ச.துரை கவிதைகள்

by olaichuvadi

 

உப்புவயல்

கிடாய் உப்புமண் சுற்றி வீடு வந்தது
அப்பா தண்ணீர் காட்டினார்
அரக்க பறக்க குடித்த வாயோடு
மீண்டும் உப்பு வயல் போனது
ஒருநாள் கெண்டை மீனுக்குதான்
பெரிய மீசையென பேசிக்கொண்டிருந்தோம்

அப்படியென்றால் எனக்கு இல்லையா
என்றிணைந்த கிடாயை பார்த்து அதிர்ந்தோம்

அப்பா விழித்துக் கொண்டார்
கிடாய் பேசுவதை தாங்க முடியாதவர்
மறுதினமே சந்தைக்கு இழுத்து சென்றார்
விலை போகாத அதே
முற்றிய கிடாயோடு அந்தியில் வந்தார்
தொழுவத்தில் கட்டி கால் அலம்பும் போது
நானும் அலம்ப வேண்டுமென்றது கிடாய்

நீ பேசாதா நீ பேசுவது அபத்தம் என்றார்
எது அபத்தம் பேசுவதா என புரியாத தொணியை காட்டியது கிடாய்
அன்றிரவு யாரும் உறங்கவில்லை
இந்த பேசும் கிடாய் என்ன பாடு படுத்தபோகிறதோ என கலங்கினார்
எல்லோரும் ஆறுதலளித்தோம்

மறுதினம் அவரே வெட்டினார்
இளம் கிடாய் என்றார் சந்தையில்
இல்லை நான் கிழவன் என்றது
முன்சாத்திய கிடாய் தலை
அவர் பேசாதே பேசாதே என கத்தினார்.

சலனம்

கடல் முடங்கிப்படுத்திருந்தது நோயாளியாக
எப்போதாவது தொப்பென்று விழுகிற அலை
இருமல் சப்தத்தை ஒத்திருந்தது அப்படியே
ஆண்டாண்டு கால ரகசியப் பிரகாசத்தை கடல்
இழந்து கொண்டிருக்க அப்போது குடில்களில்
இருந்து ஓடிவந்த ஒன்றிரண்டு சிறுவர்கள்
அதன் மேல் கல்லெறிகிறார்கள்
அது பரலோகத்தில் இருந்து பொழிகிற
மாத்திரைகளை போலிருந்தது.

திணவு

வழக்கம் போலவே
இவ்வாண்டு கோடையிலும்
எனது கை தோல்கள் உரியத்தொடங்கின
பல நேரங்களில் திணவெடுத்தன
சொறியக்கூடாது என்ற மருத்துவர்
அடிக்கடி தோன்றி மறைகிறார்
அவர் எனது சொறியத் தெரிந்த கைகளை
வெட்டி எடுத்திருக்கலாம்
என்னை என் கைகள் தொட்டுவிட கூடாதென்று கவனமாய் இருக்கிறேன்
வெகு அரிய சிறப்புமிக்க கனங்கள்
நிறையவே கிடைக்கின்றன
ஆனால் அனுபவிப்பதில்தான் சிக்கலாய் இருக்கிறது
தோல் முழுக்க சிறுசிறு குன்றுகளை மாதிரி
பரவுகின்றன பருக்கள் அதில் திணவு
ஒரு ஆட்டுக்குட்டியை போல நகருகிறது.

மகிழ்ச்சியான முடிவு

உங்களை நீங்கள்தான்
தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும்
அன்று ரசீதுகளை திருப்பி பெற பல்பொருள் அங்காடிக்கு சென்றேன் 
கடைகாரர் இலவச
இணைப்பு சீட்டொன்றை தீட்டச்சொன்னார்
அதில் எனக்கு கம்பி சுருள்களால்
ஆன பாத்திர தேய்ப்பான் விழுந்தது
அவர் என்னை பெருமையாக பார்த்து
உனக்கிது விழுந்ததில் பெருமகிழ்ச்சி என்றார்
நான் எதுவும் சொல்லவில்லை
அதை அப்படியே தூக்கி வந்து
சமையல் மேஜையின் மேல் வைத்தேன்
அடர்ந்த அந்த வெளீர் கம்பிசுருள்கள்
மெல்லிய உடல்வாகுள்ள
பாம்பு குஞ்சுகளை போலிருக்கிறது
அதனால் எந்த பாத்திரத்தையும் தேய்க்கக் கூடாதென
முடிவெடுத்து விட்டேன்.

   

பிற படைப்புகள்

1 comment

செய்தாலி June 16, 2020 - 2:23 pm

நல்ல கவிதைகள் துரை

Reply

Leave a Comment