட்சியாக்குகிறார்கள்.

‘பார்த்துக் கொள்ளலாம்’ என எல்லோரும் மிக அழுத்தமாகச் சொல்லி கைவிரி நிலைக்குப் போனாலும், அக்கூட்டத்தில் இருக்கும் ஒருவனும் ஒருத்தியும் உணர்ந்து பதறியெழுந்து, பிடிவாதக் குணத்துடன் அக்கூட்டத்துக்கே பெரும் சக்தி தந்து அதிகாரத்தை நோக்கி வீறுகொண்டு போவதையும் அவர்களின் நடிப்புடலின் வழி காட்சியாக்குகிறார்கள். மொத்தத்தில் இன்றைய சூழலில் கைபேசிக்குள் நமது அனைத்தும் அடங்கிப் போய்விட்டதே! என்று வெட்கமுறாமல், பெருமைப்பட்டுக் கொள்ளும் சமூகத்துக்கான விழிப்பாக இந்நாடகத்தை அவர்கள் தங்கள் மனம் ஒருங்கிணைந்த உடல் குரலுடன் நடித்துக் காட்டியிருக்கிறார்கள். நாடகம் முடிந்தவுடனேயே பார்வையாளர்கள் காட்டிய பாராட்டு வாழ்த்துகள், நடிகர்களான அந்த இளைய சமூகத்துக்கு தாங்கள் பயணப்பட்ட வழி சரிதான் என உணர்த்தியிருக்கும். எனவே அவர்களிடத்தில் எழும் முடிவுகளைக் கொண்டு எதிர்வினையாற்ற எவ்வித அச்சமும் அவர்கள் படமாட்டார்கள் என நம்பலாம்.

அதை உறுதிப்படுத்தும் விதமாக, நாடகத்தின் இறுதியில்

‘கொலைவாளினை எடடாமிகு

கொடியோர்செயல் அறவே’

என முடித்திருக்கும் இயக்குநரின் இயங்கு சூட்சமமே சாட்சி. ஆம், கொலை வாள்,  என்பது ‘இனியும் தாமதிக்காமல் ஆய்ந்தறியும் அறிவோடு வாழப் பழகுங்கள்’ என்று நடிகர்களையும் விழிப்படையச் செய்து, அவர்களின் வழியே பார்வையாளர்களை விழித்திருக்கச் சொல்லி அனுப்பி வைத்திருக்கிறார். அவ்வகையில்  ‘மாள்வுறு’ நிகழ்த்துப்பிரதி வழி விழிப்பிற்கான திறவுகோலாய் நம்முன் காட்சியாகியிருக்கிறது. இனி வருவது உதிரிகளின் காலமே என்பதை நன்கு உணர்ந்து நாடகச் செயல்பாட்டாளர் விஜயகுமாருக்கு களன் அமைத்துக் கொடுத்த அருட்தந்தை ஆரோக்கியதாஸ் மற்றும் அவருடன் இணைந்து இப்பிரதியின் செயல் வடிவத்துக்கு உழைத்த அனைவரும் கொண்டாடப்படவேண்டியவர்களே…

 

பிற படைப்புகள்

Leave a Comment