நேசமித்ரன் கவிதைகள்

by olaichuvadi

பின்னோக்கிப் பறக்கும்
பறவையைப் போல்
உனக்கு பிடறிக் குறுமயிரில்
குடியிருக்கப் பிடித்திருக்கிறது
நெற்கதிர் கற்றையைப் பற்றுவதுபோல்
கழுத்தைப் பற்றிவிட முடிகிறதென்பாய்

எலும்புகளை எண்ணுகிற பாவனையில்
முதுகெலும்பின் கணுக் கணுவாக வருடி முத்தமிடுகையில்
ஒவ்வோர் பருவத்திலும் என்னுள்
சாகாத கனவுகளை விடுவித்தாய்
நோயுற்ற பறவைகளை
கூண்டோடு எரிப்பது உனக்குத் தெரிந்திருக்கிறது

ஆழாக்கின் பித்தளைப் பூண்
பின் தொடைகளில் உடல் மெலியும்
தோல் வரிகள் என்று நீ பிதற்றியது
நினைவிருக்கிறதா
கர்ணப் புறாவாய் இருதயத்தை
கவிழ்த்துப் பறப்பது என்பதான
கலவிப் பொழுதில்
முழங்கால் தசையை கடிப்பதில்
புட்டமேடுகளில் பற்தடம் பதிப்பதில்
என்ன கிடைக்கிறது உனக்கு
இருபால் புணரியாடா நீ
என்ற என் கேள்வி இதுவரை
காணா புன்னகையை தானியமெறிவதாய்
வீசினாய்

பைத்தியர் விடுதியில் பிறந்தநாள்
உணவு பரிமாறியபின்
உன்னை புணரக் கேட்டேன்
பிறகான சிகரெட்டிடையே
அழுத கண்ணீருக்கு அர்த்தம் கேட்ட போதும்
அதே புருவம் நெளிந்த
வாய்கோணிய புன்னகை

எவ்வளவு உயரப் பறந்தாலும்
வேர்க்காத பறவை அன்பு
சலிக்காத இதயம்

தீயெரித்த கானகத்தில்
பிறிதொரு
மிருகத்தின் பிள்ளைக்கு
பாலூட்டும் மடி
சமம் பேணும் இக்கேண்மை

***

சமாதானம் செய்யப்பட்ட குழந்தை விரல்சூப்பி உறங்குவதாய்
காற்று பிச்சி மொட்டுகளில்

ஒரு சிறிய நீரூற்று மணலை
வருடும் விரல்களால்
நீ தலைகோதினாய்

மிருது குறைவான
நிலவொளியில்
தெரியும் நட்சத்திரங்களின் ஒளி
அலைகளில் தவளைக்கல்
ஆடிக் கொண்டிருக்கிறது

இதுவரை உலகு புகட்டிய
அத்தனை நஞ்சையும்
புரண்டு போக்கும் தாவரம்
உன் சொற்கள்

புதையலுக்கு மேல்
நட்டுவைத்த மரம்
பூத்திருப்பதாய்
என் பாதை துலக்கமுற்றுவிட்டது

அருவி நடந்து நடந்து பாறையில்
நிறத் தையலிட்டிருக்கிறது
ஆயுள் ரேகைகளை முடிச்சிட்ட
உள்ளங்கை கோர்ப்பாய்

அதே மல்பெரித் தாவரத்தின்
மேல் பட்டாம்பூச்சி அமர்ந்திருப்பதாய்
ஓர் பிறவி எடுத்து மீண்டும்
உன்னிடமே உயிர்த்து நிற்கிறதென்
வாழ்வு

***

மழையளே
ஆம் புரிகிறது
உன் அன்பின் கோள்பாதைகளை எனது இன்மை சிதைத்திருக்கிறது .
போதாமைகள் நம்மைத் தத்தெடுக்கும் காலங்களில்
பேய்கள் நீராடும் தீச்சுனைகளில் நீர் அருந்த நேர்கிறது.
பூமிக்கு மருத்தோன்றி
இட்டாற் போல்
நம் நிழல்கள் சமைந்தாற் போல்
நிலைக்கப் போகும் நம் சந்திப்பில் கோள்களின் வரிசை மாறக்கூடும் .
தார்க்குச்சித் துளைக்காத உடலில்
உரித்த தோலில் செய்த பறை முழங்கி
நம் அணைப்பை வானம் விழாக் கொண்டாடும் நாள் தொலைவில்லை.
காத்திருப்பின் பாரம் சுமக்கும் சும்மாடு
கண்ணீரை உறைய வைத்த பனிக்கட்டியாய் இருக்கிறது .
ஒரே மரத்தில் உறங்கும் சிறுத்தை தன் இரைகளை
இழுத்துச் சென்று இழுத்துச் சென்று உருவான உதிரக்கோடுகளுள்ள பாதையாய்
காதலின் பாதை இருக்கிறது.
மின்னலின் கிளைகள் வளைத்து வட்டமாக்கி செய்த கிரீடமாய்
இறுதியில் குவியும் முத்தத்தின் உதடுகளை அது பரிசளிக்கிறது.
ஆலகால விஷம் தடவிய காற்றுக்கு முறிமருந்து சுரக்கும்
வெந்நீர் ஊற்றாய் ஏன் இருக்கிறது
உன்
உயிர்த்தளத்தின் வாசனை.
இனி எந்த மரமும் சிலுவைக்கு அறுக்கப்படாத நாளில்
இனி எந்த உலோகமும் சூலத்திற்கு அகழப்டாத நாளில்
தொழுவதற்கு எந்த மிருகமும்
மனிதனுக்குப் பிரதியாய் கொல்லப்படாத நாளில்
எஞ்சி நிற்கும் அன்பாய்
உயிர் திரட்டி சொல்லும் சொல்
உனக்கான என் சொல் எஞ்சி நிற்கிறது.
நிறைவுறாத கனவுகளுக்கு
பேய் என்று பெயரிடும் இந்த பொன்னுலகில்
நாம் பேய்களின் தகப்பனாகவும் நீ பிசாசுகளின் தாயாகவும் மாறி கல்லறைகளுக்கும் முட்டைகளுக்குமான ஓடுகளின் தூரத்தை பிறைத்து தொப்புள்கொடி
தலைச்சுற்றிய பிள்ளைகளை விடுவிப்போம்.
ஊசிகளில் பூக்கோர்த்து சூடும் பெண்களிடையே
நீ பாசிகளிடையே மிதக்கும் பிறையை உதடுகளில் சூடுகிறவள்.
நானோ கருச்சுமக்கும் ஆண் கடற்குதிரையின் தோலில் செய்த இமைகளுடையவன் .
தந்திகள் அறுந்து புதியத் தாவரத்தின் தளிர்களை இசைக்கும் மழையை கருக்கொள்வோம்

***

மோர்ஸ் கோட்-ல் ஒரு காதல் பாடல்

வானிலிருந்து Morse code ல் வெளிச்சத்தின்
காதல் பாடல் கண்ணடித்தபடி
துவங்குகிறது

ரயிலில்
ஜன்னல் கண்ணாடி வழி தோராயமாக
தொடும் வெளிச்சத்தோடு ஒரு
குழந்தை ‘பிஸ்கட் பிஸ்கட் என்ன பிஸ்கட்’ என்றொரு விளையாட்டை
ஆடிக் கொண்டிருக்கிறது

மின்னலின் கிச்சு கிச்சு தாம்பாளம்

புழுதி கர்ணமடித்துப் பழகும்
காற்றாழைக் காட்டில்
இன்று மழையின் தட்டாங்கல்
ஆட்டம்

தெரிந்த விளையாட்டின் எளிய
புதிர்கள்
பொலப் பொலவென உதிர்கின்றன

நல்ல கூடலுக்குப் பின்னான
உரையாடலில்
வாய் பொத்தி சிரிக்கிறது
சீனிக்கல் அரித்து கொணர்ந்திருக்கும்
காட்டோடை

ஞாயிறு பிரார்த்தனை முடிந்த
தேவாலயத்திற்கு தாமதமாய்
வந்த ஒருவன் உணரும்
அமைதியான கூடம் போலிருக்கிறது
பிரதேசம்

சில்வண்டுகள் சிணுங்கும்
புதர்களூடே
உடல்விளக்கோடு புறப்பாடு
கொள்கின்றன மின்மினிகள்

பிற படைப்புகள்

Leave a Comment