கல்மலர் – 2
சுநீல் கிருஷ்ணன்

by olaichuvadi

 

(சாகித்திய அகாதமி நிகழ்வில் காந்தியின் எழுத்துக்கள் குறித்து ஆற்றிய உரையின் இரண்டாம் பகுதி. அவருடைய தென்னாபிரிக்காவில் சத்தியாகிரகம் குறித்து இக்கட்டுரை பேசுகிறது)

காந்தி தென்னாபிரிக்கா போராட்டத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு இந்தியா திரும்புகிறார். இந்திய அரசியல் வெளியில் அவர் எதையும் பெரிதாக நிகழ்த்தும் முன்னரே அவர் ஒரு பெரும் தலைவராக அடையாளம் காணப்படுகிறார். சம்பரான் சத்தியாகிரகம், கேடா சத்தியாகிரகம், அகமதாபாத் மில் தொழிலாளிகள் வேலை நிறுத்தம் என தொடர் வெற்றிகள் அவரை இந்திய தலைவராக உயர்த்தியது. கோகலே மற்றும் திலகரின் மரணங்கள் ஏற்படுத்திய வெற்றிடத்தை காந்தி நிரப்பினார். சுப்பிரமணிய சிவா எழுதிய திலக தரிசனம் எனும் நாடகம் திலகரின் மரணத்தை ஒட்டி எழுதப்பட்டது. மரணத் தருவாயில் திலகர் பாரத மாதாவை கவனிக்கும் பணியை காந்தியிடம் கையளிப்பதாக அந்த நாடகம் நிறைவுறும். தீவிரவாத – மிதவாத பிரிவினையை காந்தியின் வருகை சமன்படுத்தியது. தீவிர போக்காளர்கள் பலரும் காந்தியின் பாதையை தேர்ந்தார்கள் என்பதை குறியீட்டு ரீதியாக புரிந்து கொள்ளலாம்.

‘தென்னாபிரிக்காவில் சத்தியாகிரகம்’ எழுதப்பட்ட பின்புலத்தை அறிந்துகொள்வது முக்கியமானது. ரவுலட் சட்டம், ஜாலியன்வாலாபாக் ஆகியவற்றுக்கு பின்னர் நாடெங்கிலும் ஒத்துழையாமை போராட்டம் காந்தியின் தலைமையில் நிகழ்ந்தது. செளரி சௌரா நிகழ்விற்கு பொறுப்பேற்று காந்தி போராட்டத்தை திரும்பப் பெறுகிறார். 1922 ஆம் ஆண்டு தேசதுரோக குற்றச்சாட்டின் பேரில் ஆறு ஆண்டுகள் தண்டனையளிக்கப்பட்டு ஏரவாடா சிறையில் அடைக்கப்பட்டார். போராட்டத்தை திரும்பப் பெற்றது கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது. காங்கிரஸ் தலைவர்கள் பலருக்குமே கூட ஏற்புடையதாக இல்லை. பிற்காலத்தில் இடதுசாரி விமர்சகர்கள் காந்தியின் செயல்பாட்டை இந்நிகழ்வு கொண்டே விமர்சிக்கிறார்கள். அவரை ஒரு முதலாளித்துவ கையாள் என ரஜனி பாமி தத் போன்றோர் விமர்சித்தனர். மக்களின் புரட்சியை தடுத்து நிறுத்தினார். அதன் வழி இந்திய உயர்குடிகளுக்கு ஆபத்து ஏற்பட்டு விடும் என அஞ்சி அவர்களின் நலனை காக்கவே காந்தி போராட்டத்தை கைவிடச் செய்தார் என்றார்கள். இந்த அளவிலான மக்கள் போராட்டத்திற்கு மக்கள் தயாரில்லை என்றே காந்தி எண்ணினார். தென்னாப்பிரிக்காவிலும் இதற்கு முந்தைய போராட்டங்களிலும் மக்கள் திரளை தன்னால் கட்டுகோப்பாக வைத்திருக்கமுடிந்தது ஆனால் பயிற்சியற்ற திரள் ஆபத்தானது என்பதை காந்தி உணர்ந்தார். எதிர்த் தரப்புக்கு ஆபத்து என்பதைவிட தன் தரப்பிற்கே அது ஆபத்து, போராட்டத்தின் தார்மீகத்தை குலைப்பதாகும் என்று கருதினார். இன்றும் வெகுமக்கள் திரள் போராட்டத்தில் காந்தியின் இந்த எச்சரிக்கையும் நுண்ணுணர்வும் எத்தனை முக்கியமானது என்பதை உணர முடியும்.

காந்தியின் ஆசிரமங்கள் நாடெங்கும் சத்தியாகிரகிகளின் ராணுவத்தை உருவாக்க முனைந்தது என தரம்பால் குறிப்பிடுகிறார். இதற்கு பின்பான உப்பு சத்தியாகிரகம், தனிநபர் சத்தியாகிரகம் போன்றவை தேர்ந்தெடுத்த/ பயிற்சிபெற்ற சத்தியாகிரகிகளின் வழியே நிகழ்ந்ததே. தென்னாபிரிக்காவிலும் பின்னர் சம்பரானிலும் காந்தியும் இரட்டை இலக்கு அளவிலான சத்தியாகிரகிகளும் சில ஆயிரகணக்கான மக்களை வழிநடத்தினார்கள். காந்தியின் போராட்டமுறை விமர்சனத்திற்கு உள்ளானபோது சத்தியாகிரகத்தின் செயல்பாடு எத்தகையது என்பதை நிறுவ வேண்டியிருந்தது. காந்தி இந்நூலின் சில அத்தியாயங்களை சக சிறைவாசியான இந்துலால் யஞ்னிக்கிடம் சொல்லசொல்ல அவர் எழுதியது. வாராவாரம் வெளிவருகிறது. பின்னர் குடல்வால் அழற்சி அறுவை சிகிச்சை நிகழ்ந்து சிறையிலிருந்து வெளிவந்த பின்னர் மீதி பகுதிகளை எழுதி முடிக்கிறார். இரண்டு தொகுதிகளாக வெளிவந்தது. பின்னர் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்படுகிறது.

‘இந்திய சுயராஜ்யம்’ ஒரு தத்துவ பிரதி மற்றும் வரைவுத் திட்டம் என்றால் ‘தென்னாபிரிக்காவில் சத்தியாகிரகம்’ ஒரு செயல்முறை கையேடு. 1906-14 வரையிலான எட்டாண்டுகால சத்தியாகிரக போராட்டத்தின் வரலாறு. ‘ஒரு படைக்குத் தலைமையேற்று நடத்தும் தளபதிக்குத்தான் ஒவ்வொரு நகர்வுகளின் நோக்கங்களைப் பற்றியும் நன்கு தெரியும்.’ என முன்னுரையில் எழுதுகிறார். ஒருவகையில் சத்தியாகிரகத்தை எப்படி நடத்துவது என எனக்குத் தெரியும், நம்பிக்கை கொள்ளுங்கள் என சொல்வதற்கு ஈடாகும். ஜீன் ஷார்ப் காந்திய வழிமுறையை ‘வன்முறையற்ற போர்’ என குறிப்பிடுகிறார். காந்தியை வன்முறையற்ற போர் முறைகளை வளர்த்தெடுத்த ஆய்வாளர் என்றே ஷார்ப் அடையாளம் காண்கிறார். காந்தியுமே கோழைத்தனத்தில் அகிம்சையை தேர்வதை எதிர்த்தார். அதைவிட துணிவான வன்முறை மேல் என்றார். போர்களுக்கு ஆட்களை திரட்டியபோது அவர் இந்த தர்க்கத்தையே முன்வைத்தார். காந்தியின் படைத்தளபதி எனும் பயன்பாடு மிகுந்த கவனத்திற்குரியது. ஒரு வெற்றிகரமான படைத்தளபதியின் நாட்குறிப்பு மற்றும் போர் வியூகங்களின் தொகை என இந்நூலை வரையறை செய்ய முடியும். ‘சத்திய சோதனையின்’ கூறுமுறையில் இருந்து இந்நூல் வேறுபடுவது இங்குதான். சத்திய சோதனையில் காந்தி போர்வீரராக அல்ல ஒரு ஆன்ம சாதகராகவே தன்னை வெளிப்படுத்துகிறார். தந்தை அல்லது ஆசிரியனின் இடத்தையும் அவ்வப்போது எடுத்துக்கொள்கிறார். இந்திய சுயராஜ்ஜியத்தை பொறுத்தவரையில் அதன் வடிவம் ஒரு புதிய விஷயத்தை உரையாடல் வழி விளக்க எதுவாக அமைக்கப்பட்டுள்ளது என்பதை கவனிக்க வேண்டும். இம்மூன்று நூல்களின் கூறுமுறை வழியே ஒரு பயணம் நிகழ்ந்திருப்பதை உய்த்துணர முடியும். இதழ் ஆசிரியர் வாசகருக்கு புரிய வைப்பதிலிருந்து போர்ப்படை தளபதி தனது வெற்றி வியூகங்களை பகிர்ந்து கொள்ளும் வடிவத்தை அடைந்து, ஒரு தந்தை அல்லது ஆசான் தனது ஆன்மீக தேடலையும் நெருக்கடிகளையும் மாணவர்களுக்கு முன் பகிரும் இடத்தை அடைகிறது. ஒரு சத்தியாகிரக போராட்டம் எப்படி நடத்த வேண்டும்? சத்தியாகிரகியின் இயல்புகள் என்ன? அவனுடைய வழிமுறைகள் என்ன? போன்ற கேள்விகளை இந்நூல் அனுபவங்களின் வழியாக எதிர்கொள்கிறது. அரசின் இயல்பு குறித்தும் மக்களின் இயல்புகள் குறித்தும் கூர்மையான அவதானிப்புகள் கொண்ட நூல் இது. இன்று மக்கள் போராட்டத்தை வழிநடத்த வேண்டும் என விழைபவர்கள் கூட வாசிக்க வேண்டிய நூல் என சொல்வேன். காந்தியின் ஆகப்பெரும் கொடை சத்தியாகிரகமே. வன்முறைக்கும் வரையறையற்ற அதிகாரத்திற்கும் எதிராக சத்தியாகிரகம் அளவிற்கு எளியமக்களுக்கு உதவும் வேறோர் ஆயுதம் கண்டுபடிக்கப்படவில்லை.

ஒரு வரலாற்று நூலுக்கு உரிய தோரணையுடன் நூல் தொடங்குகிறது. தென்னாபிரிக்காவின் நிலவியல், சமூக அடுக்குகள் என ஒவ்வொன்றாக அறிமுகப்படுத்துகிறார். போயர்களை பற்றி சொல்லும்போது அவர்களை மதப்பற்றுடைய கிறிஸ்துவர்கள் என்கிறார். மற்றுமொரு சுவாரசியமான அவதானிப்பை முன்வைக்கிறார் “ஆனால் அவர்களுக்குப் ‘புதிய ஏற்பாட்டில்’ நம்பிக்கை இருப்பதாகச் சொல்லமுடியாது.” காந்திக்கு புதிய ஏற்பாட்டின் மீது மிகுந்த ஈடுபாடு உண்டு. குறிப்பாக மலைப்பிரசங்கம் அவருக்கு மிகவும் நெருக்கமானது. புதிய ஏற்பாட்டை சிலகாலம் மாணவர்களுக்கு தொடர் வகுப்புக்கள் வழியாக போதித்துள்ளார். போயர்களின் ஒடுக்குமுறைக்கு அவர்களுடைய இந்த இயல்பும் ஒரு காரணம் என காந்தி சுட்டிக்காட்டுவதாக தோன்றியது. இந்தியர்கள் சிலர் ட்ரான்ஸ்வாளின் ஜனாதிபதி க்ரூகரை சந்தித்து தங்கள் குறைகளை முறையிட்டபோது அவர் நடந்துகொண்டவிதத்தைப் பற்றி காந்தி எழுதுகிறார். அவர்களை வீட்டிற்குள் அனுமதிக்காமல் வெளிமுற்றத்திலேயே நிற்கவைத்து அவர்கள் சொன்னதை கேட்டபின் “நீங்கள் இஸ்மெயிலின் வம்சாவளியினர். ஆகவே நீங்கள் ஈசாவின் வம்சாவளியினருக்கு அடிமைகளாக சேவை செய்யத்தான் பிறந்திருக்கிறீர்கள். ஈசாவின் வம்சாவளியினரான நாங்கள் உங்களுக்கு சமத்துவம், சம உரிமை என்றெல்லாம் கொடுக்க முடியாது. எனவே நாங்கள் கொடுக்கும் உரிமைகளை வைத்துக்கொண்டு திருப்தி பட்டுக்கொள்ளுங்கள்” என பதில் அளித்துள்ளார். விவிலியத்தின் ஒரு கதை காலனியாதிக்கத்திற்கான நியாயத்தை எப்படி வழங்கியது என்பதை அறிய வியப்பாக இருக்கிறது. இந்த சிந்தனை தரப்பிலிருந்தே “வெள்ளையரின் பளு” போன்ற கருத்தாக்கங்கள் உருவாகியிருக்க வேண்டும். காந்தி தென்னாபிரிக்க இந்தியர்களின் நிலைமையை “பஞ்சமர்களுடன்” ஒப்பிடுகிறார். இந்தியாவில் அவர்கள் எப்படி நடத்தப்பட்டனரோ அப்படி தென்னாப்பிரிக்க ஐரோப்பியர்களால் மொத்த இந்திய சமூகமும் நடத்தப்பட்டது. பிறகு இந்தியர்களின் நிலை, அவர்களின் சிக்கல், அதை சீர்செய்ய அவர்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகள் என செல்கிறது. நேட்டால் காங்கிரசுக்கும் இந்திய தேசிய காங்கிரசுக்கும் இடையிலான வேறுபாடுகளை பற்றி காந்தி “நேட்டால் காங்கிரஸ் வருடம் முழுவதும் வேலை செய்கிறது. மூன்று பவுண்டுக்குக் குறையாமல் ஆண்டுச் சந்தா கொடுப்பவர்கள் எல்லோரும் உறுப்பினராக ஏற்றுக்கொள்ளப்பட்டார்கள்.” என எழுதுகிறார். இதில் காங்கிரசின் மீதான விமர்சனத்தையும் வெளிபடுத்தி,அதைவிட துடிப்பான அமைப்பை ஏற்படுத்திய பெருமையும் புலப்படுகிறது. புறவய வரலாறை சொல்லத் தொடங்கும் காந்தி பின்னர் ஒருவகையான சுய சரிதையாகவே எழுதத் தொடங்குகிறார். இயன்றவரை போராட்டம் சார்ந்த குவிமையத்தை சிதைக்காமல் புத்தகத்தை எழுதி முடிக்கிறார். ‘சத்திய சோதனைக்கும்; ‘தென்னாபிரிக்காவில் சத்தியாகிரகத்திற்கும்’ பொதுவான அத்தியாயங்கள் பல உள்ளன. சத்திய சோதனையின் இடைவெளிகளை நிரப்பும் வகையிலும் சில அத்தியாயங்கள் உள்ளன.

காந்தி சிந்தனைகளின் மனிதர். அவருக்கு புனைவுகளில் பெரிய ஈடுபாடு இருந்ததாக தெரியவில்லை. அவருடைய வாசிப்பில் நானறிந்தவரை வெகு சில புனைவுகளே இருந்துள்ளன. ஆலிவ் ஷ்ரைனரின் ‘ட்ரீம்ஸ்’ நாவலை பற்றி இந்நூலில் குறிப்பிடுகிறார். ஆனால் காந்தியின் சுயசரிதை எழுத்துக்கள் புனைவு எழுத்தாளனுக்கு பல தூண்டுதல்களை அளிப்பவை. நுட்பமான மனப்போக்குகளை காந்தி பதிவுசெய்கிறார். ‘சத்திய சோதனையை’ ஒரு மகத்தான யதார்த்த நாவலாக வாசிக்க முடியும். தென்னாப்பிரிக்காவில் சத்தியாகிரகம் நூலிலும் நாடகீய தருணங்களுக்கு பஞ்சமில்லை. காந்தி இந்தியா சென்றுவிட்டு குடும்பத்தை அழைத்துக்கொண்டு தென்னாப்பிரிக்கா திரும்புகையில் தாக்கப்படுவது மிகவும் உணர்ச்சிபூர்வமான இடம். நேரடி வன்முறையை காந்தி தென்னாப்பிரிக்காவில் இருமுறை எதிர்கொள்கிறார். இருமுறையும் கடுமையாக வெறுத்தவர்கள் அவரை தாக்க சூழ்ந்தனர். ஆனால் காந்தி அவர்கள் மீது புகார் அளிக்க ஒப்புக்கொள்ளவில்லை. ஆங்கிலேய காவலதிகாரி அலெக்சாண்டர் காந்தியை பார்சி ருஸ்தம்ஜியின் வீட்டிலிருந்து காவலராக வேடம் அணிவித்து கூட்டத்திடமிருந்து பிடிபடாமல் தப்புவிக்கிறார். கூட்டம் காந்தியை அடித்துக்கொண்டிருந்தபோது திருமதி அலெக்சாண்டரே காந்தியை காக்கிறார். இரண்டாவதுமுறை இந்தியர்களால தாக்கப்பட்டார். மீர் ஆலம் எனும் பத்தானியர் காந்தியின் கட்சிக்காரர். காந்தி விரல் ரேகைகளை பதியச் செல்லும்போது அச்செயலை கண்டித்து அவரை தாக்குகிறார். தம்பி நாயுடுவே காந்தியை காத்து நிற்கிறார். டோக் தம்பதியினர் காந்தியின் உடல்நிலையை சீராக்க துணையிருந்தார்கள். காந்தி இரு நேரடி வன்முறை சம்பவங்களில் இருந்தும் நம்பிக்கை இழக்காமல், கசப்பின்றி மீண்டு வந்தார். மற்றுமொருமுறை பையில் கைத்துப்பாக்கியுடன் காந்தியின் கூடத்தில் ஒருவர் கலந்துகொண்டு பெரும் சிக்கல் ஆனது.

அபார புனைவுத் தருணங்களால் நிரம்பியவை இந்நூல். போயர் போர் பற்றிய அத்தியாயத்தில் பார்பு சிங் பற்றிய கதையை சொல்கிறார். அவர் ஒரு உயர்ந்தமரத்தின் உச்சியில் அமர்ந்து போயர்களின் பீரங்கியை கண்காணிப்பார். அவர்கள் தொலைவிலிருந்து பீரங்கியால் சுட்டால் குண்டு வருவதற்கு ஓரிரு நிமிடங்கள் ஆகும். அதற்கு முன் எச்சரிக்கை செய்தால் பதுங்கிக்கொண்டு தப்பித்துவிடலாம். ஒப்பந்த கூலியான பார்பு சிங் இந்த ஆபத்தான வேலையை செய்தார். பீரங்கி வெளிச்சத்தை வெகு தொலைவில் கண்டவுடன் அவர் ஒரு மணியை ஒலிப்பார். அதை கேட்டு மக்கள் சுதாரித்துக்கொண்டு பதுங்குவார்கள். லேடி ஸ்மித் எனும் இடத்தின் அதிகாரி சிங் ஒருமுறை கூட கவனம் பிசகவில்லை என பாராட்டினார் என்கிறார். லூத்தவன் எனும் முதியவருக்கு இழுப்பு நோய்க்கு இயற்கை சிகிச்சை அளிக்கிறார் காந்தி. ஆனால் அவர் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கவில்லை. நள்ளிரவில் விழித்திருந்து அவர் அறிவுறுத்தலை மீறி புகைபிடிப்பதை கண்டு கொள்கிறார். லூத்தவன் வெடித்து அழுது காந்தியிடம் மன்னிப்பு கோருகிறார். காலேன்பாக் அகிம்சையால் ஈர்க்கப்பட்டு ஒரு பாம்பை டால்ஸ்டாய் பண்ணையில் வளர்க்கிறார். காந்தி பாம்பை கூண்டில் அடைத்து வளர்ப்பதை பலவீனம் என்றே கருதுகிறார். அந்த உயிரினம் உங்களுடைய மெய்யான அன்பை புரிந்து கொள்ளாது என்கிறார். பிறகு ஒருநாள் அந்த பாம்பு கூண்டை விட்டு வெளியேறியபோது அனைவரும் நிம்மதி அடைகிறார்கள். ஆசிரமத்தில் சிறுவர் சிறுமிகளை ஒன்றாக சுனையில் குளிக்க அனுமதிக்கிறார். ஆனால் அதில் ஒழுக்கக்கேடு நேர்ந்து விடுகிறது. அதற்காக காந்தி கடுமையாக வருந்தி உண்ணாவிரதம் இருக்கிறார். இந்த நூலில் அச்ச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் பெயர்கள் இல்லை. ஆனால் அது காந்தியின் மகன் மணிலால் காந்தியும் காந்தியின் நெருங்கிய நண்பரான டாக்டர் பிரனஜீவன் மேத்தாவின் மகள் ஜெய்க்குவாரும் தான் என்பதை குகா குறிப்பிடுகிறார். பெண்களுடைய தலைமுடியை காந்தியே ஒட்ட வெட்டிவிடுகிறார். அதற்காக அவர்களுடைய சம்மதத்தையும் பெறுகிறார். இறுதி நடைபயணத்தின் போது இரண்டு பெண்களின் இளம் குழந்தைகள் இறந்தபோயின. ஒன்று குளிரிலும் மற்றொன்று கைத்தவறி பாலத்திலும் விழுந்து மரித்தன. ஆனால் அவர்களோ “இறந்து போனவர்களுக்காக என்கக்கூடாது நாம் எவ்வளவு அழுதாலும் அவர்கள் திரும்பி வரப்போவதில்லை. உயிருள்ளவர்களுக்காகத்தான் நாம் உழைக்க வேண்டும்” என்று சொல்கிறார். பீனிக்ஸ் மற்றும் டால்ஸ்டாய் பண்ணையில் பல்வேறு மத மற்றும் சாதியை சார்ந்தவர்கள் ஒன்றாக வசிக்கிறார்கள். சத்தியாகிரகிகளின் குடும்பத்தை பராமரிப்பதே காந்தியின் திட்டம். பீனிக்ஸ் ஆசிரம வாழ்வின் தொடக்கம் எனகூறலாம். சத்தியாகிரகம் உருவானதற்கு பீனிக்ஸ் வாழ்க்கை முக்கிய காரணம். டால்ஸ்டாய் பண்ணை கிட்டத்தட்ட ஒரு சத்தியாகிரக ஆசிரமமே. காந்தியின் ஆசிரமங்கள் நகரத்தின் மத்தியில் இல்லாமல் அதேவேளை நகரத்தில் இருந்து வெகு தொலைவிலும் இல்லாத இடங்களிலேயே அமைக்கப்பட்டன. டால்ஸ்டாய் பண்ணை சத்தியாகிரகத்திற்கு காந்தி மற்றும் சகாக்களை தயார் செய்தது. சத்தியாகிரகிகளுக்கு தேவையான மனத் திண்மையை ஆசிரமவாழ்வே அளிக்க முடியும் எனும் நம்பிக்கையை அவருக்கு அதுவே அளித்தது. அங்கே அவர்களோடு கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் சேர்ந்து வாழ்ந்தபோது அவர்களுக்கு மாமிச உணவு சமைப்பது மற்றும் உண்பது பற்றி காந்திக்கு ஏற்பட்டிருந்த தெளிவு அவருடைய உள்ளடக்கும் அரசியலுக்கு ஒரு செவ்வியல் உதாரணம். அவர்களுடைய வழக்கத்தை மதித்து ஆசிரம கட்டுபாடான சைவ உணவை தளர்த்தி அவர்கள் விரும்பினால் மாட்டுக்கறி உட்பட மாமிச உணவுகளை உண்ணலாம் என சொல்கிறார். ஆனால் அவர்கள் யாரும் அதை தேர்ந்தெடுக்கவில்லை.

காந்தி இந்நூலில் சில ஆளுமைகளை அறிமுகப்படுத்துகிறார். சில வரிகளில் அவர்களுடைய தனித்தன்மையை பதிய வைத்துவிடுகிறார். சைமண்ட்ஸ் எனும் நண்பரை பற்றி சில நினைவுகளை பகிர்கிறார். பம்பாயில் ப்ளேக் தாக்கியபோது அவர் ஆற்றிய பணியை, காந்தி இங்கிலாந்தில் இருந்தபோது அவர் செய்த உதவிகளை சொல்கிறார். சேவை மனமும், எவ்வித பேதமும் பாராட்டாத மனம் கொண்டவர் ஆனால் முப்பது வயதிலேயே மறித்து விடுகிறார். காந்தியின் எழுத்துக்களில் மெய்யான துயரம் தோய்கிறது. கச்சோலியாவிற்கு என்றே ஒரு அத்தியாயத்தை ஒதுக்கியுள்ளார். இந்த நூலின் நாயகரே அவர்தான் என புகழ்கிறார். அவருடைய வாழ்க்கை கதை ஒரு நாவலுக்கு உரியது. அவருடைய இளவயது மகன் காந்தியின் பண்ணைக்கு அவர்களோடு சேர்ந்து வளர அனுப்பப்படுகிறார். அந்த சிறுவன் இளமையிலேயே இறந்து போகிறான். ஐரோப்பிய வணிகர்கள் கச்சொலியாவை முடக்க திவால் நோட்டீஸ் அனுப்புகிறார்கள். அத்தனை இடர்பாடுகளையும் மீறி உறுதியுடன் நிற்கிறார். அதேப்போல் சத்தியாகிரகத்தின் முதல் கைதி பண்டிட் ராம் சுந்தர் பற்றிய சித்திரமும் நுண்மையானது. அவர் ஒரு போலி என்பதை சொல்கிறார். ஆனால் அதற்காக அவரை குற்றவாளியாக ஆக்கக்கூடாது என வாதிடுகிறார். “நீங்கள் ராம்சுந்தரைக் குற்றவாளியாக்கி விமர்சிக்க வேண்டாம். ஏனென்றால் எல்லா மனிதர்களிடமும் குறைகள் இருக்கின்றன. ஒருவரிடம் மற்றவர்களைவிட அதிகமான குறைகள் காணப்பட்டால் மக்கள் அவரைத் திட்டித் தீர்ப்பது வழக்கம். ஆனால் அது நியாமல்ல. ராம் சுந்தர் திட்டமிட்டே பலவீனமாக நடந்துகொள்ளவில்லை. மனிதன் தன் சுபாவத்தை மாற்றலாம், கட்டுப்படுத்திக்கொள்ளலாம். ஆனால் அதை முற்றிலுமாக அழிக்க முடியாது. கடவுள் அவனுக்கு அவ்வளவு சுதந்திரம் கொடுக்கவில்லை. “தம்பி நாயுடுவை பற்றிய சித்திரமும் வலுவானது. அவசரபுத்தியும் கோபமும் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் கச்கோலியாவிற்கு பின் அவர் தலைவர் ஆகியிருப்பார்” என்கிறார். ஜாக் முதலி எனும் தமிழரைப் பற்றி சொல்கிறார். அவர் ஒரு ஈடிணையற்ற குத்துச்சண்டை வீரர். காந்திக்கு பாதுகாவலராக நேட்டாலில் இருந்தவர். பி.கே நாயுடு, ஜோசப் ராயப்பன், சொராப்ஜி அட்ஜானியா, நாகப்பன், வள்ளியம்மை என பலருடைய தியாக கதை நம்மை வெகுவாக தொந்தரவு செய்பவை. காந்தியின் தென்னாபிரிக்கா சகாக்கள் பலரும் தமிழர்களே. பெண்களை வெகுமக்கள் போராட்ட களத்தில் பயன்படுத்துவதை குறித்து காந்திக்கு நம்பிக்கை ஏற்படுத்தியது தென்னாப்பிரிக்க போராட்ட களமே.

காந்தியும் பார்சி ருஸ்தம்ஜி, கச்சொலியா போன்ற இந்தியர்களின் செயல்பாடுகளை புரிந்து கொள்ளமுடிகிறது. தம்பி நாயடு போன்றோர் இந்தியாவை அறிந்ததே இல்லை. மொரிஷியசில் பிறந்தவர் ஆனாலும் நிற ரீதியான ஒதுக்கலுக்கு உள்ளானவர் என்பதால் அவர்களுடைய செயல்பாடுகளையும் ஏற்க முடிகிறது. உண்மையில் இந்திய போராட்டத்தின் பொருட்டு காலேன்பாக், போலாக் போன்றோர் சிறைசென்றார்கள் என்பது பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஆல்பர்ட் வெஸ்ட், சொஞ்சா ஸ்லேசின் போன்றவர்கள் இந்திய போராட்டத்தில் ஆற்றிய பங்களிப்பு அளப்பறியாதது. இவர்கள் நால்வரையும் அவர்களுடைய பங்களிப்புகளையும் காந்தி நன்கு அங்கீகரிக்கிறார். காலேன்பாக் ஒரு கொண்டாட்டவாதி. காந்தியே சொல்வதுபோல் அவரிடமிருந்த பணத்தைக் கொண்டு வாழ்வின் எல்லா இன்பங்களையும் அனுபவிக்கவே அவர் விரும்பினார். ஆனால் காந்தியின் தாக்கத்தால் அவற்றை கைவிட்டு எளிய வாழ்வை வாழ்கிறார். போலாக் காந்தியின் செய்தியுடன் இந்தியா முழுக்க சுற்றி வந்தார். சத்தியாகிரகத்தின் ஆற்றல் என்பது அதன் உண்மைத்தன்மையின் காரணமாக எல்லாத் தரப்பையும் ஈர்ப்பதே. தங்களுக்கு எவ்விதத்திலும் நேரடியாக தொடர்பற்ற சிக்கல்களிலும் அறத்தை நாடி செல்வதே.

இந்திய சமூகத்தின் பலவீனம் என எவை கருதப்பட்டதோ அவற்றையே அதன் பலமாக மாற்றுவது சத்தியாகிரகத்தின் வழிமுறை என சொல்லலாம்.  “தன்னைச் சுற்றிலும் முழு இருள் சூழ்ந்திருக்கும் நேரத்தில், வேறு எந்த உதவியும் இல்லாத நிலையில்தான் ஒரு சத்தியாகிரகிக்கு கடவுளின் உதவி கிடைக்கும். தன் காலடியில் கிடக்கும் தூசிக்குச் சமமாகத் தன்னை கருதி அவ்வளவு பணிவுடன் எப்போது நடந்துகொள்கிறானோ அப்போதுதான் கடவுள் உதவி செய்வார். பலவீனமானவர்களுக்கும் நிராதரவாக இருப்பவர்களுக்கும் மட்டுமே இறையருள் கிடைக்கும்.” ஏறத்தாழ கிறிஸ்து தோளில் சுமக்கும் வழிதவறிய ஆட்டுக்குட்டியின் அதே விவரிப்புதான். பலவீனர்களுக்கு இறையருள் கிடைக்கும் என சொல்வதன் வழியாக அதுகுறித்த குற்ற உணர்வை போக்குகிறார். சத்தியாகிரகத்தில் வெறுப்பிற்கு இடமில்லை. சத்தியாகிரகிகளின் முன் காந்தி ஆற்றும் உரையின் ஒரு பகுதி இந்நூலில் உள்ளது. ஏறத்தாழ சத்தியாகிரகத்தில் ஈடுபடுத்துபவரை அச்சுறுத்துகிறார் என்றே சொல்ல வேண்டும். அனைத்து எச்சரிக்கைகளையும் மீறியே அவர்கள் உற்சாகமாக செயல்பட்டார்கள். ஆயுதங்களை கையில் எடுப்பது வெகு மக்களாதரவை இல்லாமல் ஆக்கிவிடும் என்கிறார். பேசிவ ரெசிஸ்டன்ஸ் மற்றும் சத்தியாகிரகத்திற்கும் இடையிலான வேறுபாடை காந்தி விளக்கும் அத்தியாயம் முக்கியமானது. சத்தியாகிரகம் நாம் நேசிப்பவர்களுக்கு எதிராகவும் கூட செயல்பட முடியும் என்கிறார். சத்தியாகிரகி என்பவன் தன்னுடைய அச்சத்திற்கு எதிராக போராடுபவனே. எத்தனை முறை எதிரி ஏமாற்றினாலும் திரும்பத்திரும்ப நம்புவதே அவனுடைய இயல்பு. சத்தியாகிரகத்தில் எல்லோரும் தலைவர்களே எல்லோரும் தொண்டர்களே. சத்தியாகிரகத்தில் அதிருப்தி செயற்கையான செயலின்மையால் விளைந்த அமைதியை விட மேலானது. அதிருப்தி உண்மை நிலையை உணர்வதால் ஏற்படுவது. அதை மாற்றும் முனைப்பு எழுவதால் நேர்வது. அத்தகைய அதிருப்தியை காந்தி ஆக்கபூர்வமானது என்றே கருதுகிறார்.

காந்தி ஆபிரிக்கர்களைக் குறித்து எழுதும்போது அவர்களில் ஜுலூக்களே மிகவும் அழகானவர்கள் என சொல்லி அழகு குறித்த பொது வரையறையை விமர்சிக்கிறார். மேலும் ‘நாம் நினைப்பதுபோல் அவர்கள் அவ்வளவு நாகரீகமற்றவர்கள் இல்லை. நமது ஆணவம்தான் நீக்ரோக்களை காட்டுமிராண்டிகள் என்று நினைக்கச் செய்கிறது’ என எழுதுகிறார். ஆபிரிக்க மக்களின் வாழ்க்கைச் சித்திரம் ஒன்றையும் இந்நூலில் தெளிவாக அளிக்கிறார். காந்தியின் எழுத்துக்களுக்கு தேவையான இடங்களில் காட்சித்தன்மையை கொணரும் ஆற்றல் உள்ளது. அதற்கு இப்பகுதிகள் சான்று. ஆஜானுபாகுவான ஆபிரிக்கர்கள் ஐரோப்பிய குழந்தையை பார்த்தால் கூட பயந்துவிடுவார்கள். துப்பாக்கி என்பதை அவர்கள் ஐரோப்பியர்களிடமே எதிர்கொள்கிறார்கள். இந்திய வணிகர்களுடன் ஜுலூக்களுக்கு நல்ல தொடர்பு இருந்தது. அதன் காரணமாக இந்திய வணிகர்கள் ஆற்றல் மிகுந்த செல்வந்தர்களாக வளர்ந்தார்கள். இது ஐரோப்பியர்களுக்கு எரிச்சலை அளித்தது. இந்தியர்களை ஒடுக்கும் சட்டத்தின் பின்புலம் இதுவே.

சத்தியாகிரகத்தில் அடிப்படை கொள்கைக்கு பங்கம் ஏற்படாத அளவில் சமரசத்திற்கு இடமுண்டு. எனினும் இப்போது இந்நூலை வாசிக்கும்போது காந்தியின் சில நிலைப்பாடுகள் புரிந்துகொள்ள வினோதமானதாக தோன்றக்கூடும். போயர் போரில் நியாயம் போயர்களின் பக்கமே உள்ளதாக எண்ணுகிறார். அதேப்போல் ஜூலூ கலகத்தின் போதும் அவருடைய உணர்வுகள் பூர்வ குடிகளின் பக்கமே இருந்தது. எனினும் ஒரு விசுவாசமிக்க பிரிட்டிஷ் இந்திய குடிமகனாக அவர் ஆங்கிலேயர்களின் தரப்பிற்கே படைக்கு ஆள் சேர்த்தார். அவர்களுக்கு உதவச் சென்றார். “ஆனால் நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் அரசின் எல்லா விஷயங்களிலும் தன்னுடைய அபிப்பிராயத்தை திணிக்க நினைக்கக்கூடாது. அரசாங்கம் எல்லா நேரங்களிலும் சரியாக நடந்துகொள்ளாமல் இருக்கலாம். ஆனாலும் குடிமக்கள் அந்த அரசாங்கத்தின் கீழிருக்கும்வரை, அதோடு ஒத்துழைக்க வேண்டும். அதுவரை அதன் செயல்பாடுகளுக்கு ஆதரவளிப்பது அவருடைய கடமையாகும்.” இவ்வரிகளை காந்தியினுடைய அன்றைய நம்பிக்கை மற்றும் செயல்பாடுகளுடன் சேர்த்தே புரிந்துகொள்ள முடியும். காந்தி 1899 ஆம் ஆண்டு இந்த வாதத்தை முன்வைத்தார். இந்த நூலை எழுதும்போது இப்போதும் அது சரி என்றே நம்புகிறேன் என சொல்கிறார். இந்த நிலைப்பாடையும் முந்தைய பகுதியில் உள்ள கடமையாற்றுபவருக்கே உரிமையை கோர தகுதி எனும் நம்பிக்கை அடிப்படையில் புரிந்துகொள்ள முடியும். எனினும் இவ்வரிகள் ஒரு நெருடலை அளித்தபடிதான் இருக்கிறது. காந்தியே சட்டங்கள் உருவாகும் விதம் குறித்து இதே நூலில் காட்டமாக விமர்சிக்கிறார் “பார்க்கப்போனால் அதிகாரத்தில் இருப்பவர்களுடைய சௌகரியங்கள் தான் சட்டமாக மாறி விடுகின்றன. எல்லா அரசாங்கங்களுமே இப்படியானவைதான்.” மற்றொரு இடத்தில் “அரசாங்கம் ஒரு நடவடிக்கை எடுக்க விரும்பினால் அதுவே அதை நடத்திக்காட்டப் போதுமான காரணமாகவும் அமைந்துவிடுகிறது” என்கிறார். வெறும் உதிரி மேற்கோள்கள் வழியாக மட்டும் காந்தியை அணுகினால் அவரை எளிதில் எதிர்மறை ஆளுமையாக கட்டமைத்துவிடமுடியும். காலப்பொருத்தம், காந்தியின் செயல்பாடு ஆகியவற்றுடன் சேர்த்தே காந்தியை மதிப்பிடவும் புரிந்துகொள்ளவும் இயலும்.

இந்த நூலில் சத்தியாகிரகியின் இயல்பை பற்றி சொல்லும்போது இப்படியொரு வரி வருகிறது “சத்தியத்தை பின்பற்றும்போதே மரணமடைவதைவிட சிறந்தது வேறு எதுவும் இருக்கமுடியாது.” அவருடைய வாழ்வு அவர் விரும்பிய வகையிலேயே நிறைவடைந்தது என்பது ஒருபக்கம் அமைதியையும் மறுபக்கம் கலக்கத்தையும் அளிக்கிறது.

– தொடரும்…

பிற படைப்புகள்

Leave a Comment